போதும் என்ற மனம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2012
00:00

தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள், வண்ணப் படங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு விதம். எல்லாமே அழகு!
சின்னக் குழந்தைகளைப் போல, காம்பின் நுனியில் சிரித்துக் கொண்டிருந்தன வண்ணப்பூச்சிகள். ஒவ்வொரு பூவையும், கண் இமைக்காமல், மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்த போது, ஹாலில், ""வா பசுபதி...'' என்று அப்பாவின் அழைப்பு குரல் கேட்டது.
""பசுபதி...'' என்ற பெயரை கேட்டதும், சுமதியின் நெஞ்சு குதூகலித்தது. எழுந்து ஓடிப்போய், ஹாலில் நின்று, அவனை பார்க்க வேண்டுமென்ற பரவசம் உண்டாயிற்று அவளுக்கு.
அப்பா ஹெட்மாஸ்டராக வேலை செய்யும் பள்ளியில், டீச்சராக வேலை செய்கிறவன் தான் பசுபதி. இருபத்தெட்டு வயது இளைஞன். ரொம்ப சிம்பிளாக இருப்பான். பள்ளிக்கு வேலை செய்ய வரும் போது, கதர் வேட்டி, கதர் அரைக்கை சட்டை போட்டிருப்பான். கொஞ்சம் சன்னமான கதர் துணியில் தைத்த சட்டை என்பதால், உள்ளே அணிந்திருக்கும் முண்டாபனியன், அவன் உடல் கட்டமைப்பை எடுத்துக் காட்டும்.
பசுபதி ஒரு காந்தி பக்தன். மகாத்மா காந்தி, அமரரான எவ்வளவோ ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவன். ஆனாலும், காந்திஜியைப் பற்றி, அவன் நிறைய அறிந்திருந்தான்; படித்திருந்தான்.
காந்தி, தன் அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், அதை காப்பாற்ற, அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களையும், தென் ஆப்பிரிக்காவில் அவர் போராட்டம் தொடங்கியதையும், அதை அவர் படிப்படியாக உயர்த்தி, அகிம்சையை மட்டும், தன் போராட்ட ஆயுதமாகக் கொண்டு, ஆங்கிலேயனை, இந்தியாவை விட்டு விரட்ட நடத்திய அறப்போராட்டங்களையும், மேற்கொண்ட உண்ணாவிரதங்களையும், இந்தியா சுதந்திரமடைந்த அன்று, நவகாளியில் உண்டான வகுப்பு கலவரத்தில், அமைதியை ஏற்படுத்த அரும்பாடு பட்டதையும், சுதந்திர இந்தியாவின் அரசில், எந்த உயர் பதவியையும் எதிர்பார்க்காமல், ஏற்காமல் உயர்ந்து நின்றதும், பிரார்த்தனை கூட்டத்தில், துப்பாக்கியால் சுடப்பட்டு மரணித்ததையும், பசுபதி படித்து, படித்து எந்த கட்சியையும் சேராமல், உண்மை, உழைப்பு என வாழ்க்கையை, எளிமையாக எதிர்கால இந்தியாவின் தூண்களாக மேம்படுத்தும், குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியனாக தன்னை மாற்றிக் கொண்டவன். சத்திய சோதனை புத்தகத்தை கீதையாக ஏற்றுக் கொண்டவன்.
எளிமையாலும், இன்சொல்லாலும், இந்த சிக்க நரசய்யன் கிராமத்து எலிமென்ட்ரி ஸ்கூலில் படிக்கும் குழந்தைகளால் மட்டுமல்லாது, தலையாரி வேலுவிலிருந்து, பண்ணையார் ராமநாதய்யர் வரை, விரும்பப் படுபவன் பசுபதி.
ராஜகோபால சுவாமி கோவிலுக்கு பின்னால் ஓடும் ரோட்டில், இன்று டவுன் பஸ், காலையும், மாலையும் இருமுறை வந்து போகிறதென்றால், அதற்கு காரணம் பசுபதி தான். நாலைந்து, எட்டு நடந்தாலே ஓடி வந்து, காலை தொடும் தாமிரபரணி நதியும், தெருவுக்கு தெரு இரண்டு, மூன்று தண்ணீர் குழாய்கள் இருக்கிறதெனில், அதற்கும் காரணம் பசுபதி தான்.
எப்போதோ, அத்திப்பூத்தாற் போல, கிராமத்துக்கு வரும் போஸ்ட்மேன், தினசரி வருவதும், ஒரு சின்ன எக்ஸ்பிரிமென்டல் போஸ்ட் ஆபிஸ் திறக்கப்பட்டதும், இரண்டு மூன்று கி.மீ., தூரத்தில் இருந்த ரேஷன் கடையை, கிராமத்துக் குள் கொண்டு வந்ததும், தெரு விளக்குகள் விடிய, விடிய எரியும்படி செய்ததும்; ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, தினசரி ஒரு போலீஸ்காரரை, இரவில், ரோந்துக்கு வர ஏற்பாடு செய்ததும், வாசக சாலையை திறக்கச் செய்ததும், கப்பிரோடை தார்ச்சாலையாக ஆக்கியதும், பசுபதியின் அயராத உழைப்பும், கடும் முயற்சியும் தான்.
