வியத்தகு பண்பினில்.... பண்ணிசை வித்தகர்கள்! | மஞ்சரி | Manchery | tamil weekly supplements
வியத்தகு பண்பினில்.... பண்ணிசை வித்தகர்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2011
00:00

மகாராஜபுரம் ஸ்ரீவிஸ்வநாத ஐயர் (1896-1970)
ஸ்ரீ தியாகப் பிரும்மத்தின் பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்று வராளி ராகத்தில் அமைந்த கனகனருசிரா எனும் கீர்த்தனை. இக்கீர்த்தனையை ஒருவரும் தனது சீடருக்குச் சொல்லித் தருவதில்லை. சீடரே தானாகக் கேள்வி ஞானத்தில் இக்கீர்த்தனையைக் கற்றுக்கொண்டால்தான் உண்டு. இகீர்த்தனையை போதித்தால் குரு-சிஷ்ய உறவில் பாதிப்பு ஏற்படும் என்று ஒரு எண்ணம்.
1940 ஆம் ஆண்டிலிருந்துதான் ஸ்ரீ தியாகபிரும்ம மகோத்ஸவத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் எல்லா வித்வான்களுமாகச் சேர்ந்து பாட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த வராளிராகக் கீர்த்தனையை நன்கு அறிந்தவர் மகாராஜபுரம் ஸ்ரீ விஸ்வநாத ஐயர் அவர்கள் ஒருவர்தான். அதனால் அனைத்த வித்வான்களும் அவர் பாணியைப் பின்பற்றியே இக்கீர்த்தனையைப் பாடலானார்கள். அவர் ஆயுட்காலம் வரை அவர்தான் பகுள பஞ்சமி அன்று வித்வான்களின் பஞ்ச ரத்ன கோஷ்டி கானத்தைத் தலைமை வகித்து நடத்தி வந்தார்.
இன்றளவும் அவருடைய பாணியே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
சென்னை, யிலையில் அமர்ந்துள்ள ஸ்ரீதியாகராஜ வித்வத் சமாஜத்திற்கு 1938ஆம் ஆண்டே ஸ்ரீமகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் வித்திட்டார். இப்பணிக்கு முதன்முதலாக ரூ.2500/- அளித்தார். அதன் பிறகு அவர் சென்னையில் வசிக்க ஆரம்பித்த பிறகே இம்முயற்சி பயனளித்தது. இதற்கான நிலம் வாங்கப் பணமளித்து, கட்டிடம் கட்டவும் உதவி செய்து, பூஜைக்குரிய வெள்ளிப் பாத்திரங்களையும் அளித்தார். இறுதிவரை ஸ்ரீதியாகராஜ பகவத் ஸமாஜத்தின் தலைவராகவும் இருந்தார்.

நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை
1940 ஆம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா. டி.என். ராஜரத்தினம் அவர்கள் மூன்று மணி நேரம் கானமழை பொழிந்தார். ஜமீன்தார்கள், தஞ்சை ஜில்லாவில் இருந்த பெரிய மிராசுதாரர்கள், வித்வான்களில் அரியகுடி, மகாராஜபுரம், செம்பை, செம்மங்குடி, ஜிஎன்பி, மதுரை மணி ஐயர், பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை, பாப்பா வெங்கட்ராமைய்யர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை என்று வைரங்கள் ஜொலிக்க, எம்கேடி. மற்றும் என்எஸ்கே. போன்றோர்கள் சபையை அலங்கரித்தனர்.
டி.என்.ஆர். அவர்களின் நாதஸ்வர இசையில் மிகவும் மகிழ்ந்த அவர்களை அனைவரும் அவரை மிகவும் பாராட்டினார்கள். ஆனால் டிஎன்ஆர் தனது நாதஸ்வரத்தை மேடைமீது வைத்துவிட்டு, பந்தலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த ஒரு பக்கிரியைத் துரத்திக் கொண்டு அவரை ஐயா! ஐயா! என்று அழைத்தவாறே ஓடினார். அப்பக்கிரியோ கிழிந்த ஆடையுடன், பிச்சைக்காரர் மாதிரி தோற்றத்துடன் இருந்தார். வேகமாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த அவரை டிஎன்ஆர். அணுகி, ஐயா! எப்படிங்கய்யா இருந்தது? என்று ஆர்வத்துடன் கேட்டார். அப்பக்கிரி சிறிதளவு உதட்டை கசக்கி, தனது தலையை ஆட்டினார். அடுத்த வினாடி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
பட்டாடைகளையும், வைர அணிகளையும் அணிந்திருந்த டிஎன்ஆர் அந்த அரை நிர்வாணப் பக்கிரியை கண்களில் கண்ணீர் மல்கப் பார்த்தவாறு நின்றார். அந்தப் பக்கிரியின் ஆழ்ந்த ரசனைதான் அவருக்கு முக்கியமானதாக இருந்தது. சூழ்ந்திருந்தவர்களிடம் சொன்னார். தோற்றத்தைக் கண்டுமதிப்பிடாதீர்கள்; அவர் ஒரு தீவிர ரசிகர். சாதாரணமாக அவர் ஒரு கச்சேரிக்கும் வருவதில்லை. இன்று எனது நிகழ்ச்சிக்கு வந்து சிறிது தலை அசைப்புடன் அவர் எனது வாசிப்பைக் கேட்டு ரசித்ததே எனக்க சுவர்க்கப் பதவி கிடைத்தாற்போல் இருக்கிறது!.
டிஎன்ஆர் மிகவும் கௌரவம் பாராட்டக் கூடியவர்தான். இருப்பினும் எளிமையான, மென்மையான இதயமும் கொண்டவர் என்பது இந்நிகழ்ச்சியால் விளங்கவில்லையா?

