ஜனவரி 19, 2022
1. திருக்கல்யாண சன்னதி
இந்த சன்னதியில் கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு அதன் மேல் அழகிய மர வேலைப்பாடுடன் கூடிய அலங்கார மண்டபம் அமைத்து, சுற்று சுவர்கள் கல்லிலும் மற்றும் முகப்பிலும் எழிலான தோற்றத்தில் ஒரு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதி பார்ப்பதற்கு மிக அழகாகவும், கருங்கல்லில் பழமை மாறாமலும் காணப்படுகிறது. இந்த சன்னதியில் சுவாமி முருகப் பெருமானுக்கு பக்தர்களின் பிரார்த்தனைக்காக தனமும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதற்கு முன்னர் அபிஷேகம் வெளியில் வைத்து நடைபெற்று வந்தது. இப்பொழுது அதே பீடத்தில் வைத்து அபிஷேகம் பிறகு
அலங்காரம் அடுத்து திருக்கல்யாணம் நடத்துவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. உற்சவர் சன்னதி:
இந்த சன்னதி முழுவதும் கருங்கல்லில் தேர் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த தேர் வடிவ சன்னதியை இரண்டு யானைகள்
சங்கிலியால் இழுத்து செல்வது போல் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியில் முன்புறம் உள்ள ஆறு தூண்களில் அறுபடை வீடு முருகனின் சிலைகள் பதிக்கப்பட்டு அதன் திருப்புகழும் கல்வெட்டாக பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி முருகருக்கு பித்தளையில் ஒரு அழகான பீடம் அமைத்து அதில் சுவாமிக்கு தனமும் அர்ச்சனை மற்றும் ஆராதனை நடந்து வருகிறது.
இதற்கு முன்னர் சுவாமி முருகரை இந்த இடத்தில் மயில் மீது அல்லது ஒரு மேடையில் அலங்கார விமானத்தில் வைத்து அர்ச்சனை நடைபெற்று வந்தது.
3. யாகசாலை
திருக்கோயில் கிழக்கு பகுதியில் புதிதாக கல்மண்டபத்தில் பெரிய யாகசாலை ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இந்த யாகசாலையில் கருங்கல்லில் வேதிகையும், ஹோம குண்டமும் கட்டப்பட்டுள்ளது. பின்புற சுவற்றில் பிரதோஷ மூர்த்தியான
சிவனுடன் பார்வதி தேவி ரிஷப வாகனத்தில் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் ஒரு சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த
யாகசாலையில் கோயில் பூஜைகளும் மற்ற நாட்களில் அனைத்து யாகங்களும் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த யாகசாலை செங்கல்லில் வைத்து மிக சிறிதாக கட்டப்பட்டிருந்தது.
4. குமார தந்திரத்திலுள்ள மூர்த்திகள்
மூலவர் சன்னதி எதிரே உள்ள தேவர் மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் கருங்கல்லில் மூன்று இசைகளிலும் குமார தந்திரத்திலுள்ள மூர்த்திகளின் தோற்றத்தை சிலைகளாக மூன்று திசைகளிலும், மற்ற ஒரு திசையில் மூன்று திசைகளிலுள்ள சிலைகளின் வரலாறும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த தூண்களில் சுவாமி முருகரின் அடியார்களின் சிலைகளும், மகரிஷிகளின் சிலைகளும், மாகான்களின் சிலைகளும் பதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் இந்த தூண்களில் கிரானைட் கல் பதிக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி கருங்கல் தூண்களுடன் சிலைகளும் பதிக்கப்பட்டுள்ளன.
5. ஆதிபிடம்
சித்தர்களால் உருவாக்கப்பட்ட இந்த கோயிலுக்கு பிரதானமான மற்றும் முதன்மையான இந்த சன்னதி முன்பு குறிமேடையாக
இருந்தது. முதல் சித்தர் முருகனின் அருள் பெற்ற அவர் பழநி ஆண்டவரின் படத்தை இங்கு வைத்து தான் பூஜை செய்து வந்தார்.
எனவே இந்த சன்னதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சன்னதி முழுவதும் கருங்கல்லில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சன்னதியை விரிவுபடுத்தி, சன்னதி முன்புறம் கருங்கல்லில் நிலை வாயில் அமைத்து கருங்கல்லில் தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இயானம் செய்வதற்கு என்று தனியாக தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த சன்னதி மிகவும் சிறிய சன்னதியாக இடப்பற்றாக்குறையுடன் கிரில் மற்றும் அலுமினியம் வைத்து வடிவமைக்கப்பட்ட தியான மண்டபத்துடன் மிகவும் சாதாரணமாக காணப்பட்டது.
6. திருமடப்பள்ளி
திருமடப்பள்ளி முழுவதும் கருங்கல்லில் பழமை மாறாமல் மாற்றி அமைக்கப்பட்டு நைவேத்யம் செய்வதற்கு என விறகு அடுப்பும், பிரசாதம் செய்வதற்கு என அதிநவீன மின்சாதன அடுப்பும் நிறுவப்பட்டு, தனியாக உக்ரானம் (பொருட்கள் பாதுகாப்பு அறை) மற்றும் சுயம்பாகி (அய்யர்) வந்தவுடன் குளித்து விட்டுசமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகமவிதிப்படி திருமடப்பள்ளிக்கு என தனியாக பாத்திரங்களும் கொடுக்கப் பட்டுள்ளது. நைவேத்யம் சமைக்க வெண்கல பாத்திரங்கள் மற்றும் சுவாமிக்கு நைவேத்யம் கொண்டு செல்வதற்கு செப்பு பாத்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு வடபழநி ஆண்டவரை தரிசித்து தியான மண்டபம் செல்கிறோம். சில நிமிடங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி அமைதியாக தியானம் செய்கிறோம். அதன் பின்தவத்திரு. ஸ்ரீ அண்ணாசாமி நாயகர், தவத்திரு. ஸ்ரீ இரத்தின சாமிச்செட்டியார், தவத்திரு. ஸ்ரீ பாக்கியலிங்க தம்பிரான் அவர்களால் உருவாக்கப்பட்ட குறிமேடைக்கு செல்கிறோம். குறிமேடைக்கு முன்புறம் உள்ள தவத்திரு. இருமுருக. கிருபானந்தவாரியார் சுவாமிகளின் படத்தை வழிபட்டு குறி மேடைக்கு சென்று அங்குள்ள முருகனை வழிபடுகிறோம்.
குறிமேடை புசாரிஅருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் ஏற்பட கர்த்தாவாக இருந்த மூன்று சித்தர்களைப் பற்றி கூறுகிறார். சித்தர்கள் மூவரின் சமாதி திருக்கோயிலுக்கு பின்புறம் (வடக்கு பகுதியில்) நெற்குன்றம் பாதையில், வள்ளி திருமண மண்டபம் அருகில் உள்ளது. சித்தர்கள் சமாதியை தரிசனம் செய்கிறோம். சித்தர்களின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.