வடபழநி ஆண்டவர் கோவில் திருப்பணிகள் சிறப்பு: தக்காருக்கு அமைச்சர் பாராட்டு

ஜனவரி 23,2022சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பணிகளை திறம்பட செய்து முடித்த தக்கார் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் திரு. எல் ஆதிமூலம் உள்ளிட்டோருக்கு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கூறியுள்ளதாவது:பிரசித்தி பெற்ற வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை, திட்டமிட்டபடி சிறப்பாக செய்து முடிக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன்படி, பல கோடி ரூபாய் செலவில் சிறப்பாக திருப்பணிகள் முடிக்கப்பட்டு, எழிலுடன் காட்சி தரும் வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், இன்று விமரிசையாக நடைபெறுகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பக்தர்கள் நாளை முதல் வழக்கம்போல் வரலாம். திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், ஒத்துழைப்பு வழங்கிய மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் என் பாராட்டுக்கள்.முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், ஹிந்து சமய அறநிலையத் துறை பல்வேறு சிறப்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

கடந்த காலங்களில் கவனிப்பாரற்று கிடந்த இந்த துறையை சீர்திருத்தும் பணியை, முதல்வர் எனக்கு வழங்கினார். அன்று முதல் இந்த துறையின் செயலர் மற்றும் கமிஷனர், அதிகாரிகள் உதவியுடன் ஆக்கப்பூர்வ பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுடன் குறிப்பாக ஆன்மிக பக்தர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இந்த துறை, பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு, கோவில்கள் சார்பில் 44 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களின் குறைகள், கோரிக்கைகள் பதிவு செய்ய வசதியாக, கோரிக்கைகளை பதிவிடுக எனும் இணைய வழி திட்டம் துவக்கப்பட்டது.

இத்திட்டம் வாயிலாக, 30 நாட்களுக்குள் புகார்கள் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 5,000 மனுக்களில், 3,000க்கும் மேற்பட்டவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பக்தர்களின் குறைகள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, உடனடி பதில்கள் வழங்கும், அழைப்பு மையம் துவக்கப்பட்டது....கொரோனா தொற்று காலத்தில், மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், பூசாரிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித் தொகை, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் படி, 11 ஆயிரத்து 65 பேர் பயனடைந்தனர். பூசாரிகள் ஓய்வூதியம் 4,௦௦௦ ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

கோவில்களுக்கு சொந்தமான நிலம், 433 ஏக்கர், 485 கிரவுண்டு, 21 கிரவுண்டு கட்டடம், 16 கிரவுண்டு குளமும் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 1,628 கோடி ரூபாய்.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியை, கோவில் நிர்வாகம் ஏற்று நடத்தி வருகிறது.உழவாரப் பணிகள் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக, 47 முதுநிலைக் கோவில்களுக்கு, www.hrce.tn.gov.in என்ற இணையவழியில் பதிவு செய்யும் வசதி துவக்கப்பட்டுள்ளது.அறநிலையத் துறை தலைமையகத்தில், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த பதாகையை, முதல்வர் வெளியிட்டார். முதல் கட்டமாக, 46 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ் அர்ச்சனைக்கான 12 நுால்கள் வெளியிடப்பட்டன.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ், பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்கள், பட்டாசாரியர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் என, 172 பேர் பணியாற்றி வருகின்றனர்....

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில் அர்ச்சகர்களுக்கு, மாத ஊக்கத் தொகையாக, 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தணி, சமயபுரம், திருச்செந்துாரில் நாள் முழுதும் அன்னதானம் திட்டம் துவக்கப்பட்டது. முடி காணிக்கை கட்டணம் நிறுத்தப்பட்டது. தலை முடி மழிக்கும் 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருவேற்காடு கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் ஆகிய கோவில்களில், பக்தர்கள் கொடுத்த காணிக்கை தங்கத்தை, கட்டிகளாக மாற்றும் பணி துவக்கப்பட்டது.கோவில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. கோவில் நிலங்களை மீட்பதற்கு, 38 மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில், வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அறநிலையத் துறை சார்பில் கல்லுாரிகள் துவக்கப்பட்டன. கோவில் திருமண மண்டபங்களில் மாற்று திறனாளிகளுக்கு இலவச திருமணம் செய்யும் திட்டம் துவக்கப்பட்டது.பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தரம் மேம்படுத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது....புதுக்கோட்டை தேவஸ்தான கோவிலின் நிர்வாக மேம்பாடு, வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியம், ௩ கோடி ரூபாயாக உயர்த்தி உத்தரவிடப்பட்டது.மதுரை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஓதுவார் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்பட்டு, தற்போது மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது, 490 கோவில் நிர்வாகம், பராமரிப்பு மானியம், ௬ கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்து கோவில்களில் முதலுதவி மையங்கள் திறக்கப்பட்டன.

பொங்கல் திருநாளில் அர்ச்சகர்களுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் புத்தாடை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ஆகியவற்றில், 425 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுதும், 675 கோவில்களில் திருப்பணி நடத்த அனுமதி அளித்து, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில்களில் கலைஞர் தல மரக்கன்று நடும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். இதுவரை 67 ஆயிரத்து 519 தல மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வரால் துவக்கப்பட்டது. அறநிலையத் துறை மேம்பாட்டிற்கு முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் வழிகாட்டுதலின் படி, அவரது ஒப்புதலுடன் வரும் பட்ஜெட்டில் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.இந்த ஆட்சிதான் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு பொற்காலம் என, எதிர்கால சந்ததியினர் போற்றும் வகையில் செயல்படுவோம்.இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.