வயலின் மேதை திரு.டி.சௌடய்யா (1894-1967)
டி.சௌடய்யா அவர்களின் குரு திரு கிருஷ்ணப்பா என்பவர். இவரிடம் பயிலுபவர்கள் தினம் 9 அல்லது 10 மணி நேரமாவது சாதகம் செய்ய வேண்டும். ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டாரானால் அதில் ராகம், தாளம், பல்லவி என்று அனைத்தையும் குறைந்தது ஒருவாரமாவது சாதகம் செய்ய வற்புறுத்துவார்.
ஒரு நாள் கரஹரப்ரியா ராகம் பாடச் சொல்லிவிட்டு, எங்கோ வெளியில் சென்றார் கிருஷ்ணப்பா. சிறிது நேரம் கரஹரப்ரியாவை ஆலாபனை செய்த சௌடய்யா, குருநாதர் அருகில் இல்லாத தைரியத்தில் வேறு ஒரு ராகத்தை ஆலாபனை பண்ணிக் கொண்டு இருந்தார்.
குருநாதர் இடையே வந்த விட்டார். "என்ன? கரஹரப்ரியாவை ஆலாபனை செய்து கரைகண்டுவிட்டாயோ? வேறு ராகத்தை இசைத்துக் கொணடு இருக்கிறாய்?' என்று கண்டித்துவிட்டு அப்பால் சென்றார்.
சௌடய்யா மறுபடி கரஹரப்ரியாவைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். அந்த ராகத்தின் சுகானுபவத்தில் மிகவும் லயித்தவராகக் கண்களை மூடிக்கொண்டு தன்னை மறந்து வாசித்தார். அப்போது அங்கே வந்த குருநாதர், சௌடய்யாவின் வாசிப்பில் மிகவும் மகிழ்ந்தவராக, அப்படியே அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார்! பிறகுதான் கண்டித்ததைச் சரிவரப்புரிந்து கொண்டு மிகவும் அருமையாக கரஹரப்ரியா ராகத்தை வாசித்ததாகக் கண்ணீர் மல்க தனது சீடரைப் பாராட்டினார்.
மைக் வராத காலம். பாடகர்களின் குரல்வளமும், பக்கவாத்தியக்காரர்களின் வாசிப்பும் அரங்கத்தின் கடைசி வரிசை வரை கேட்கவேண்டும். இதற்காகத் தனது வயலினில் 4 தந்திகளுக்குப் பதிலாக 7 தந்திகளைப் பயன்படுத்தியவர் சௌடய்யா. அதனால் அவர் வயலின் ஒலி மிகப் பெரிதாகக் கேட்கும்.
கச்சேரி நிகழ்ச்சியில் மிகவும் அருமையாகப்பாடிய அரியக்குடி அவர்களை சௌடய்யா தனது தோளில் தூக்கிக் கொண்டு மேடையிலேயே ஆனந்தக் கூத்தாடத் தொடங்கி விட்டார். பாடகரின் சங்கீதம் மனதைக் கொள்ளை கொள்வதாக இருந்தால் தனது வயலினைக் கீழே வைத்துவிட்டு, கண்களை மூடியவாறே அந்த சங்கீதானந்தத்தில் ஆழ்ந்து விடுவார் சௌடய்யா.
சௌடய்யா சினிமாப்படம் எடுக்கத் தொடங்கி நஷ்டமடைந்தார். தனது காரைக்கூட விற்க நேர்ந்தது. அப்போது சொன்னார் "ஒவ்வொருவர் சினிமா எடுத்துக் கார் வாங்குவார்கள்! ஆனால் நானோ எனது காரைக் கூட விற்க நேர்ந்துவிட்டது'
ஆலங்குடி ஸ்ரீராமச்சந்திரன் சிறந்த கடம் வித்வான். ஒரு சமயம் மைசூர் அரண்மனையில் தசரா திருவிழாவின் போது அவர் பக்கவாத்தியத்திற்காக அழைக்கப்பட்டார். ஆனால் கடம் வித்வான்கள் திறந்த மார்புடன் இருப்பார்கள் என்பதை அறிந்து அது அரண்மனைச் சம்பிரதாயங்களுக்கு ஒத்துவராதென்று அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது விபரம் அறிந்த சௌடய்யா கடம் வித்வான்கள் சட்டை இன்றி திறந்த மார்புடன் கடம் வாசிப்பது மரியாதைக்கு குறைவல்ல என்பதை அரண்மனை உத்யோகஸ்தர்களிடம் விளக்கி, அவருக்கு அனுமதி வாங்கினார். மைசூர் மகாராஜா ஆலங்குடி அவர்கள் கடம் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்தவராக அவருக்கு தாராளமாகச் சன்மானம் வழங்கினார்.

