கேள்வி: ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்கள் என்பது குறித்து பல இடங்களில் படித்திருக்கிறேன். சில எர்ரர் மெசேஜ்களிலும் காட்டப்படுகின்றன. இவை இயங்குவது நன்மையா? தீமையா? தீமை எனில் இவற்றிலிருந்து எப்படி தப்பிக்கலாம்?
-கா. பிரகதீஷ், கோவை.
பதில்: ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் எனப் படுபவை விண்டோஸ் தன் இயக்கத்திற்கு எழுதி வைத்துக் கொண்டுள்ள சிறிய புரோகிராம்கள். இவற்றின் மூலம் விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய வற்றின் சூழ்நிலையில் அப்ளிகேஷன்களை இயங்க வைத்திட முடியும். இவை ஜாவா ஆப்லெட் புரோகிராம்கள் போன்றவை. இவற்றால், புரோகிராம்களில் சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதுவே தீமைக்கும் வழி காட்டுகிறது. இப்படி மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதால், அந்த புரோகிராம்கள் வழியாக கெடுதல் விளைவிக்கும் வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் எளிதாக சிஸ்டத்திற்குள் நுழைய முடியும். இது போன்ற இடங்களை “drivebys” என அழைக்கின்றனர். மிகத் திறமைசாலியான வைரஸ் புரோகிராம் எழுது பவர்கள், இவற்றைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரையே அவர்கள் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வர முடியும்.
அப்படியானால், இவற்றைக் கட்டுப்படுத்தவே முடியாதா? என நீங்கள் எண்ணலாம். இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை செயல் இழக்கச் செய்திடலாம். கண்ட்ரோல் பேனலில் Internet Properties சென்று சில செட்டிங்ஸ் மேற் கொள்ள வேண்டும். முதலில் கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு “Network and Internet” என்ற விண்டோவிற்குள் செல்லவும். இதில் Internet Options பயன்படுத்தவும். இதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் “Manage Browser Addons” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இந்த விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இதில் தரப்படும் “Security” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் நாம் நகர்த்தக் கூடிய ஒரு ஸ்லைடர் பார் கிடைக்கும். இதனை மேலும் கீழுமாக நகர்த்தினால், நம் சிஸ்டம் பாதுகாப்பு நிலையை செட் செய்திடும் அளவுகள் காட்டப்படும். நான் இதில் “mediumhigh” என்பதில் செட் செய்துள்ளேன். இதில் கூடுதலாக “High” என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் சில இணைய தளங்கள் சரியாக இயங்க மாட்டா.
இதைக் காட்டிலும் இன்னொரு எளிய வழி உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில், தொடர்ந்து அப்டேட் செய்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைத்திருப்பீர்கள். மால்வேர் உள்ள தளங்களுக்கு நீங்கள் செல்ல முயற்சிக்கையில், இந்த தளம் தீங்கானது என்ற செய்தியைத் தரும். நம்மிடம் தான் நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே, இந்த வைரஸைத் தடுத்துவிடுமே என்று எண்ணிக் கொண்டு, செல்லக் கூடாத இணைய தளத்திற்குள் செல்லக் கூடாது.
கேள்வி: நான் அடிக்கடி வீடியோ கிளிப்களை யு-ட்யூப் தளத்தில் அப்லோட் செய்துள்ளேன். என் வீடியோவினை எத்தனை பேர் பார்த்து பயன் அடைந்தனர் என்ற தகவலை யாரிடமிருந்து, எந்த மின்னஞ்சலில் இருந்து பெறலாம்? யு-ட்யூப் தளத்தில் இதற்கான தொடர்பு முகவரிகள் எங்கு உள்ளன?
-சி. உமா ராணி, கோவை.
பதில்: உங்களுடைய வீடியோ படங்களை எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற தகவலை நீங்களே அறிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் வீடியோ உள்ள தளத்திற்குச் செல்லவும். உங்கள் வீடியோவினை இயக்கவும். இப்போது அதன் கீழாகப் பார்க்கவும். இங்கு ஒரு பட்டனைக் காணலாம். இந்த பட்டனின் பெயர் Show video statistics. இதில் கிளிக் செய்தால், ஒரு தகவல் கட்டடம் தரப்படும். அந்த வீடியோவினை அப்லோட் செய்த பின்னர், எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற தகவல் மட்டுமின்றி, எந்த நாட்டிலிருந்து அதனை அதிகம் பேர் பார்த்தனர் என்ற தகவலும் கிடைக்கிறது. இந்த தகவல் அனைத்து வீடியோவிற்கும் கிடைக்கிறது. இதற்கென தனி மின்னஞ்சல் முகவரி எல்லாம் இல்லை. பதில் சொல்லவும் இயலாது.
ஆனால், உங்கள் வீடியோவினைப் பார்த்து பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு பதில் இங்கு கிடைக்காது. ஏன், எங்குமே கிடைக்காது. பயனடைந்திருப்பார்கள் அல்லது ஆச்சரியப்பட்டிருப்பார்கள் என்று திருப்திபட்டுக் கொள்ளுங்களேன்.
கேள்வி: சிடி மற்றும் டிவிடிக்களைப் பயன்படுத்துகிறோம். இதன் வேகம் என எதனைக் குறிப்பிடுகின்றனர். இதற்கு வேகம் எப்படி அமையும்? எப்படி கணக்கிடுகின்றனர்? பதிலுக்குமுன்கூட்டியே நன்றி.
