அந்த நாள் ஞாபகம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

""அப்பா... உங்க சினேகிதர், அதாவது உங்க கூட படிச்ச கிளாஸ்மெட் கிருஷ்ணமூர்த்தியை ஞாபகமிருக்கா,'' என்று கேட்டான் என் மகன். பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான், ""ஞாபகமில்லாம என்ன... நல்லாருக்கு. அப்போ ரெண்டு கிருஷ்ணமூர்த்தி படிச்சாங்க. நீ யாரை சொல்ற?''
""என்.கிருஷ்ண மூர்த்திப்பா... திருக்கொட்டாரம்.''
""ஓ... அவனா... நல்லா ஞாபகமிருக்கே. சிவப்பா, ஒல்லியா, நெடு நெடுன்னு இருப்பான்.''
""ஆமாம்... இப்போ பெரிய ஆளா இருக்காராம்!''
""பெரிய ஆள்னா...''
""பெரிய பணக்காரராம்... கோடீஸ்வரராம். சென்னையிலேயே, விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்ல ஒருத்தராம்!''
""ஆமாம்... சமீபத்துலதான், நானும் கேள்வி பட்டேன். இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?''
""என்னோட பிரண்டோட, தங்கச்சி கல்யாணத்துக்கு, போன வாரம் மயிலாடுதுறை போனப்ப, ஜெயபால் அங்கிள வழில பார்த்தேன். "நீ அப்பாவை அழைச்சிக்கிட்டு, ஒரு தடவை கிருஷ்ணமூர்த்தியை போய் பார். உனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்வாரு'ன்னு அவர்தான் சொன்னார்.''
""ஜெயபால் மாதிரி, அவன் திக்கஸ்ட் பிரண்ட் இல்லேன்னாலும், நல்லா தெரியும். இருந்தாலும், இப்போ, அவன் ரொம்ப உயரத்துல இருக்கான்... அதான் யோசிக்கிறேன்.''
""உயர்வு, தாழ்வு... ஏழை, பணக்காரன்... படிச்சவன் படிக்காதவன்கிற வித்தியாசம் பார்க்காத, ஒரே உறவு நட்புதான்னு, நீங்கதானேப்பா அடிக்கடி சொல்வீங்க. ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாமே...'' மகனின் ஆசையும், ஏக்கமும் வார்த்தைகளில் தெரிந்தது.
இன்னும் மூன்று வருடத்தில், ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியன் நான். மனைவி மற்றும் ஒரு பெண், ஒரு பிள்ளை. சின்ன குடும்பம் தான். பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட்டேன். மகன் டிப்ளமா படித்துவிட்டு, பி.இ.,க்கு முயற்சி செய்தான். அந்த வருடம் கிடைக்கவில்லை. காலத்தை வீணடிக்க வேண்டாமென, கணினி வகுப்பில், ஏதேதோ படிப்பு படித்தான்.
பிறகு, கணினி மையத்தில், சொற்ப சம்பளத்தில் சாதாரண வேலை. அது வேண்டாமென, வேறொரு இடம்... அது அலுக்கவே, இன்னொரு வேலை. இப்படியே, காலம் கடந்ததேயொழிய, நிரந்தரமான வேலை ஏதும் கிடைத்தபாடில்லை.
சம்பாதிக்க ஆரம்பித்து, கையில் காசு பார்க்க ஆரம்பித்ததும், சுத்தமாக படிப்பில் கவனம் செல்லவில்லை. காசு செலவு செய்து, பி.இ., படிக்க வைக்கலாமென்றால், "இனி எனக்கு படிப்பில் இஷ்டமில்லைப்பா...' என்று நேரடியாக சொல்லி விட்டான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய பேச்” வந்தது.
கிருஷ்ணமூர்த்தி என்னுடைய கிளாஸ்மெட். வேலங்குடி யூனியன் ஸ்கூலிலிருந்து நெடுங்காடு, உயர்நிலைப்பள்ளி வரை ஒன்றாகப் படித்தோம். நல்ல நிறம், அய்யர் வீட்டுப் பையன். நல்ல குரல் வளம்; நன்றாகப் பாடுவான். தினமும் பள்ளி துவங்குவதற்கு முன், வழிபாட்டில், தமிழ் வாழ்த்தும், கடவுள் வாழ்த்தும் அவன் தான் பாடுவான்.
விளையாட்டு என்றால், அவனுக்கு வேப்பங்காய். சுத்தமாக பிடிக்காது. மாலை, மூன்றிலிருந்து மூணே முக்கால் வரை, உடற்பயிற்சி வகுப்பு இருக்கும். அதில் வந்து நின்று, அப்படியும், இப்படியும் கையை காலை ஆட்டிவிட்டு சென்று விடுவான்.