மீனாட்சிபுரம் முனிசிபாலிட்டி மருத்துவமனையிலிருந்து, ஒரு டாக்டரை, வாரம் இரு முறை, மருந்து மாத்திரைகளோடு, சிக்க நரசய்யன் கிராமத்துக்கு வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான் பசுபதி.
""பசுபதி...'' என்றார் சுமதியின் அப்பா ஜெகநாதன்.
""சொல்லுங்க சார்...'' என்றான் பசுபதி நின்றபடியே.
""உட்காரப்பா முதல்லே... பெரிய மனுஷனாகப் போறே. இப்படி நிக்கலாமா... உட்கார்,'' என்றார் ஜெகநாதன்.
"பசுபதி பெரிய மனுஷனாகப் போறானா; எப்படி?' என்று, தனக்குத் தானே கேட்டுக் கொண்டபடி எழுந்த சுமதி, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பக்கத்தில், ஆட்காட்டி விரலை வைத்து, மற்ற விரல்களால், புத்தகத்தை மூடி, பிடித்தபடி எழுந்தாள்.
""என்ன சார் சொல்றீங்க?'' என்றான் பசுபதி.
கதவோரமாக சுமதி நிற்பது, அவள் சேலை அசைவதிலிருந்து தெரிந்தது.
அதை கவனித்தான் பசுபதி. அந்த இளம் நீல வர்ணத்தில், சின்ன பூக்களை டிசைன் செய்திருக்கும் சேலையை, அவள் கட்டியிருக்கும் போது, அவனுக்கு அவளை ரொம்பவும் பிடிக்கும்.
கால் பாதம் வரை தொங்கும் சேலையின் கொசுவத்தின் மடிப்புகள், ஒன்றின் மீது ஒன்று அமைந்திருப்பதே, கொள்ளை அழகாக இருக்கும். அவளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கும் பசுபதிக்கு.
அவள் எப்போதாவது, அப்பா வேலை பார்க்கும் எலிமென்டரி ஸ்கூலுக்கு வருவாள். அநேகமாக, அப்பாவுக்கு பிளாஸ்கில் காபியும், சின்ன டிபன் பாக்சில், டிபனும் சின்ன சிவப்பு பிளாஸ்டிக் கூடையில் எடுத்து வருவாள்.
அவளுடைய தக்காளி நிறத்துக்கு, இளநீல வர்ண சாரியும், சிகப்பு பிளாஸ்டிக் கூடையும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். அவள் ஸ்கூலினுள் நுழைவதை பார்க்கும் போதே, "ஐயோ... இவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குப் போய் விடுவாளே...' என்ற ஏக்கம் உண்டாகும் பசுபதிக்கு.
லேசாக புன்முறுவலிப்பாள் சுமதி. பெரிய பேறு கிடைத்து விட்டது போல, மாணவர்கள் கவனிக்காதபடி, ஜாக்கிரதையாக பதிலுக்கு சிரிப்பான் பசுபதியும். சுமதியின் மனம், இறக்கை அடித்துக் கொண்டு பறக்கும். அதன் மவுன ஒலி, பசுபதியின் மனச் செவியில் நன்கு கேட்கும்.
எப்போதாவது ஹெட்மாஸ்டர் வீட்டுக்கு வரும் பசுபதி, அடிக்கடி வர ஆரம்பித்தான். அவன், தனக்காகத் தான் வருகிறான் என்பது, சுமதிக்கு தெரிந்தது. அதுவே, அவளை புளகாங்கித மடையச் செய்தது.
"தினம் ஒரு முறை அவன் வர மாட்டானா...' என, அவள் மனம் ஏங்கத் தொடங்கியது. இரண்டு மாதத்துக்கு, முழுப் பரிட்சை லீவு விடும் போது, அவனை அடிக்கடி பார்க்க முடியாமல், தவியாய் தவிப்பாள் சுமதி.
ஒரு நாள் அம்மாவையும் வைத்துக்கொண்டு, சுமதியிடம் அப்பா ஜெகநாதன் கேட்டார்...
"பசுபதிக்கு இந்த சின்ன வயசிலேயே, பொது நலம் கருதி உழைக்கும் தன்னலமில்லாத, நல்ல உள்ளம் அமைஞ்சிருக்கு. கடந்த அஞ்சு வருஷத்திலே, நம்ம சிக்க நரசய்யன் கிராமம், பல நகர்ப்புற வசதிகளை எல்லாம் அடைஞ் சிருக்குன்னா, அதுக்கு காரணம், காந்தீயத்தை பின்பற்றி நடக்கும் நம்ம பசுபதி தான்...'
