புதிதாக ஒருவன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

விடிந்து கண் விழித்தபோது , "அப்பாடா...' என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில் கழித்து விட்டால் போதும்.
முழுதாக இரண்டு நாட்கள் விடுமுறை.
யப்பா, எவ்வளவு செய்யலாம் இந்த இரண்டு நாட்களில்?
முதலில், இப்படி காலை ஆறரை மணிக்கு எழுந்திருக்க வேண்டாம். அவசரக் குளியல் இல்லை. அப்பாவுக்கு பயந்து, இட்லிகளை விழுங்க வேண்டியதில்லை. கல்லூரி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற அந்த கட்டடங்களையும், மைதானத்தையும், வகுப்பறைகளையும் நினைத்தாலே, தண்ணீர் கூட இறங்குவதில்லை. "ம்... இன்னும் நான்கு வருடங்களை அந்த சிறைச்சாலையில் கழிக்க வேண்டும் என்று நினைக்கும்போது, தூக்கு போட்டு தொங்கலாம் போல இருக்கிறது...' என்று ஒரு முறை சொன்னான் கேசவன்.'
""அருண்...'' அப்பா அழைத்தார்.
படுக்கையை வேகவேகமாக சுருட்டினான். அதை விட வேகமாக, குளியலறைக்கு போய் முகம் கழுவினான். அம்மாவின் புடவைத் தலைப்பில் ஈரத்தைத் துடைத்துவிட்டு, விரல்களால் தலையைக் கோதிக் கொண்டு அப்பாவிடம் விரைந்தான்.
""சொல்லுங்கப்பா...'' என்றான் அடங்கிய குரலில்.
""இன்னைக்குத்தானே?'' என்றார் தினசரியை விரித்தவாறு.
""என்னதுப்பா?''
""என்னதுப்பாவா?'' என்று தூசியை போலப் பார்த்தார். ""முதல் டெஸ்ட்டுடா...இன்னைக்கு வருதில்ல மார்க்கு?''
""ஆ... ஆமாம்பா...'' என்று எச்சில் விழுங்கினான். உள்ளே முதல் உதைப்பு ஆரம்பித்தது. "சே... இந்த பரிட்சைகளைக் கண்டுபிடித்தவன் எவன்?' என்று கோப அலை எழுந்து அடங்க, அவன் வேகமாக குரலில் பவ்யத்தை சேர்த்துக் கொண்டு சொன்னான்... ""இன்னைக்குத்தாம்பா...''
""நல்லது... நல்லா எழுதியிருக்கிறதா சொன்னே... எண்பது பர்சென்ட் வர வாய்ப்பு இருக்கா?''
""எண்பதா?'' மறுபடி எச்சில் விழுங்க வேண்டியிருந்தது. ""முதல் டெஸ்ட்டுப்பா... ஸ்கூல் மாதிரி இல்ல... பாக்கலாம்பா!''
""ஓகோ... பாக்கலாம்ன்னா சொன்னே... பெரிய சேர, சோழ, பாண்டிய வம்சம்ன்னு நெனப்பா உனக்கு... பாக்கலாம்ன்னு சொல்ற..., ஏண்டா?'' என்றார் எரிச்சலுடன்.
""இல்லப்பா அப்பிடி இல்லப்பா...'' என்றான் என்ன சொல்வதென்று தெரியாமல். ""நல்லாத்தாம்பா எழுதியிருக்கேன்... ஆனா, எண்பது வருமான்னு தெரியலப்பா.''
""அதெப்பிடி தெரியாம போகும்... எல்லா கேள்விக்கும் சரியா எழுதினா, அவங்க மார்க் போட்டுத்தானே ஆகணும்?'' என்றவர், அவன் பதில் சொல்வதற்குள் பட்டென்று தினசரியை மூடிவிட்டு எழுந்தார்.
""டேய்... நல்லா மனசுல வெச்சுக்கோ... இந்த நாலு வருஷமும் உனக்கு அக்கினி பரிட்சை மாதிரி... நல்லபடியா தாண்டணும். இல்லேன்னா நெருப்புல விழுந்துடுவடா... புரிஞ்சுக்க... ஏய் கோமதி... தண்ணி எடுத்து வை குளிக்க... இன்னிக்கு பேக்டரில நெறைய வேலை இருக்கு... வெளிநாட்டுல இருந்து ஆளுங்க வர்றாங்களாம்...'' நகர்ந்தார். அவன் பெருமூச்சு விட்டான்.
குளிக்கப் போய் விட்டார் என்று உறுதிப் படுத்திக் கொண்டு, அம்மாவிடம் போனான் பாய்ச்சலாக.
""என்னம்மா நெனச்சுகிட்டிருக்கார் உன் வீட்டுக்காரர்... எண்பது, தொண்ணூறுன்னு சர்வ சாதாரணமா பேசறாரு... இதென்ன, சரோஜினியம்மாள் உயர்நிலைப் பள்ளிக்கூடமா... சுண்டல் வினியோகம் மாதிரி, மார்க்குகளை அள்ளி வீசறதுக்கு... எல்லாம் பாத்துத்தான் பண்ணுவாங்க... அதுவும் முதல் டெஸ்ட்டு!''