ஆனால், படிப்பில் கெட்டிக்காரன். எல்லா பாடத்திலேயும், அவன் தான் முதல் மார்க். தன்னை பின்னுக்குத் தள்ள, வகுப்பில் யாருமில்லை என்ற கர்வம், அவனுக்கு நிறையவே உண்டு. அதன் காரணமோ, என்னவோ, மற்ற மாணவர்களோடு ஒட்டாமல் தான் பழகுவான்.
ஒரு தடவை, ஆசிரியரிடம் கணக்கில் சந்தேகம் கேட்டேன். அவர், "கிருஷ்ணமூர்த்தியைக் கேட்டு தெரிந்து கொள்...' என்று சொல்லி விட்டார். அவன் கணக்கில் புலி. என்னவோ, அவனிடம் கேட்க, என் மனம் இடங்கொடுக்கவில்லை. கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆசிரியர் சொல்லியும், தன்னிடம் வந்து கேட்கவில்லையே என்று, என் மீது, அப்போது அவனுக்கு கடுகடுப்பு இருந்தது.
அதெல்லாம் ஒரு காலம். போட்டியும், பொறாமையும், சண்டையும், சமாதானமும், கிண்டலும் கேலியும் நிறைந்த, என்றும் மறக்க முடியாத, இன்று நினைத்தாலும், நெஞ்சமெல்லாம் இனிக்கும் பசுமையான நினைவுகள்.
என் மகன், கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி பேச்செடுத்ததும் அப்படியே, நான் பழைய நினைவுகளில் மூழ்கி விட்டேன்.
""என்னப்பா... அவரை ஒரு தடவை போய் பார்த்து விட்டு வரலாமா? அவரை பார்க்கிறதுல, ஏதாவது சங்கடமா பீல் பண்றீங்களா?''
""அதெல்லாம் ஒண்ணுமில்லே... அவனைப் பார்த்துக் கேக்கறதுல என்ன சங்கடம். அந்த காலத்து நட்புன்னா சாதாரணமானதா, உரிமையோட கேட்கலாமே. நம்ம நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறப்ப, அவன் ரொம்ப ரொம்ப உயரத்துல இருக்கான்.
""நாம போறப்ப... அவன் இருக்கணும், நம்மை பார்த்ததும்... அதாவது, என்னை பார்த்ததும் தெரிஞ்சிக்கணும். இல்லே, நான் யாருன்னு சொன்ன பிறகாவது புரிஞ்சிக்கணும். சகஜமா பேசணும். இப்படி எதுவும் நடக்கலேன்னா தான், மனசுக்கு சங்கடமாயிருக்கும்.''
""ஒரே ஒரு தடவை முயற்சி செய்து பார்ப்போம்பா. "முயற்சி செய்வதே, பாதி வெற்றிக்கு அறிகுறி'ன்னு நீங்கதானேப்பா அடிக்கடி சொல்லுவீங்க.''
""ஓ.கே., போகலாம். நிச்சயம் போகலாம். அடுத்த வாரமே போவோம்.'' என்றதும், மகனின் முகத்தில் மகிழ்ச்சி. அதைப் பார்த்த, என் மனதிலும், ஒரு வித திருப்தி உண்டாயிற்று.
அடுத்த வாரம், ஒரு திங்கட் கிழமை யன்று சென்றோம். அண்ணா சாலையில், மூன்று மாடி கட்டடத்தில் இயங்கிக் கொண்டி ருந்தது, நண்பனின் கார்மெண்ட்ஸ். துணிகள் இறக்குமதி செய்து, விதம் விதமாக, மிக நவநாகரிகமான ரெடிமேட் துணிகள் தைக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பும் வியாபாரம்.
கண்ணாடி கதவைக் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றோம். வரவேற்பு அறையே, வாய் பிளக்க வைத்தது. அவ்வளவு நேர்த்தி; அலங்காரம். எங்கும் பணக்காரத்தனம் வழிந்தோடியது.
வெள்ளை சீருடையில், ஒரு பணியாள் வந்தான். ""யாரைப் பார்க்க வேண்டும்?'' என்றான். "உங்கள் எம்.டி.,யை!' என்று சொல்லாமல், ""என். கிருஷ்ணமூர்த்தியை பார்க்க வேண்டும்,'' என்றேன். அவன் சட்டென என்னை கூர்மையாக பார்த்து, ஒரு அச்சடித்த படிவத்தைக் கொடுத்தான்.