"ஆமாம்... தங்கமான பிள்ளை... நல்ல குணங்கள் தான் அதிகம்; ஒரு கெட்ட குணம் கூட கிடையாது...' என்றாள் அம்மா.
"நீ என்னம்மா நினைக்கிறே?' என்று மகளிடம் கேட்டார் ஜெகநாதன்.
"நீங்க ரெண்டு பேரும் நினைக்கிறதைத் தான் அப்பா, நானும் நினைக்கிறேன்...' என்றாள் சுமதி.
"பசுபதியை நம்ம மருமகனாக்கி கொள்ளலாம்ன்னு நெனைக்கிறோம்மா நானும், அம்மாவும். நாங்கள் நினைக்கிறதையே நீயும் நினைக்கிறதா சொன்னியேம்மா...' என்றார் ஜெகநாதன்.
"உங்கள் இஷ்டம்பா. நீங்களா பார்த்து, அவர் தான் என் எதிர்கால கணவர்ன்னு முடிவு செஞ்சா, அதை ரொம்பவும் சந்தோஷத்துடன் ஏத்துப்பேனப்பா...' என்று கூறினாள் சுமதி.
அதற்குள் அவள் முகம் குங்குமத்தை கொட்டிவிட்டது போல சிவந்தது.
""பசுபதி... நேத்து பண்ணையார் கூப்பிட்டனுப்பினார்ன்னு போயிருந்தேன்,'' என்றார் ஜெகநாதன்.
""என்ன விசேஷம் சார்?'' என்று கேட்டான் பசுபதி.
""பஞ்சாயத்து எலெக்ஷன் வருதில்ல.''
""ஆமாம் சார்.''
""இப்போதான் வார்டு கவுன்சிலர்கள் எல்லாம் சேர்ந்து, பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்கிற முறையை மாற்றி, மக்களே நேரடியா பஞ்சாயத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்களை எல்லாம் தேர்ந்தெடுக்கிற முறையை கொண்டு வந்திருக்காங்களாமே!''
""ஆமாம் சார்... கிராமத்திலே பெரிய பணக்காரர், நம்ம பண்ணையார். நல்ல மனுஷர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர். கிராமம் நல்ல வளர்ச்சியடையணும்ன்னு நினைக்கிறவர். அப்படிப்பட்டவர், நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவரா வரணும் சார்... பண்ணையார், தான் போட்டி இடலாமான்னு கேட்க கூப்பிட்டாரா சார்?'' என்று கேட்டான் பசுபதி.
""இல்லேப்பா...''
""பின்னே, எதுக்கு கூப்பிட்டார் சார்?''
""பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, சுயநலமில்லாத, தூய தொண்டுள்ளம் படைத்தவர் தான் வரணுமாம். அது தான் அவர் விருப்பமாம்!''
""அப்படி யார் இருக்கா சார்?'' என்றான் பசுபதி.
""நீ தான்!'' என்றார் ஜெகநாதன்.
அதைக் கேட்டதும் திடுக்கிட்டாள் சுமதி. "பசுபதி தங்கமானவன். நல்லவன், சுயநலமில்லாதவன், எந்தக் கட்சியையும் சேராதவன். உண்மை, உழைப்பு, இரண்டையும் இரண்டு கண்ணாக கொண்டவன். இன்று தனித்து, சிறுவர் முதல், பெரியவர் வரை மதிக்கிறவன். அப்படிப்பட்டவன், அரசியல் சேற்றில் சிக்கிக் கொள்ள போகிறானோ?
"லஞ்ச லாவண்யத்தையே அணிகலன்களாக கொண்டு வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்... அரசியலில் ஊழல் செய்து, இன்று மாடமாளிகையிலும், கோபுரங்களிலும் வாழ்கின்றனர். அவர்கள் பெயரில்; மனைவி, மக்கள், மச்சான், மச்சினி, பினாமிகள் பெயரில்; எவ்வளவு அசையும், அசையா சொத்துக்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
"குடியிலும், கூத்திலும் தங்கள் வாழ்க்கையை, அரசியலில் ஈடுபடுத்தி இழந்தவர்கள், தொலைந்தவர்கள் எவ்வளவு பேர்... ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறையில் இருப்பவர்கள் எவ்வளவு பேர்... தண்டனை பெற்றவர்கள் எவ்வளவு பேர்... நீதி, நேர்மை, உண்மையை எல்லாம், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, பலி கொடுத்த அரசியல்வாதிகள் எவ்வளவு பேர்...
