மண்டலாபிஷேகத்தில் பங்கேற்றாலும் கும்பாபிஷேக பலனை பெறலாம்

ஜனவரி 23,2022சென்னை: திருக்கோயில்களுக்கு நடத்தப்படுகின்ற க்ரியைகளுக்கெல்லாம் பிரமாண நுால்களாக விளங்குபவை, சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளிய சிவ ஆகமங்கள். அவை காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாகும்.

திருக்கோயில் கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் திருக்கோயில் தொடர்பான அனைத்துக் க்ரியைகளையும் இவ்வாகமங்கள் விளக்குகின்றன. சிவ ஆகமங்கள் தொடர்பில்லாத பிற எந்த நுால்களிலும் இதுபோன்ற விஷயங்களைக் காண இயலாது. அவ்வாகமங்கள் கூறுகின்ற க்ரியை நெறிமுறைகளை எல்லாம், ஆசார்யப் பெருமக்கள் பலர் வகைப்படுத்தி, விளக்கியிருக்கின்றனர். அவை பத்ததிகள் என அழைக்கப்படுகின்றன. இன்று பரவலாகப் பேசப்படுகின்ற கும்பாபிஷேகத்தை, ஆகமங்களும், பத்ததிகளும், க்ரியையை

ப்ரதிஷ்டை என்றே குறிப்பிடுகின்றன. ப்ரதிஷ்டையானது ஆவர்த்தம், அனாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப்படும். ப்ரதிஷ்டை தொடர்புடைய க்ரியைகள் 64, 40, 30, 18 என, பலவகையாக காணப்படுகின்றன. இவற்றுள் 64 என்ற எண்ணிக்கையில் கூறப்படுகின்ற க்ரியைகளில் 64 வதுக்ரியையாக விளங்குவது த்ரிபக்ஷயஜனம் எனும் மண்டலாபிஷேகம் ஆகும். சதுஷ்ஷஷ்டிதமம் ப்ரோக்தம் த்ரிபக்ஷயஜனம் த்விதி என்பது, அதை விளக்கும் வாக்கியம். த்ரிபக்ஷயஜனம் என்றால், மூன்று பக்ஷங்கள், அதாவது ௪௫ நாட்கள் என்பது பொருள். கும்பாபிஷேக நாள் துவங்கி 45 நாட்கள் வரை, சிறப்புப் பூஜைகள் செய்து வரவேண்டும். மண்டலாபிஷேகத்தன்று 1008 அல்லது 500 அல்லது 108 போன்ற ஏதாவதொரு எண்ணிக்கையில் சக்திக்கேற்றவாறு கலசாபிஷேகமோ அல்லது சங்காபிஷேகமோ செய்யவேண்டும்.


இந்த மண்டலாபிஷேகத்தோடு தான் கும்பாபிஷேக க்ரியை நிறைவு பெறுகிறது. அதனால் தான் நம் மரபில் கும்பாபிஷேகத்தின் போது தரிசனம் செய்ய இயலாதவர்கள் மண்டலாபிஷேக தினத்திற்குள் தரிசனம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் நம் முன்னோர்கள். எனவே மண்டலாபிஷேகத்திற்குள் தரிசனம் செய்தாலும் கூட மஹா கும்பாபிஷேகத்தைத் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரமுடியாத பக்தர்கள் மண்டலாபிஷேக நாட்களின் போது வந்து வடபழநி ஆண்டவரை தரிசித்து பலன் பெறலாம்.

- -எஸ்.கே.ராஜா பட்டர்