அதில் கேட்கப்பட்ட தேதி, பெயர், ஊர், பார்க்க வேண்டிய காரணம் எல்லாம் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்தேன். காரணம் என்று கேட்ட இடத்தில், சொந்த விஷயம் என்று எழுதினேன். அதை வாங்கி, அந்த ஆள் உள்ளே சென்றான்.
வரவேற்பறையில், கண்ணாடி டீபாய் மீது, ஆங்கில பத்திரிகைகளே அதிகமிருந்தன. அதில் பெரும்பாலும், வியாபாரம் சம்பந்தமானது தான். குளிரூட்டப்பட்ட அறை; அறை முழுவதும் நறுமணம் கலந்திருந்தது. மெல்லிய புல்லாங்குழல் இசை, மனதை வருடியது.
"அழைப்பு வருமா... படிவத்தைப் பார்த்து, பெயரையும், ஊரையும் பார்த்ததும், ஞாபகம் வருமா... ஞாபகம் வந்து அழைத்தாலும், பழைய நட்போடு பேசுவானா... இல்லை, தன்னோடு படித்தவன், ஊர்க்காரன் வந்து விட்டான்... ஏதோ இரண்டு வார்த்தை பேசி அனுப்புவோம் என்று நினைப்பானா?'
அழைப்பு வந்தது; உள்ளே சென்றோம்.
எங்களை பார்த்தானா, பார்க்கவில்லையா என்று கூட தெரியவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்ததும் கை பேசியில் பேசிக்கொண்டே, அவனுக்கெதிரே, மேஜைக்கு அந்தப் பக்கமுள்ள இருக்கையில் அமரச் சொல்லி சைகை செய்தான்.
எங்கள் வகுப்பிலேயே, இவன் தான் உயரம். இப்போது, மேலும் உயரமாகத் தெரிந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவனை இனி, "அவன்... இவன்...' என்று ஒருமையில் மரியாதையின்றி அழைப்பது தவறு என்பதாய், அவன் தோற்றம் என்னை உள்ளுக்குள் பயமுறுத்தி, எச்சரித்தது.
"கைபேசியை அனைத்து வைத்ததும், என்ன பேசுவான் ... எப்படி அழைப்பான்... நான் எப்படி அவனை எதிர் கொள்வது...' என, பல விதமான குழப்பத்தில் இருந்தேன்.
பேசி முடித்து என்னைப் பார்த்து, ""ஹாய் மீனாட்சி... எப்படி இருக்கே?'' என்றான்.
அவன் அப்படி அழைத்த அந்த வினாடி, என் உடம்பிலுள்ள அத்தனை செல்லும், சந்தோஷத்தில் துள்ளியது. காரணம், மீனாட்சிசுந்தரம் என்று, என் முழுப்பெயரை சொல்லிக் கூப்பிடாமல், படிக்கும் போது சுருக்கமாக, "மீனாட்சி...' என்று கூப்பிட்டதையே ஞாபகத்தில் வைத்து, அப்படியே இப்போதும் அழைத்ததில், எனக்கு சந்தோஷம்.
""பரவாயில்லேயே ... நல்லா ஞாபகம் வச்சிருக்கியே!'' என்றேன்.
""மறக்க முடியுமா... நெற்றியில் விபூதி கீற்று, குங்குமப் பொட்டு, சிரித்த முகம். கர்லிங் ஹேர்தான், கொஞ்சம் குறைஞ்சிருக்கு. மத்தபடி நீ அப்படியே தான் இருக்கே. அப்புறம்... நீ எங்க இருக்க, எப்படி இருக்க?'' என்றான்.
""காஞ்சிபுரத்துல இருக்கேன். அரசு ஊழியன், இன்னும் ரெண்டு வருஷமிருக்கு ரிடையராக, பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். இவன் என் பையன்,'' என்றேன்.
அங்கிள் சொல்வதா, சார் சொல்வதா என்ற குழப்பம், மகனின் மனதில் இருந்ததை, முகம் காட்டியது. ""வணக்கம் சார்...'' என்றான். சரியான அறிமுகமில்லாது, அதிக உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்து விட்டான் போலும்.
""அப்படியா...'' என்று என் மகனைப் பார்த்து புன்னகைத்து, மேலும், ஏதோ கேட்க நினைத்த போது, மேஜையிலிருந்த தொலைபேசி அழைக்கவே, எடுத்துப் பேசினான். கிட்டத்தட்ட, ஐந்து நிமிடம் பேசினான். இடையில் பணியாளை வரவழைத்து, குளிர்பானம் வாங்கி வரச் செய்தான். பேசி முடித்ததும்... குளிர்பானமும் வந்தது.
