நம்ம கிராமம்! - சில பின்னணி தகவல்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் தயாரித்த, முதல் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் என்ற சாதனையை செய்திருப்பவர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மோகன் சர்மா. 150 படங்களுக்கு மேலாக, ஹீரோ மற்றும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் மோகன் சர்மா, தேசிய அளவில், சமீபத்தில் ஒரு சாதனை படைத்திருக்கிறார்.
இவர் கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்து, தயாரித்த, நம்ம கிராமம் தமிழ்ப்படம், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படத்தில் நடித்ததற்கு, 2010 ம் ஆண்டுக்கான சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது, நடிகை சுகுமாரிக்கும், சிறந்த உடை அலங்காரத்துக்கான விருது, இந்த்ரன்ஸ் ஜெயனுக்கும் அளிக்கப்பட்டன.
இதைத் தவிர, கேரள அரசின், 2010 க்கான திரைப்பட விருதுகளில், கிராமம் (மலையாளம்) படத்தின் கதையை, சிறந்த திரைப்படக் கதை என்று தீர்மானித்து, அதற்கான பரிசை, மோகன் சர்மாவிற்கும், அப்படத்தில், ஒரு பாட்டு பாடிய, எம்.பாலமுரளி கிருஷ்ணாவிற்கு, சிறந்த பின்னணி பாடகர் விருதையும் அளித்திருக்கிறது.
தேசிய விருதுகள் மற்றும் கேரள மாநில விருதுகள் பெற்றிருக்கும் மகிழ்ச்சியில், நம்ம கிராமம் படம் உருவானது பற்றிய சுவாரசியமான தகவல்களை, நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மோகன் சர்மா:
கேரளாவிற்கு குடிபெயர்ந்த, தமிழர்களின் கலாசாரத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கும் கதையே, நம்ம கிராமம் படத்தின் கதை. எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை விளக்குகிறது. அப்போது, பாலக்காடு பகுதிகள், மதராஸ் மாகாணத்தில் இருந்தன. அங்கு வசிக்கும் பிராமண சமுதாயத்தை சுற்றி வரையப்பட்ட கதை. இது, 1935 முதல், 1947 வரை குறிப்பாக, இந்தியா சுதந்திரம் பெறுகிற தினத்தன்று படம், முடிவது போல் அமைக்கப்பட்டது.
பத்து வருடத்திற்கு முன், நான் இந்தக் கதையை உருவாக்கினேன். திரைப்படத் துறையைச் சேர்ந்த, பல நண்பர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இக்கதையை படமாக்க கேட்டனர். நான் ஒப்புக் கொள்ளவில்லை, முடியும் போது, நானே டைரக்ட் செய்து, தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.
இக்கதை, அதில் வரும் முக்கியமான பாத்திரங்கள், என்னோடு ஐக்கியமானவர்கள். திரைப்படத் துறையில், என் முப்பது வருட சம்பாத்தியத்தை, சேமிப்பை வைத்து, இந்த படத்தை தயாரித்தேன். கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும், செதுக்கி, மெருகூட்டி உருவாக்க, மூன்று வருட உழைப்பு தேவைப்பட்டது.
மணி அய்யர் என்று அழைக்கப்படும், ராவ் பகதூர் சுப்பிரமணிய சர்மா, பாலக்காடு அருகே உள்ள, அந்த கிராமத்தின் அக்ரஹாரத்தில் பெரிய மனிதர்; ஆச்சாரமான பழைய சம்பிரதாயங்களில் ஊறிப் போனவர்.
அவரது ஒரே மகன் கிருஷ்ணசுவாமி என்ற கண்ணன். சமூகத்தில், முற்போக்கான மாற்றங்கள் கொண்டு வர துடிக்கும் இளைஞன். தேசப்பற்று, அவன் மூச்சு. தாய் லட்சுமி மீது பாசமிக்கவன். கண்ணனின் அத்தை மகள் துளசி, பத்து வயதிலேயே திருமணமாகி, உடனே கணவனை இழந்த இளம் விதவை. விதவை என்பதால், வீட்டுக்கு பின் பக்கமே, துளசி இருக்க வேண்டும்; வெளியில் வரக் கூடாது என்பது மணி அய்யரின் கட்டுப்பாடு.
பெரிய கூட்டுக் குடும்பத்தில், கண்ணனும், துளசியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கின்றனர். துளசிக்கு இசை மீது உள்ள ஆர்வத்தை, ஊக்குவிக்கிறான் கண்ணன். மணி அய்யருக்கு, அவரது அந்தஸ்துக்கு ஏற்றவாறு, கிராமத்திற்கு வெளியே, பார்கவி என்ற பெண்ணோடு தொடர்பு உண்டு.
