கைதிகளின் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் தமிழர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கைதிகளின் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் தமிழர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

"மணி மாமா, எங்கே போயிருந்தீங்க, பார்க்கவே முடியலையே...' என்று நான்கு வயது கோதாவரி கேட்ட கேள்விக்கு, "ஒரு வேலையாக வெளியூர் போயிட்டேன்; இனி இங்க தான் இருப்பேன்...' என்று புன்முறுவலுடன் பதில் அளித்துக் கொண்டே, அந்த குழந்தைகள் காப்பகத் திற்குள் நுழைந்தார் மணி.
சென்னையை அடுத்துள்ள வந்த வாசியைச் சேர்ந்தவர் வெங்கடாராகவாச்சாரி மணி. பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில், கைதிகளின் குழந்தைகளுக்காக, ஒரு ஆதரவு மையத்தை நடத்தி வருகிறார்.
மையத்தின் சேவை குறித்து மணியிடம் கேட்டபோது...
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவன்.
கடைசியாக பெங்களூருவில், உதவி பொது மேலாளராக இருந்தேன். வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியில், சென்ட்ரல் ஜெயிலை கடக்கும் போது, நான் பார்த்த ஒரு காட்சியே, இந்த அமைப்பை உருவாக்கியதற்கான காரணம்.
தினசரி ஒரு கூட்டம், ஜெயில் வாயிலில் நிற்கும். கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் அவர்கள். பல குழந்தைகளும் நிற்பர். அவர்கள், தண்டனை கைதிகளின் குழந்தைகள். இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று, எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். இப்படி ஒரு சூழ்நிலையில், அந்த குழந்தைகள் வளர்ந்தால், அவர்களும் குற்றவாளியாகத் தான் உருவாவார்கள் என்பதால், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன் பயனாகவே சொசைட்டீஸ் கேர் (சோகேர்) என்ற இந்த அமைப்பு கடந்த, 1999ம் ஆண்டு உருவானது.
நான் ஓய்வு பெற்றபோது கிடைத்த, மூன்று லட்சம் ரூபாயை கொண்டு, என் வீட்டையே ஆதரவற்றோர் நிலையமாக மாற்றினேன். ஓய்வு பெற்ற சிறைத்துறை, டி.ஜி.பி.,யின் வழிகாட்டு தலுடன், முதன் முதலில், நானும் என் மனைவி சரோஜாவும், இரண்டு ஆண் குழந்தை களை கொண்டு, துவக்கி னோம். தற்போது, தண்டனை குற்றவாளி களின், 165 குழந்தைகள் இங்கு வளர்கின்றனர். உணவு, உடை, கல்வி, பொழுது போக்கு என அனைத்துமே இலவசம்... என்றார்.
தந்தையோ, தாயோ, குற்றவாளியாக சிறையில் உள்ள நிலையில், குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, மணி கூறியது ஆச்சரியப் படுத்தியது...
கோலார் தங்க வயல் பகுதியைச் சேர்ந்தவர் தண்டுபால்யா. மிக கொடிய செயல்களில் ஈடுபட்டவர். ஆயுள் தண்டனை கைதி. இவரது மகன் சிவா இங்கு வளர்கிறான். அவனது லட்சியம், பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான். அதற்காக, தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறான். இதே போல், பல குழந்தைகள், பெரிய குறிக்கோளுடன் கல்வி கற்று வருகின்றனர்... என்றார்.
படிப்பில் கெட்டிக்காரத்தனமாக உள்ள குழந்தைகளை, நகரிலேயே சிறந்த பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம். பள்ளி செல்ல முடியாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்களை வைத்து கல்வி கற்றுத் தருகிறோம். குழந்தைகளை பக்குவப்படுத்த, ஆன்மிகம் நல்ல வழி. இதற்காகவே, அருகில் உள்ள கோவிலுக்கு, குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு சில குழந்தைகள் விஷ்ணு சகஸ்ரநாமம் கற்றுக் கொள்கின்றனர்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை, சிறையில் உள்ள தந்தை அல்லது தாயை பார்க்க, குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். எக்காரணத்தை கொண்டும், பெற்றோர் தங்கள் இருப்பிடங் களுக்கு, குழந்தைகளை அழைத்துச் செல்வதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அந்த சூழ்நிலை, குழந்தைகளின் மன நிலையை மாற்றி விடக் கூடும் என்பதே இதற்கு காரணம்... என்று கூறி, புன்னகைக்கிறார் மணி.
போற்றப்பட வேண்டிய இந்த மனிதாபிமான சேவையை, அண்டை மாநிலத்தில் செய்து வரும் மணி ஒரு தமிழர் என்பதால், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட்டு கொள்ளலாம்.
***

எஸ். உமாபதி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X