அம்மா சுக்குக் காபியை ஆவி பறக்க அவன் கையில் கொடுத்துவிட்டு சொன்னாள்...
""சரிடா அருண்... ஆனா, ஒண்ணு மட்டும் நீ மனசுல வெச்சுக்கடா... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதையல்டா; அதை மட்டும் வீணாக்கவே கூடாதுடா... அப்பாவோட உழைப்புடா எல்லாம்... அதுலயும் மிஷின், டர்னிங், லேபர்ன்னு கடுமையான உடல் உழைப்பு. உன் பொறுப்பை உணர்ந்து நடக்கணும்பா அருண்.''
""அட என்னம்மா நீ?'' அவன் அலுப்புடன் டம்ளரை அம்மாவின் கையில் திணித்தான். ""இது அனுபவிக்கிற வயசும்மா; கதாகாலட்சேபம் செய்யிற வயசில்ல. மிஞ்சி, மிஞ்சி போனா, என்னம்மா செய்துடப் போறோம்... புதுசா வர்ற சினிமா, வீக் எண்ட் பீச், ஓட்டல்... எப்பவாவது ஜீன்ஸ், ஷூஸ்... இதானேம்மா. என்ன தப்பு இருக்கு நீயே சொல்லு?''
""அனுபவிக்க வேண்டாம்ன்னு சொல்லலேப்பா அருண்... படிப்புலயும் கூடவே பெஸ்ட்டா இருக்கணும் இல்லயா?''
""அய்யோ அம்மா...''
""குளிச்சிட்டு வா... இட்லி, வெங்காய சட்டினி!''
""வேற என்ன இருக்கும், பர்கரா இல்ல தந்தூரியா?'' கோபத்துடன் முணு முணுத்தபடி, அவன் துண்டை இழுத்தான்.
முதல் மூன்று வகுப்புகளை அருண், சுரேஷ், டில்லி, வசந்த் ஆகிய நான்கு பேரும் "கட்' செய்து விட்டு எஸ்கேப்பானார்கள். 127 அவர்ஸ் சினிமா அட்டகாசமாக இருந்தது. அங்கேயே சைனீஸ் ரெஸ்டரென்ட்டில் அமெரிக்கன் சாப்சி சாப்பிட்டு விட்டு, கல்லூரிக்கு வந்தபோது, அவனுக்கு இதுவரை இருந்த சந்தோஷம் மறைந்து, இறுக்கமான மனநிலை ஏற்பட்டது. நண்பர்களைப் பார்த்தான். அவர்களும் சிரிப்பைத் தொலைத்திருந்தனர்.
""டின்னு கட்டிடுவான் என் அப்பன்,'' காதைக் கடித்தான் டில்லி.
""காலைல எந்திரிச்சதுமே ஆரம்பிச்சுட்டான்... இன்னைக்கு மார்க்கு வருதா, வருதான்னு... எஜுகேஷன் லோனுடா பையான்னு ஒரே புலம்பல்... சே... இந்த அப்பன்மார்களுக் கெல்லாம் ஒரு சட்டம் வரணும்டா... வயசுப் பையன்கிட்ட எப்படி பேசணும்ன்னு.''
சுரேஷ் குரலும் இறங்கியது.""எங்கப்பா வார்த்தைல காட்ட மாட்டார்... ஆனா, பெல்ட்டால விளாசிடுவார். நிஜமாவே பயமா இருக்குடா. ஹெச். ஓ. டி.,மேடம் ரஞ்சனி சொன்னபடி, இன்னைக்கு கொடுத்துடுவாங்கல்ல... மார்க் லிஸ்ட்ட?''
""ஆமாம்டா...'' என்றபோது அருண் தொண்டை அடைத்துப் போயிருந்தது. ""வெளியில தைரியமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறேனே தவிர, உள்ளுக்குள்ள உதறுதுடா... அப்பா ஒரே அட்வைஸ், அம்மா ஒரே சென்டிமென்ட்... சே!''
வகுப்பு இறுக்கமான அமைதியைத் தழுவிக் கொண்டது. எப்போதுமே மென்மையான அசைவுகளுடன் இருக்கும் போகன்வில்லா கூட, தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது. வர்ணமயமான கனவுகளும், எண்ணங்களுமாக கூடி கும்மியடிக்கும் மாணவக் கூட்டம், இன்று படப்படப்பும் அமைதியின்மையுமாக பாறை போல உட்கார்ந்திருந்தது.
""குட் மார்னிங் பாய்ஸ்....'' என்று பளீர்ப் புன்னகையும், வெளிர் பச்சை நிற கைத்தறிப் புடவையுமாக ரஞ்சனி மேடம் வந்தாள்.
""குட் மார்னிங் மேடம்...'' பதில் வந்தது ரோபோக்களிடமிருந்து.
