திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

ஜவஹர்லால் நேரு, தன் இறுதி விருப்பமாக எழுதி வைத்தது...
இந்திய மக்களிடமிருந்து, நான் அளவற்ற அன்பையும், பாசத்தையும் பெற்றுள்ளேன். என்னால் செய்ய முடிந்தது எதுவும், அவர்கள் எனக்கு அளித்ததில் சிறு பகுதி கூட, ஈடு செய்ய முடியாது. அன்பெனும் மதிப்புமிக்க ஒன்றுக்குப் பதிலாக, திருப்பித் தரக்கூடிய பொருள் ஏதும் கிடையாது. எஞ்சியுள்ள என் வாழ்நாளில், என் மக்களுக்கும், அவர்கள் காட்டும் அன்புக்கும், தகுதியற்றவனாக ஆக மாட்டேன் என்ற நம்பிக்கையை தெரிவிப்பதைத் தவிர, வேறு எதையும் செய்ய இயலாது.
எண்ணற்ற என் தோழர்களுக்கும், சக ஊழியர்களுக்கும், என் மிக ஆழ்ந்த நன்றி. பெரும் பணிகளில் நாங்கள் சேர்ந்து பங்கேற்றிருக்கிறோம். அவற்றின் வெற்றி களையும், தவிர்க்க முடியாத துயரங்களையும், பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
நான் இறந்த பின், எனக்காக எவ்வித மதச் சடங்குகளும் செய்யப்படுவதை நான் விரும்ப வில்லை என்பதை, மனப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறேன். அத்தகைய சடங்குகள் எவற்றிலும், எனக்கு நம்பிக்கை இல்லை. மரபு என்று அதற்கு உடன்படுவது வெளி வேடம். அது நம்மையும், மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்ளும் செயல்.
நான் இறந்தவுடன், என் உடல் எரிக்கப்பட வேண்டும். வெளிநாட்டில் நான் இறந்து விட்டால், அங்கேயே நான் எரிக்கப்பட்டு, என்னுடைய எலும்பும், சாம்பலும் அலகாபாத்துக்கு அனுப்பப் பட்டு, அதில், ஒரு சிறு கைப்பிடி அளவு, கங்கையில் கரைக்கப்பட வேண்டும். என் விருப்பத் திற்கு மத சம்பந்தமான அர்த்தம் எதுவும் கிடையாது.
எஞ்சிய பெரும் பாகத்தை, கீழே குறிப்பிட்டுள்ளபடி செய்ய வேண்டும். அந்த அஸ்தியின் சிறு பகுதி கூடப் பாதுகாக்கப்படக் கூடாது. என் சிறு பிராயம் முதற்கொண்டே கங்கை, யமுனை நதிகளிடம் எனக்குப் பற்றுதல் ஏற்பட்டுவிட்டது. நான் வளர வளர, அவற்றின் மீதான பற்றும் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் தொன்மையான பண்புக்கும், நாகரிகத்திற்கும், கங்கை நதி ஒரு சின்னமாக இருக்கிறது. இந்தியாவின் கலாசாரம் எனும் பரம்பரைச் சொத்துக்கு, நான் செலுத்தும் இறுதி வணக்கமாக, அலகாபாத்தில் ஓடும் கங்கையில், என் அஸ்தியின் ஒரு பிடியளவு கரைக்கப்பட்டு, அது இந்தியாவின் பெருங்கடலில் போய்ச் சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இருப்பினும், என் அஸ்தியின் பெரும் பகுதி, வேறு வழியில் செலவழிக்கப்பட வேண்டும். அது விமானத்தில் விண்ணில் கொண்டு செல்லப்பட்டு, நாட்டின் வயல்களில் எல்லாம் தூவப்பட வேண்டும் என்றும், விவசாயப் பெருமக்கள் உழைக்கும் கழனிகளில், மண்ணோடு மண்ணாகக் கலந்து, இந்திய மண்ணுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
— ஜவஹர்லால் நேரு, ஜூன் 21, 1954.
***

முன்பொரு முறை சீனாவில் இருந்த நம் இந்தியத் தூதுவர், சீனத் தலைவர் "மா - சே - துங்'கை, ஒரு விருந்துக்கு அழைத்தார். வருவதற்கு ஒப்புக் கொண்டார் மா. குறிப்பிட்ட தினத்தில், சரியான நேரத்திற்கு, மாவை வரவேற்பதற்காக, மற்ற அதிகாரிகளோடு, தன் அலுவலக வாசலில் தயாராக வந்து நின்று கொண்டார் நம் தூதுவர்.
முதல் கார் வந்தது; அதில் மா இருந்தார். ஆனால், அந்தக் கார் நிற்காமல், நேரே சென்று விட்டது. இரண்டவதாக வந்த காரிலிருந்து இறங்கினார், இன்னொரு மா! நம் அதிகாரிகளுக்கு ஒரே ஆச்சரியம். "இப்போதுதானே முதல் காரில் போனீர்கள்?' என்று மாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு மா, "முதல் காரில் போனது நான் அல்ல; என்னை மாதிரியே உள்ள ஒரு டூப். என் பாதுகாப்புக்காக அப்படி ஒரு ஏற்பாடு!' எனக் கூறியுள்ளார்.
***