-சி. முருகதாஸ், காரைக்குடி.
பதில்: கல்யாணத்திற்குப் போனால், சாப்பாடு உண்டு என்பது போல, முன்கூட்டியே நன்றி கூறி கேள்வி அனுப்பி விட்டீர்கள். நன்றி.
சிடிக்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் 24x, 32x எனக் குறிப்பிடுகிறோம். இந்த வேகக் கணக்கின் அடிப்படையைக் கேட்கிறீர்கள்? வேகம் என்பது சிடிக் களில் டேட்டா மாற்றப்படும் அல்லது படிக்கப்படும் வேகத்தைக் குறிக்கிறது. முதன்முதலில் சிடி வடிவமைக்கப்பட்டு வந்த போது ஒரு நொடியில் 153,600 பிட்ஸ் (bps bits per second) படிக்கக் கூடியதாக வந்தது. தற்போது இதன் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. ஒரு சிடியின் வேகம் 32x எனில் ஒரு நொடியில் 4,915,200 பிட்ஸ் டேட்டா படிக்கப்படுகிறது என்று பொருள். டேட்டாக்கள் எழுதப்படுகையிலும் இந்த அளவே பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக்காட்டாக 8x வேகத்தில் டேட்டா எழுதப்படுகிறது என்றால் ஒரு நொடியில் 1,228,800 பிட்ஸ் எழுதப்படுகிறது என்று பொருள். தொடங்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையே உள்ள வேக வேறுபாட்டைப் பார்த்தால் நாம் இதில் எங்கோ வந்து விட்டோம் என்று தெரியும்.
கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள தகவல்களை வேர்ட் புரோகிராமில் டேபிளாக டாகுமெண்ட் அமைக்க முயற்சித்தால், அது ஒரே செல்லிலேயே அமைகிறது. என்ன செய்தாலும், சரியாக வரவில்லை. சரியான வழி எது?
-எஸ். கிரிதரன், மதுரை.
பதில்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களுக் கிடையே, இது போன்ற டேட்டா மாற்றங்களை எளிதாக மேற்கொள்ள லாம். இதோ உங்களுக்கான வழி.
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் எந்த செல்களை ஒட்ட வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுங்கள்; பின் கண்ட்ரோல்+சி (Ctrl+ C) கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் வேர்ட் டாகுமெண்ட்டில் எடிட் (Edit) மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் (Paste Special) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் மெனுவில் Microsoft Office Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்திடவும். மிக அழகாக டேபிள் அட்டவணைக் கட்டங்கள் போல தகவல்கள் அமைக்கப்பட்டுவிடும். இது போல பல வகைகளில் இந்த இரண்டு புரோகிராம்களும் இணைந்து செயல்படும்.
கேள்வி: டாகுமெண்ட் ஒன்றை உருவாக் குகையில், ஸ்பெல்லிங் செக் தானாகவே நடைபெறுகிறது. தவறான ஸ்பெல்லிங் எனில் திருத்துமாறு சிகப்பு கோடு வருகிற்து. அதில் ரைட் கிளிக் செய்தால், சரியான ஸ்பெல்லிங் கிடைக்கிறது. இதே போல ஒரு சொல்லுக் கிணையான இன்னொரு சொல் வேண்டும் எனில் தானாகக் கிடைக்குமா?
-டி.கார்த்திக், சிவகாசி.
பதில்: தானாகக் கிடைக்காது. இணையான சொல் (synonym) தரும் வசதி வேர்ட் புரோகிராமில் உள்ளது. இதனைப் பெற என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். எந்த சொல்லுக்கு இணையான பொருள் தரும் சொல் தேடுகிறீர்களோ, அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஷிப்ட் + எப் 7 (Shift +F7) அழுத்தவும். இப்போது இடது புறமாக தெசாரஸ் காட்டப்படும். நீஙக்ள் தேடும் சொல் தலைப்பாக இருக்கும். கீழாக அதன் வெவ்வேறு பொருட்களில் சொற்கள் பிரிவுகளாகத் தரப்பட்டிருக்கும். நாம் பயன்படுத்தும் சூழ்நிலைக்கேற்ப, சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம்.
கேள்வி: ஸ்பேம் மெயில்களால் நமக்கு கட்டாயம் தீங்கு ஏற்படுமா?
-ஆ. பால்ராஜ் தேவசகாயம், தேனி.
பதில்: அதென்ன கட்டாயமாக தீங்கு. ஸ்பேம் மெயில்கள் என நாம் குறிப்பிடும் மெயில்கள் பலவகைப்படும். இவற்றில் தீங்கு விளைவிப்பவையும் இருக்கலாம். பொதுவாகச் சொல்வதென்றால், தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் ஒரு தீங்கு விளைவிக்கக் கூடிய மெயில் கடிதமே ஸ்பேம் (SPAM) ஆகும். பல வேளைகளில் இது தீங்கு விளைவிக்கும். அந்த வகையிலேயே இவை தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. நம் இன்பாக்ஸில் அமர்ந்து கொண்டு இந்த தீங்கு விளைவிக்கும் வேலையை மேற்கொள்கின்றன. பயர்வால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஒரு சில ஸ்பேம் மெயில்கள், வேடிக்கைக்காகவும் அனுப்பப்படுகின்றன. இருந்தாலும், சரியான தடுப்பு புரோகிராம்களால், இவற்றைத் தடுக்க வேண்டும்.