ஃப்ளூட் மாலி டி.ஆர்.மகாலிங்கம்
மாலி ஒரு கச்சேரியில் மாடாட பார்த்தேனோ என்ற கீர்த்தனையை வாசித்தார். அதன் சுவையில் மயங்கி, மகிழ்ந்த முசிரி சுப்ரமணியம் அவர்கள், மாலியை அப்பாடலைத் திரும்பவும் வாசிக்கச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார். மாலி சிறு வயதில் கச்சேரி செய்ததைக் கேட்ட ஜி.என்.பாலசுப்ரமணியம், செம்மங்குடி போன்ற புகழ்பெற்ற வித்வான்கள் எல்லோரும் ஏது! இந்தப்பையன் புல்லாங்குழல் வாசிப்பால் நமக்குப் பிழைப்பு போய்விடும்போல் இருக்கிறதே. இனி நாமெல்லாரும் வேறு ஏதாவது தொழில் செய்ய வேண்டியதுதான் என்று சொன்னார்கள்.
அப்போது ஜிஎன்பி, அவர்கள் நானாவது பிஎ படித்து இருக்கிறேன். வேறு ஏதாவது வேலை தேடிக் கொள்ள முடியும் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று செம்மங்குடியைக் கேட்டபோது அவர் வேறு என்ன செய்வது? ஊருக்குப் போய்க் கலப்பையைப் பிடிக்க வேண்டியதுதான் என்றார்.
மாலியின் வாசிப்பில் பிரபல வித்வான்கள் அவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்கள்.

திருமதி எம்.எல்.வசந்தகுமாரி (1928-1991)
மாணவப் பருவத்தினராக எம்.எல்.வசந்தகுமாரி இருந்தபோது மதுரையில் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரி மேடையில் அவருடன் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தார். அந்நிகழ்ச்சியை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு இவ்வாறு மேடையில் எம்.எல்.வி.யின் அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்டதும் கோபம் வந்தது. கச்சேரி மேடையில் பாடகிக்குப் பக்கத்தில் இந்த மனிதருக்கு என்ன வேலை? இவ்வாறு நினைத்தவராக அவரிடம் சென்று உடனே மேடையை விட்டுக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டார். அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்; பாடிக் கொண்டு இருப்பது என் பெண்தான். அவரிடம் யாரும் விஷமம் செய்யாமல் இருக்கவே நான் இங்கே இருக்கிறேன்.
இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார். பிறகு இந்த இளைஞருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது. அவர் பெயர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்த நட்பே பின்னால் அவர் எம்.எல்.வி.யை மணந்துகொள்ளவும் காரணமாயிற்று. நல்ல செல்வந்தராக இருந்த அவர் சினிமாப்படம் எடுக்கும் முயற்சியில் பொருளிழந்து பிறகு விகடக்கலையில் புகழ்பெற்று விகடம் கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்பட்டார்.

டி.எம்.சுந்தரராமன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X