பள்ளிக்கூடத்தில், நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள், இந்திய தேசத்துக்கு ஒரு ஆபத்து வந்தது. "இந்தியா கிணற்றில் விழுந்து விட்டது...' என்று, ஒரு பரிதாபகரமான கூக்குரல் எழுந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாரும் ஓடிப்போய்ப் பார்த்தோம்.
கிணற்றில் நெருக்கடியான நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல்... எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தனர். நான், அந்த நாளில் கேட்ட சில தேசிய பிரசங்கங்களில், "தேசத்துக்காக நீங்கள், ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்ட துண்டா?' என்று, நம் தலைவர்கள் அலறியது, அச்சமயம் என் ஞாபகத்துக்கு வந்தது.
உடனே, "இந்தியாவுக்காக துரும்பை எடுத்துப் போடுவது என்ன... ஒரு கல்லைத் தூக்கியே போடலாம்...' என்று முடிவு செய்தேன். கிணற்றில் விழுந்து, முழுகாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவின் பேரில், ஒரு கல்லைத் தூக்கிப் போட்டேன். இந்திய தேசம் ஒரு, "கீச்' சத்தம் கூடப் போடாமல், தண்ணீரில் மூழ்கிப் போய் விட்டது.
இவ்வாறு இந்தியாவுக்கு சேவை செய்ததினால், நான் அச்சமயம் அடைந்த கஷ்ட, நஷ்டங்களை சொல்ல முடியாது. அன்று முழுவதும், ஆசிரியர் கட்டளைப்படி, பெஞ்சின் மேல் நிற்கும் கஷ்டம் ஏற்பட்டது. அல்லாமலும், ஒரு புதிய இந்திய தேசப்படம் வாங்கி வந்து கொடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம், மூன்றரை ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.
— "கல்கியின் நகைச்சுவை' நூலிலிருந்து
***

சென்னையில் பாரதியார், "இந்தியா' என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். ஆசிரியர் மற்றும் வெளியிடுபவர் என்று சீனிவாசன் என்பவர் பெயரை போட்டு இருந்தார். சீனிவாசன், இந்தியா பத்திரிகையில், குமாஸ்தா வேலை பார்த்து வந்தார். அப்பத்திரிகையில், பாரதியார் அரசாங்கத்தைக் கடுமையாகத் தாக்கி எழுதியதால், போலீஸ் அவரைக் கைது செய்ய வந்தது.
போலீசாரிடமிருந்து வாரன்ட்டை வாங்கிப் பார்த்த பாரதி, தாம் ஆசிரியரல்ல என்றும், தன் பெயர் வாரன்ட்டில் இல்லை என்றும் கூறிக் கொண்டி ருக்கையில், சீனிவாசன் அங்கு வந்து, "என்ன விஷயம்?' என்று விசாரித்தார். விவரம் அறிந்ததும், போலீஸ், சீனிவாசனைக் கைது செய்து, அழைத்துச் சென்றது.
நீதிமன்ற விசாரணையில், தாம் ஆசிரியரல்ல என்றும், பாரதியாரே உண்மை யான ஆசிரியரென்றும், தாம் ஒரு குமாஸ்தா வாகவே இருந்து வந்ததாகவும், தமக்கு கட்டுரை எழுத சக்தி கிடையாது என்றும் தெரிவித்துக் கொண் டார் சீனிவாசன்.
ஆயினும், அவருக்கு ஐந்து வருட கடுங்காவல் தண்டனை அளித்து, அந்தமான் சிறைக்கு அனுப்பினர். பாரதியார் புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார்.
இது சம்பந்தமாக, "சுதேச மித்திரன்' நவ., 16, 1908ல் துணைத் தலையங்கத்தில் வந்துள்ள செய்தி...
சென்னையில் வெளியிடப் பட்டு வந்த, "இந்தியா' என்ற வாராந்திர தமிழ்ப் பத்திரிகையில், சென்ற மார்ச் மாதம் முதல், ராஜத்துவேஷமான வியாசங்கள் தோன்றி வருவதன் பேரில், ராஜத்துவேஷக் குற்றம் சாட்டி, அதை அச்சிட்டு பிரசுரப்படுத்துவோரான,ஸ்ரீநிவாஸய்யங்காரைக் கைதிப்படுத்தி, விசாரணை செய்ததில், ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து வருஷ, "தீவாந்திர சிஷை' விதிக்கப்பட்டது.
"இப்படி விதிக்கப் படு மென்றே பொதுவாக எதிர் பார்க்கப்பட்டிருந்தது. ராஜத் துவேஷக் குற்றம் செய்ததாக அரசாங்கத்தார், யாரை நினைக் கின்றனரோ அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதும், நீதிபதிகள் கொடுந்தண்டனை விதிப்பதும், இப்போது சாதாரணமாகி விட்டது.
"ஸ்ரீநிவாஸய்யங்கார் குற்றமுள்ள வியாசங்களை எழுதினவரல்ல; எழுதியவரும், அந்தப் பேப்பருக்கு சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போனார். ஸ்ரீநிவாஸய்யங்கார் பெயர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர் அகப்பட்டுக் கொண்டாரேயன்றி, வேறில்லை.
"இந்தியா' பத்திரிகையில் ராஜத்துவேஷக் குற்றமுள்ள வியாசங்கள் தோன்றின துவக்கத்திலேயே அரசாங்கத்தார் எச்சரித்திருந்தால், இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும், புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாசங்கள் தோன்ற இடம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்களால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X