"நடந்து சென்றவர்கள் எல்லாம், இன்று, பெரிய ஊழல்வாதியாக, எண்ணற்ற காரில் வலம் வருகின்றனரே... நல்லவனை, நல்லவனாக இருக்கவிடாதே அரசியல். அவனருகில் இருப்பவர்களே, அவன் தவறுகள் செய்ய காரணமாவது தெரியாமல், மோசம் போவானே...
"இன்று நல்லவனாக இருக்கும் பசுபதி, அரசியலில் ஈடுபட்டால், தன்சுயம் இழந்து போவானே... மனைவி, மக்களுக்கென்று சொத்து சேர்க்க, அநியாயம் அக்கிரமம் எல்லாம் செய்ய தொடங்குவானே... அவனைத் தேடி போலீஸ், எந்த வழக்கை, எப்போது கொண்டு வருமோ என்றல்லவா அவன் மனைவி, அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பாள்... கொலை செய்யவும் தயங்க மாட்டானே...'
சுமதிக்கு பாதிகேசம் நடுங்கிற்று.
பசுபதியை பார்த்தாள்.
"தான் உயர்த்தப்படப் போகிறோம்; உயர்த்தப்பட்டு, படுகுழியில் தள்ளப் பட போகிறோம் என்பது தெரியாமல், பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு, "சரி சார்... பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு நிற்கிறேன்...' என்று சொல்லி விடுவானோ... பதவி தானாக வருகிறதென்றால், யார் அதை தட்டிக் கழிக்க முன் வருவர்...
"ஊரில் நல்ல பெயர் எடுத்துள்ள பசுபதியை, மக்கள் போட்டி இல்லாமல் கூட, தேர்ந்தெடுத்து விடுவரே... அது, அவனுக்கு தலைகனத்தை கொடுத்து, தாறுமாறாக நடந்து கொள்ளச் செய்யாதா... அவனாக நடந்து கொள்ளா விட்டாலும், அவனை சூழ்ந்துள்ளவர்கள், தங்கள் வாழ்க்கை செழிப்படைய, அவனை பலிக்கடா ஆக்கி விடமாட்டார்களா... குடிவசமாகி விடுவானே...
"பசுபதியை கல்யாணம் செய்து கொள்வது என்பதை விட்டுவிட வேண்டியது தான்...' என்று, சுமதி தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டபோது, ""சார்...'' என்று பசுபதி தன் அப்பாவை அழைப்பதை பார்த்தாள் சுமதி.
""என்னப்பா பசுபதி?'' என்று கேட்டார் ஜெகநாதன்.
""நான் சாதாரணமாக, இப்போது இருப்பது போலவே, சமூக ஊழியராகவே இருந்து விடுகிறேன் சார்... பதவி, அந்தஸ்து, கவுரவம் எதுவும் வேண்டாம். சாதாரண சமூக ஊழியராக இருப்பதில்; எனக்கு எவ்வளவோ மன நிம்மதியும், மனநிறைவும், மன சந்தோஷமும் கிடைக்கிறது சார்...
""யாருடைய நிர்பந்தத்துக்கும் கட்டுப்படாமல், நான் ஒரு சுதந்திர ஊழியராக, இப்போது இருப்பது போலவே, எப்போதும் இருக்க விரும்புகிறேன். இப்போது மக்கள் என் பக்கம் இருக்கின்றனர். இந்த நிலையே நீடிக்கட்டும் சார். பெரிய பதவியும், சீரழிவும் எனக்கு வேண்டாம்.
""என் மீது லஞ்சம், ஊழல், சிறை தண்டனை என்ற, எந்த கறையும் பட வேண்டாம் சார்... காந்திஜி எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் இருந்தது போல, நானும் இருந்து விடுகிறேன். இனிய மனைவி, நல்ல குழந்தைகள், சிறந்த வீடு, மன நிம்மதி, அளவான சந்தோஷம் போதும் சார் எனக்கு,'' என்று தீர்மானமாக கூறிய பசுபதியை, மகிழ்ச்சி பொங்க பார்த்தாள் சுமதி.
***

சுகந்தி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இலக்ஷ்மணகுமார் r - டெல்லி,இந்தியா
31-ஜன-201209:16:07 IST Report Abuse
இலக்ஷ்மணகுமார் r இதை படித்து நிஜமாகவே ஒரு திரைப்படம் கண்டது போல மனதில் ஒரு மகிழ்ச்சி.. சிறந்த கற்பனை திறன் கொண்ட எழுத்தாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
pr - chicago,இந்தியா
31-ஜன-201204:18:30 IST Report Abuse
pr செம மொக்க..................
Rate this:
Share this comment
Cancel
அம்பரல்லா - சென்னை,இந்தியா
30-ஜன-201222:21:14 IST Report Abuse
அம்பரல்லா அப்புறம்??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X