நானா போனதும்; தானா வந்ததும்! (12)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

சென்னை வந்த புதிதில், ரேடியோ தயாரிக்கும் ஒரு கம்பெனியில், எனக்கு வேலை கிடைத்தது. ரேடியோவின் சில பகுதிகளை வாங்கியும், சிலவற்றை தாங்களே தயாரித்தும், "அசெம்பிள்' செய்தும், அழகான காபினெட்டில், "நல்லடக்கம்' செய்து, விற்பனை செய்யும் கம்பெனி.
அயல் நாட்டுத் தயாரிப்புகளுடன் சிரமப்பட்டு, எங்கள் கம்பெனி, தன் சரக்கை விற்றுக் கொண்டிருந்தது.
கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே, பத்திரிகைகளுக்கு கதை எழுதுவதும், முடிந்த போதெல்லாம் பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்று, ஆசிரியர்களை சந்திக்க முயலுவதும், சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவதும் - அது ஒரு சுகமான கஷ்ட காலம்.
அந்த சுகமான கஷ்ட காலத்திற்கு, கொஞ்ச நாளில் சோதனை வந்து சேர்ந்தது.
கம்பெனி நஷ்டத்தில் இயங்கியதால், வேலையிலிருந்து, யார் யாரை தள்ளுவது என்று, முதலாளி உற்சாகமாக யோசித்தார். (அவர் எப்போதுமே உற்சாகமாகத்தான் இருப்பார், லாப நஷ்டத்திலும் கூட.)
மொத்தம் பதினெட்டு சிப்பந்திகள், அந்த ரேடியோ கம்பெனியில் வேலைக்கு இருந்தோம்.
ஒரு நாள் மாலை, டீ சப்ளை செய்த சண்முகம், டீக்கு பதிலாக, இடியை சப்ளை செய்தான். அவன் கையில், பதினெட்டு கவர்கள் இருந்தன. ஒட்டப்பட்ட கவர்கள். ஆளுக்கொரு கவர் கொடுத்துச் சென்றான்.
"திக், திக்' என்று பயந்தவர் பலர்; "பேஷ், பேஷ்' என்று குதூகலித்தவர் சிலர்.
உறைக்குள் வெங்கடாசலபதி படம் இருந்தால், அவர் வேலையில் தொடரலாம். படம் இல்லாமல், ஒரு கால் காகிதம் மட்டும், "டைப்' அடிக்கப்பட்டு இருந்தால், சீட்டு கிழித்தாயிற்று என்று அர்த்தம்.
ஒரு சாரி, கீரி, பாம்பு எதுவுமில்லை, "போடா வெளியே' என்பதற்கும், "ப்ளீஸ் வெளியே போய் விடுறீங்களா?' என்பதற்கும் என்ன வித்தியாசம்.
எனக்கு வெங்கடாசலபதி படம் வந்தது. ஆகவே வேலையில் நீடித்தேன். குறைந்த சம்பளம் என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். அதனால் தான், இப்போது என் வேலை போகாமல் இருந்தது என தெரிய வந்தது.
இன்னொரு காரணம் கூட சொல்லலாம். என் சீனியர் (கம்பெனியில் முக்கிய டெக்னீஷியன்) என்னை தக்க வைத்துக் கொள்ள பலமாக, சிபாரிசு செய்ததாக அறிந்தேன். என் பேனாவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
என் சீனியர் இளைஞர். கொஞ்சம் லேட் மாரேஜ். என்னை, "எழுத்தாளர் சார்...' என்று தான் கூப்பிடுவார். நான் சுற்றும் ஆசிலேஷன் காயில்கள் முன்னே, பின்னே இருந்தாலும் ஊளையிட்டாலும், திட்ட மாட்டார். கதை எழுதுபவனாதலால், என்னை ரொம்ப பிடிக்கும்.
நான் வேலையில் சேர்ந்த சமயம், அவர் புது மாப்பிள்ளை. கல்யாணமாகி இரண்டு மாதம் தான் ஆகியிருந்தது.
மனைவியை, மாமனார் வீட்டிலே தங்க வைத்து விட்டு, சென்னையில் குடித்தனம் போட, வீடு தேடிக் கொண்டிருந்தார்.
இளம் மனைவிக்கு, அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருப்பார்.
