வடபழநி ஆண்டவர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை: 2ம் நாள்

ஜனவரி 25,2022சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை அடுத்து, தொடர்ந்து 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேக பூஜை நேற்று துவங்கியது.

இதையடுத்து, பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் ஜீர்ணோதாரன அஷ்டபந்த ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முழு ஊரடங்கு என்பதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதிகளிலும் குவிந்து, கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகள் டிவி சேனல்கள் மற்றும் யு-டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசத்து மகிழ்ந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பின், கோவிலில் தொடர்ந்து, 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேக பூஜை நேற்று துவங்கியது. நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் முருகனை தரிசித்து சென்றனர்.

மண்டலாபிஷேக நாட்களில் கோவிலில் தரிசனம் செய்தால், கும்பாபிஷேக நாளில் தரிசித்த பலன் கிடைக்கும் என்ற ஐதீகத்தால், வரும் நாட்களில், வடபழநி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கான முன்னேற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை, 9:30 மணிக்கு, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், வடபழநி ஆண்டவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், யாகசாலையில் வைத்து பூஜித்த கலசம், பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில், கோவில் இணை கமிஷனர் ரேணுகாதேவி பங்கேற்றார். இன்று மண்டலாபிஷேக 2ம் நாள் பூஜை நடைபெற்று வருகிறது.