""நீங்கள் எல்லாரும், ஆவலுடன் எதிர்பார்க்கிற உங்கள் ஆன்சர் ஷீட் உங்கள் கையில்... மார்க் லிஸ்ட் ஆப் ஆல் த சப்ஜெக்ட்ஸ்... கீர்த்தி, கேன் யூ டிஸ்டிரிப்யூட் டூ ஆல்?'' என்றாள் நிதானத்துடன்.
""யெஸ் மேடம்!'' என்று எழுந்தாள் கீர்த்தி.
அருணுக்கு வெலவெலத்தது. கடைசியில் அந்த நேரம் வந்து விட்டது. தூக்கு மர நேரம். அவனுக்கு தெரியாதா பரிட்சை எழுதிய லட்சணம்? எல்லாமே தெரிந்து செய்வதுதான். தெர்மோ டைனமிக்சும், எலெக்ட்ரானிக்சும் நிச்சயமாக நல்ல சுவாரஸ்யமான சப்ஜெக்ட்ஸ்தான். ஏன் மைக்ரோ மேதமாடிக்ஸ் கூட சவாலும், சுவையும் நிறைந்ததுதான். கொழுப்பு... அது கொஞ்சம் அளவு கூடுதலாய் இருந்ததால் தான் எல்லா பிரச்னையும். தினம் ஜஸ்ட் ஒரே ஒரு மணி நேரம் புத்தகமும், கையுமாக இருந்தால் போதும்; இப்போது காலை ஆட்டிக் கொண்டு, மார்க் லிஸ்ட்டை வாங்கி, அப்பாவின் டேபிளில் எறிந்து விடலாம். ம்... எல்லாம் லேட்!
சிதறிய எண்ணங்களில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு, மார்க் லிஸ்ட்டை பரிதாபமாக பார்த்தான்.
"என்ன... இது என்ன?' மறுபடி பார்த்தான். திகைத்தான்!
எல்லா பாடங்களிலும் எண்பது, எண்பத்தைந்து என்று எங்கோ விண்ணைத் தொட்டுக் கொண்டிருந்தன, மதிப்பெண்கள்!
திரும்பி மற்றவர்களைப் பார்த்த போது, அவர்களும் திகைப்பும், மகிழ்ச்சியுமாக திளைத்துக் கொண்டிருந்தனர்.
""யெஸ் டியர் ஸ்டூடண்ட்ஸ்...'' அவர்களை இனிமையாகப் பார்த்தாள் ரஞ்சனி மேடம்.
""உங்க எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி இவ்வளவு மார்க் வந்ததுன்னு... உண்மைதான். இது மிகைப்படுத்தினது... லீனியன்ட் வால்யூஷன்... உங்களோட உண்மையான திறமைக்கும், உழைப்புக்குமான மார்க் இல்லை... ஏன் தெரியுமா?
""இது உங்களோட முதல் பரிட்சை... உங்களை விட, உங்க பேரண்ட்ஸ் ரொம்ப நெர்வசா இருப்பாங்க... முப்பது, நாப்பதுன்னு மார்க்கை பார்த்து, "அப்செட்' ஆகி, உங்க மேல நம்பிக்கை இழப்பாங்க... எரிச்சல், கோபம், ஆத்திரம்ன்னு, எதிர்மறை எண்ணங்களால உங்க கல்லூரி வாழ்க்கையின் ஆரம்பமே கோணலாய்டும்.
""இப்ப நல்லா புரிஞ்சிருக்கும் எல்லாருக்கும்... இதெல்லாம் உங்க தகுதியை வளர்த்துக்கிட்டா கிடைக்கக் கூடிய மார்க்... உங்க உழைப்பும், இன்வால்வ்மென்ட்டும் அதிகரிச்சா கிடைக்கக் கூடிய மார்க்... ஹோப் எவ்ரிதிங் இஸ் கிளியர் நவ்... பீ ஹேப்பி டியர் பாய்ஸ்!''
அவன் விழிகளில் நீர் நிறைந்த அதே தருணத்தில், உள்ளுக்குள்ளே பொறுப்புணர்வும், இனிமையும், நன்றியும் நிறைந்த ஒரு புதிய மாணவன் உருவாகிக் கொண்டிருந்தான்.
***

உஷா பாரதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கென்னடி - chennai,இந்தியா
07-மார்ச்-201217:55:24 IST Report Abuse
கென்னடி "அருண்..." அப்பா அழைத்தார். - "வெளிர் பச்சை நிற கைத்தறிப் புடவையுமாக ரஞ்சனி மேடம் வந்தாள்." __ ஏங்க உஷா பாரதி ஹச்.ஒ.டி லேடியா இருந்தா மதிக்கக்கூடாதுங்களா?
Rate this:
Share this comment
Cancel
கே.பாலா - Doha,கத்தார்
07-மார்ச்-201217:07:35 IST Report Abuse
கே.பாலா பாசிடிவ் அப்ரோச் .....
Rate this:
Share this comment
Cancel
asha - coimbatore,இந்தியா
06-மார்ச்-201216:08:59 IST Report Abuse
asha wow very nice story
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X