""ம்... எடுத்துக்குங்க. உன்னை சந்திச்சதில, ரொம்ப சந்தோஷமாயிருக்கு. பழைய ஞாபகமெல்லாம் வருது, ஸ்கூல் விட்டு வர்றப்ப, மேரி கிளாரா வீட்டுத் தோட்டத்துல கொய்யாக்கா பறிச்சது... வீட்டுக்காரம்மா பார்த்ததும், உன்னை மட்டும் மாட்டிவிட்டு, நான் தப்பிச்சிப் போனது. அதுக்காக, நீ ஒரு மாசம் என்னோட பேசாம இருந்தது... ஞாபகமிருக்கா?''
""ஏனில்லாம... நல்லாருக்கு,'' என்றேன் பழைய நினைவுகளை ரசித்தபடி.
""உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன்னோட அமைதிதான். விளையாடுறப்பவும் சரி அல்லது எதுக்காச்சும் கோவப்பட்டாலும் சரி... உன் முகத்துல ஒரு அமைதி இருக்கும். ஆனா, தன் மானம்... சுயகவுரவம்ன்னு வந்தா, என்ன ஆனாலும், அதை நீ விட்டுக்குடுக்க மாட்டேன்னு, அந்த ஒரு இன்சிடென்ட்லயே புரிஞ்சிக்கிட்டேன். என்னால மறக்கவே முடியாது அதை. ஏன்னா... அந்த விஷயத்துல, உங்கிட்ட நான் தோத்துட்டேன்,'' என்றான்.
""நீ எதை சொல்றே, எனக்குப் புரியலையே...'' என்றேன்.
""பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப நடந்தது... எல்லா சப்ஜெக்ட்லேயும், நான் தான் முதல் மார்க் வாங்குவேன். நீ கணக்குல வீக்... கதிர்வேலு வாத்தியார் கிட்ட போய், டவுட் கேட்டப்ப, "நீ கிருஷ்ணமூர்த்திய போய் பாரு. அவன் நல்லா சொல்லிக் குடுப்பான்'னு சொல்லிட்டாரு.
""ஆனா, நீ என்கிட்ட வரலை... உனக்கு, தன் மானம் எடம் கொடுக்கல. "ரெண்டு பேரும் ஒரே வகுப்பு. என்னை போல், அவனும் ஒரு ஸ்டூடன்ட். அவன் கிட்ட போய், ஏன் உதவி கேக்கணும்'ன்னு வீம்பா இருந்துட்டே...
""அப்போ கணக்குல அவ்வளவு தான் நீன்னு நெனைச்÷Œன். ஆனா நீ, யாரோ காலேஜ் வாத்தியார்கிட்ட, @கட்டு தெளிவுப் படுத்திக் கிட்ட. அது மட்டுமல்ல... அந்த எக்சாம்ல நான் கணக்குல, 89 மார்க் தான். நீ எவ்வளவு தெரியுமா... ஞாபகமிருக்கா?'' என்று என் முகத்தையே பார்த்தான் கிருஷ்ணமூர்த்தி.
நான் மெல்ல புன்னகைத்தபடியே,
""94 மார்க்,'' என்றேன்.
""பாத்தியா... அப்பவே நீ சரியான பிடிவாதக்காரன் தான். இவனும், என்னை போல் ஒரு ஸ்டூடன்ட். இவன் கிட்ட ஏன் கேட்கணும். நம் கவுரவத்தை, நாம ஏன் விட்டுக் குடுக்கணும்கிற சிந்தனையெல்லாம் அப்பவே உங்கிட்ட இருந்திருக்கு. அது இப்பவும் உங்கிட்ட இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்.''
""இப்பவுமா... என்ன சொல்றே நீ?''
""நீ, கதை, கவிதை, கட்டுரையெல்லாம் எழுதுறியா?''
""ஆமாம். அடிக்கடி இல்லேன்னாலும், எப்பவாவது எழுதுவேன். ஏன் கேட்குற?''
""நம்ம பிரண்ட் பாலுவும், விஜயரெங்கமும் சொல்லித்தான், நீ கதை எழுதுற விஷயம் எனக்கு தெரிஞ்சது... நானும் அப்பப்போ படிக்கறது தான். <உன்னோட பெரும்பாலான கதை, கவிதைல, சமூகத்தின் அவலத்தைக் கண்டிச்சி, எதிர்த்து குரல் கொடுக்கிறே... லஞ்சம் கொடுத்தாவது, சிபாரிசு பிடித்தாவது, காரியத்தை சாதிச்சுக்கிற மனிதனின் மனோபாவத்தை வெறுக்கிறே... வரதட்சணை பத்தியும், பெண் விடுதலை பத்தியும், காரசாரமா எழுதிட்டு வர்றியே, அதைச் சொல்றேன்.''