அரையும் குறையுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள ஆசிலேஷன் சரி செய்யப்பட வேண்டி, "கீ... கீ..' என்று உயிர் போகிற மாதிரி, ரேடியோக்கள் ஊளையிட்டு கொண்டிருக்கும்.
அவரோ, மனைவிக்கு பிரியமாக யோசித்து யோசித்து, கடிதம் எழுதிக் கொண்டிருப்பார்.
ஒரு நாள், ஒரு விசித்திர வேண்டுகோளை என்னிடம் வைத்தார். "ஏய்யா எழுத்தாளர், நீ தான் கடிதம் எழுதறவராச்சே. எனக்கு ஒரு கடிதம் எழுதித் தரக் கூடாதா?' என்றார்.
"உங்களுக்கா, எதற்கு? நான் தான் தினமும் கண்ணெதிரே நின்று பேசுகிறேனே...' என்றேன்.
"எனக்கில்ல ஐயா...' என்றவர், குரலை தாழ்த்திக் கொண்டு, அசட்டு சிரிப்புடன், "என் மனைவிக்கு ஸ்டைலாக, தடபுடலாக எழுதிக் கொடுய்யா - நான் எழுதுற மாதிரி...' என்றார். ஊரிலுள்ள புது மனைவியை, தமிழால், தபால் மூலம் கொஞ்ச ஆசைப்பட்டு, என்னை கேட்டுக் கொண்டார்.
நான் கேட்டேன்... "உங்க மனைவி எப்படி இருப்பாங்க? நான் பார்த்ததில்லையே? நல்லா இருப்பாங்களா?' என்றேன்.
"அதெல்லாம் உனக்கு எதுக்குய்யா?' என்றார்.
"சும்மா, கண்ணே, மூக்கேன்னு எழுதினால் செயற்கையாக இருக்கும். உங்க சம்சாரம் கண்ணாடி போடறவளாயிருந்து, நான் பாட்டுக்கு, "தாமரைக் கண்ணாளே... உன் கண்ணுக்கு நான் அடிமை!' என்று எழுதினால், உங்களைப் பற்றி தப்பாக நினைப்பாங்களில்லையா. அந்த பயத்தில் தான் கேட்டேன்...' என்று சமாதானம் சொன்ன பிறகு, இளம் மனைவியின், ரூபலாவண்யங்களை வரம்புக்குட்பட்டு, "கூந்தல் கொஞ்சம் குட்டை தான். மூக்கு கொஞ்சம் கூர். கன்னம் பரவாயில்லை. கண்ணாடிதான். நிறம் - மாநிறம். உயரம் கொஞ்சம் கூடுதல். ஒல்லிதான். சிரித்தால் தெற்றுப்பல் தெரியும்...' என்று ஒருவாறு விவரித்து சொன்னார்.
கஷ்டமான கேள்விகளுக்கு விடை எழுதுவது போல், தடுமாறி, ஒரு வழியாக அவரது மனைவியின் அங்க லாவண்யங்களையும், குணாதிசயங்களையும் புகழ்ந்து எழுதியிருந்தேன்.
"உன் குரலை கேட்டு புழக்கடையில், குயில் ஒன்று தூக்கு மாட்டிக் கொண்டு செத்தது ஞாபகமிருக்கா?' என்று, கொஞ்சம் க(வி)தை விட்டிருந்தேன்.
அவர் அலறித் துடித்தபடி, அந்த வாக்கியத்தை நீக்கி விட்டார்.
இப்படியாக, அவரது மனைவியார், சென்னை வந்து குடித்தனம் போடும் வரையில், அவருக்கு கடிதம் எழுதிக் கொடுத்து கொண்டிருந்ததன் பலனே, எனக்கு வேலை போகாததற்குக் காரணம். அவர், பிரதம டெக்னீஷியன் ஆதலால், அவர் தயவில் எனக்கு வேலை நீடித்தது.
கதை எழுதுவது ஒரு கலையோ, அதிர்ஷ்டமோ... தெரியாது. ஆனால், அது, சோதனையான காலத்தில், என் வேலை போகாமல் காத்து ரட்சித்தது என்பது உண்மை.
தொடரும்.

பாக்கியம் ராமசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரமேஷ் - Coimbatore,இந்தியா
31-ஜன-201218:05:48 IST Report Abuse
ரமேஷ் மிக அருமை!!! அற்புதமான பதிவு!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X