மணி அய்யரின் தாய், அம்மணி பாட்டி சுகுமாரி. இளம் வயதிலேயே கணவரை இழந்து. அந்த பெரிய வீட்டின் பின்புறத்திலேயே இருந்து, வீட்டு வேலைகளையும், மாடுகளையும் பராமரித்து வருபவர். தன் மகனுக்கு வெளியே, ஒரு தொடர்பு இருப்பதை, அறவே வெறுத்தாலும், மணி அ#யர், அதை சட்டை செய்வதில்லை.
வீட்டில் ஒரு கைம்பெண், தலையை மொட்டை அடிக்காமல் இருப்பது, ஆச்சார குறைவு. அதனால் தான், உன் மகனுக்கு இன்னும் திருமணம் நடக்காமல், தள்ளிப் போகிறது என்று, மணி அய்யரிடம், குடும்ப ஜோசியர் சொல்கிறார். இளம் பெண் துளசிக்கு, மொட்டை அடித்துவிட அவர் முடிவு செய்கிறார்.
துளசிக்கு இந்த அநியாயம் நடக்கக் கூடாது என்று, அம்மணி பாட்டி, எவ்வளவோ முயற்சித்தும், மகன் கேட்கவில்லை. அந்த சடங்கை நடத்தக் கூடாது என்பதற்காகவும், இளம் பெண்ணை, அந்த அவலமான கோலத்தில் பார்க்க விரும்பாத கண்ணன், துளசிக்கு குங்குமம் இட்டு, அவளை தன் மனைவியாக்கிக் கொள்கிறான்.
எதுவும் செய்ய முடியாமல், உறைந்து போகிறார் மணி அய்யர். கண்ணனும், துளசியும் புது வாழ்வைத் தேடி வெளியேறுகின்றனர். அன்று தான், நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. புது விடியல், இந்தியாவிற்கு மட்டுமல்ல, அந்த இளம் ஜோடிக்கும் தான்! இது தான், இப்படத்தின் கதை.
நெடுமுடி வேணு, ஒய்.ஜி.மகேந்திரா, நளினி, பாத்திமா பாபு, ரேணுகா, ப்ரியா ஆகியோரும், முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
"சுக்கம்மா (சுகுமாரியை அப்படித்தான் நெருக்கமாக இருப்பவர்கள் அழைக் கின்றனர்). "உங்களுக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருப்பது, பற்றி மிகவும் மகிழ்ச்சி. அதற்கு மிகவும் தகுதியானவர் நீங்கள்...' என, முதல்வர் ஜெயலலிதா மனதார பாராட்டியுள்ளார்.
பாலக்காடு அருகே, தத்தமங்கலம் என்ற சிறிய கிராமத்தில் தான், நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படத்தில் வரும் வீடுகள், இன்றும் அப்படியே இருப்பவை; செட் போடவில்லை. கிராமத்தில் இருக்கும் வீடுகள், குளம், தெரு, ஆகிய இடங்களில், படப்பிடிப்பு நடத்தினோம்.
கிளைமாக்ஸ் காட்சி படமாக்கும் போது, ஆக., 15ல், 1947ல், இந்தியா சுதந்திரம் பெறும் நாள் என்பதால், அதை கொண்டாடும் வகையில், தெரு முழுவதும் ஆயிரக்கணக்கான கொடிகள், தோரணங்கள் கட்டினோம்.
அப்போது, ஒரு பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் ஷூட்டிங் நடத்திய சமயம், இங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டிருந்தது. "காங்., கட்சியின் கொடிகளை கட்டி, ஷூட்டிங் செய்கின்றனர். இது காங்கிரசார் செய்யும் சதி. இந்த படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்'... என்று, கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
அசோக சக்கரத்தை மையமாகக் கொண்ட மூவர்ண கொடி, நம் நாட்டின் தேசிய கொடியாக அறிவிக்கப்படுவதற்கு முன்,
கை ராட்டினம் பதித்த கொடிதான், தேசிய கொடியாக இருந்தது என்பது, சரித்திரம் கூறும் உண்மை. இதை, நாங்கள் எடுத்துச் சொல்லியும், அந்த தொண்டர்கள் சமாதானம் அடையவில்லை.