""ஏதோ, மனசுக்கு நல்லதுன்னு படுறதை எழுதிட்டு வர்றேன்!''
""நம்ம பிரண்ட்ஷிப் சர்கிள்ல, நீ ஒருத்தன் தான், இந்த லயன்ல புகுந்திருக்கே. கீப்பிட்டப்... நல்லா எழுது... நிறைய எழுது...'' என்று அவன் சொல்ல, கைபேசி அவனை அழைத்தது.
""யெஸ்... எல்லாம் வந்தாச்சா. இதோ நான் வர்றேன். ஓ.கே.,'' என்றவன், என்னைப் பார்த்து, ""சாரி மீனாட்சி... ஒரு முக்கியமான போர்டு மீட்டிங். எப்போ முடியும்ன்னு தெரியலை. வந்ததிலேர்ந்து உன்கிட்டயே பேசிக்கிட்டிருந்துட்டேன். உன் மகன் கிட்ட பேசவே இல்லை... சாரி... உன் பேரென்னப்பா சொன்னே?''
""செல்வமுருகன்!'' என்றான் மகன்.
""என்ன செய்றே?''
""ஹுண்டாய்ல இன்ஜினியரா இருக்கேன்!'' என்றான். எனக்கு அதிர்ச்சி. ஏன் இப்படி சொன்னான். நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விட்டானே!
""ஓ.கே., உங்களை அப்புறமா சந்திக்கிறேன்,'' என்று சொல்லி புறப்பட்டான்.
நாங்களும், அறையை விட்டு வெளியே வந்தோம்.
""என்ன செய்றேன்னு கேட்டப்ப, "வேலை இல்லை சும்மாத்தான் இருக்கே'ன்னு சொல்லாம, ஏன் ஹுண்டாய்ல ஒர்க் பண்றதா பொய் சொன்னே?'' என்று, மகனைக் கேட்டேன்.
""உங்களை பத்தி நிறைய சொன்னார்... பழைய நினைவுகளையெல்லாம் சின்ன பிள்ளை போல் சந்தோஷமா பேசினார்... உங்க கதை, கவிதைகளை, நான் கூட இந்த அளவுக்குப் படிச்சி புரிஞ்சிக்கிட்டதில்லை. ஆனா, அவர், உங்க கேரக்டரையே சொல்லி விட்டார். தன் மானத்தை விட்டுக் கொடுக்காதவர், உதவின்னு யார்கிட்டேயும், போய் நிக்க மாட்டாருன்னு நிறைய சொன்னார்...
""உங்க மேல ஆழ்ந்த நட்பு மட்டுமில்ல... ஒரு விதமான மதிப்பும் வச்சிருக்கார். அப்படிப் பட்டவர்கிட்ட, "என் பிள்ளை வேலையில்லாம இருக்கான். ஏதாவது வேலை போட்டு குடு'ன்னு கேட்டு, அவர் மனசுல உங்களைப் பத்தி வச்சிருக்கும் மதிப்பை குறைச்சிக்க வேணாம்ன்னு நெனைச்சேன்பா. வாங்க போலாம். இன்னும் முயற்சி செஞ்சா கிடைக்காமலா போயிடும்,'' என்ற மகனை, பெருமையாய்ப் பார்த்தேன்.
இருப்பினும், மகன் அவசரப்பட்டு விட்டானோ என்ற எண்ணமும், ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்தது எனக்குள்.
***

மீனா சுந்தர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயா - சென்னை,இந்தியா
01-மார்ச்-201216:27:04 IST Report Abuse
ஜெயா Nowadays are the kids really respecting parents......!!!!! A very good story. Hope this story should be inspired for those who dont respect their parents.....
Rate this:
Share this comment
Cancel
பத்மா - சென்னை,இந்தியா
01-மார்ச்-201212:56:36 IST Report Abuse
பத்மா நான் நேசிப்பவையில் மிக உயர்ந்தது நட்பு, நான் என் நட்பு வட்டத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பவள். இந்த கதை அருமை நட்பிற்கு மரியாதை.... நம் தன்மானத்தை எக்காலத்திலும் இழக்க கூடாது...... பத்மா.......
Rate this:
Share this comment
Cancel
Mahesh - Chennai,இந்தியா
01-மார்ச்-201211:22:32 IST Report Abuse
Mahesh Really Super...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X