அரசியல் » உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு ஆகஸ்ட் 26,2018 17:00 IST
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்கிறது என்றார். சமஸ்கிருதம் நமது கலாசாரத்துடன் இணைந்தது. அது இந்தியாவின் உயர்ந்த மொழி. சமஸ்கிருத வாரத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எனத் தெரிவித்த அவர், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். ஆசிரியர்களே நமது எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர் என்ற மோடி, ஆசிரியர்களும், அறிவும் விலை மதிப்பற்றவை எனவும், பெற்றோருக்கு பின் ஆசிரியர்கள் தான் நம்மை புரிந்து கொள்கின்றனர் என்றார். சோகமான நேரத்தில் கேரளாவுக்கு ஆதரவாக அனைத்து மக்களும் உள்ளனர். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டி கொள்கிறோம். இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், மக்களிடம் ஒற்றுமையை கொண்டு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது என தனது உரையில் குறிப்பிட்ட மோடி, கேரளாவில் உண்மையான கதாநாயகர்களாக முப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள், மக்களை காப்பாற்றவும், உதவவும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடவில்லை. கேரளா மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்தார். நல்ல நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய வாஜ்பாயை நாடு என்றும் நினைவில் வைத்திருக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையான பங்களிப்பை அளித்துள்ளார், சிறந்த தேசபக்தர், அவரை பற்றிபேச வேண்டும் என நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அவரது மறைவு செய்தியை கேட்ட மக்கள் வருத்தப்பட்டனர் எனவும் கூறினார். பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த அநீதியையும் சமூகம் பொறுத்து கொள்ள முடியாது. இதனை கருத்தில் கொண்டு தான் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் குற்றச்செயல் திருத்த மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது. முத்தலாக் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நேரத்தில், முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக தேசம் உள்ளது. அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்றார். மழைகால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. சமூக நீதி இளைஞர் நலனுக்கு உகந்ததாக அமைந்தது. ஆசிய விளையாட்டு போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் கவனித்து வருகின்றனர். அங்கு பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் எனறார் மோடி.
வாசகர் கருத்து