பொது » தாதுமணல் கடத்திய நிறுவனம் மீது வழக்கு டிசம்பர் 21,2018 00:00 IST
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தாதுமணல் ஆலைகளை நடத்தி வந்தன. கடற்கரை ஓரமாக அள்ளப்படும் மணலில் இருந்து கனிம தாதுக்களை பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டினர். தாதுமணல் அள்ளுவதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரையில் மணல் அள்ள அரசு தடை விதி்த்தது. இருப்பினும் தற்போதும் தாதுமணல் கடத்தப்படுவது தொடர்கிறது. திசையன்விளையில் இருந்து வந்த ஒரு லாரியை, நாங்குநேரி அருகே எஸ்.ஐ., சஜீவ் உள்ளிட்ட போலீசார் மடக்கி சோதனை செய்தனர். லாரியில் 5 டன் எடையுள்ள தாதுமணல், சிறு சிறு மூடைகளாக கட்டப்பட்டிருந்தது. திசையன்விளையில் தாதுமணல் ஆலை நடத்தி வரும் சுகுமாரின் பிஎம்சி நிறுவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு தாதுமணல் கடத்துவது தெரியவந்தது. வி.வி.மினரல்ஸ், வைகுண்டராஜனின் தம்பி தான் இந்த சுகுமார். லாரியை ஓட்டி வந்த, கடலுார் மாவட்டம் மஞ்சங்குப்பத்தை சேர்ந்த அன்வர் கைது செய்யப்பட்டார். திசையன்விளை சுகுமார் மீது மணல் கடத்தல், மற்றும் சுரங்க விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து