கேரள மாநிலத்தின், கல்வி கலாசார அமைச்சர் எம்.ஏ.பேபியை, எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும்; மதிப்புக்குரிய நண்பர். அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன். பிரச்னையையும், என் விளக்கத்தையும், உடனே புரிந்து கொண்டு, கம்யூனிஸ்ட் தொண்டர்களிடம் உடனே பேசி, அவர்களுக்கு விளக்கினார். சில மணி நேர தாமதத்திற்கு பின், படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினோம். அந்தக் காலகட்டத்தில் இருந்தது போன்று, சில மாட்டு வண்டிகளை, இந்தப் படத்திற்காக புதியதாக உருவாக்கினோம்.
என்று கூறி முடித்தார், மோகன் சர்மா.
***

* தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு, 2002-03 ஆண்டுகளில் தலைவராக பதவி வகித்தார் மோகன் சர்மா. இந்த பிலிம் சேம்பரின் தலைவராக இருந்தவர்களில், மோகன் சர்மா மட்டுமே நடிகர்.
*தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, மோகன் சர்மா இருந்த போது, அப்போது தகவல் தொடர்பு துறைக்கு அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்து, "தாதா பால்கே சாஹிப்' விருதுகளைத் தேர்ந் தெடுக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதுவரை, அந்த விருது பெற்றவர்களில் இருந்து அழைக்கப்படும் சிலரே, யாருக்கு விருது என்று முடிவு செய்தனர். மோகன் சர்மாவின் நியாயமான கோரிக்கையை அமைச்சர் ஏற்று, தேர்ந்தெடுக்கும் கமிட்டியை மாற்றி அமைக்க ஒப்புக் கொண்டார். பின், தயாரிப்பாளர் ராமா நாயுடு, இயக்குனர் கே.பாலசந்தர், இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், கேமராமேன் மூர்த்தி போன்றவர்களுக்கு, இந்த உயர்ந்த விருது கிடைத்தது. உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டும் அளிக்கப்படும் விருது என்பதால், இயக்குனர் ஸ்ரீதர், நடிகை பானுமதி போன்றோருக்கு இந்த விருது கிடைக்கவில்லை.
*தேசிய திரைப்பட விருதுகளை முடிவு செய்யும் நடுவர் குழுவில் 2000 - 2002, 2007ல் மத்திய அரசின் அழைப்பை ஏற்று, பங்கேற்றார் மோகன் சர்மா. தகுதியுள்ள படங்கள், கலைஞர்களுக்கு, அவர்களின் திறமைகள், சிறப்புகளை எடுத்துச் சொல்லி, வாதாடி, தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்திருக்கிறார். நடுவர் குழுவின் பணிக்காக, ஒவ்வொரு முறையும் தொடர்ந்து, இருபது நாட்கள் இருக்க வேண்டியிருக்கும்.
* மோகன் சர்மாவுக்கு தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும், மணிப் பிரவாளமாக பேசவும், எழுதவும் தெரியும்.
* கன்னடத்தில் ஏழு, மலையாளம், தெலுங்கில் தலா நான்கு, தமிழில் இரண்டு என, மொத்தம் பதினேழு படங்களை இதுவரை தயாரித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகள் நான்கிலும், திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் ஒரே தயாரிப்பாளர் இவர்.
* மோகன் சர்மாவிற்கு, சங்கீதத்தில் நல்ல பயிற்சி உண்டு; தான் நடித்த பல படங்களில், 25 பாடல்களை அவரே பாடியிருக்கிறார்.
*"ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சென்ட்ரல்' என்ற கிளப்பிற்கு, மோகன் சர்மா தலைவராக இருந்திருக்கிறார். ரோட்டரி சங்கத்தின் தலைவராக பணி ஆற்றிய, முதல் நடிகர் இவராகத் தான் இருக்கும்; அமெரிக்காவில் சிகாகோ நகரில், ரோட்டரி சர்வதேச சங்கம், முக்கிய கூட்டம் நடத்தியது. உலகம் முழுவதும் பல நாட்டிலிருந்து ரோட்டரி கிளப்களின் தலைவர்கள், நாற்பது பேரை வரவழைத்தனர். இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே பிரதிநிதி மோகன் சர்மா தான். இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின், ரோட்டரி சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று, கொள்கைகளை சிகாகோ கூட்டத்தில் முடிவு செய்தனர்.
*பல ஆண்டுகளாக, கோலங்கள், குலவிளக்கு, முந்தானை முடிச்சு போன்ற, மெகா தொடர்களில், மோகன் சர்மா முக்கியமான பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
***
எஸ். ரஜத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தண்டபாணி - சென்னை,இந்தியா
27-பிப்-201213:27:51 IST Report Abuse
தண்டபாணி டியர் ரசத் வெல்டன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X