அரசியல் » தேர்தல் கமிஷன் ஏன் தள்ளாடுது? ஜனவரி 07,2019 13:00 IST
திருவாரூர் தொகுதி இடை தேர்தலை தானாகவே அறிவித்த தேர்தல் கமிஷன் தானாகவே அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் கமிஷனின் இந்த செயல் கேலிக்கு உரியது என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார் ஒரு கட்சியின் தலைவர். அவர் வேறு யாரும் அல்ல; இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கே 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் இருக்கும் T T V தினகரன்தான். தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தவிர எந்த கட்சியுமே திருவாரூரில் தேர்தலை விரும்பவில்லை என்பது நன்றாக தெரிந்து விட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிதான் சசிகலா குடும்பத்தின் ஆதார மையம் என்பதால் சொந்த பந்தம் மீதான நம்பிக்கையில் தினகரன் அங்கே வெற்றியை எதிர்பார்த்தாரா அல்லது ஆர் கே நகர் தொகுதி இடை தேர்தலில் வெற்றியை பறித்து தந்த 20 ரூபாய் ஃபார்முலா திருவாரூரிலும் கைகொடுக்கும் என்று நம்பினாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் வெறும் பேச்சாக அல்லாமல் வெற்றி நிச்சயம் என்றே தினகரன் எதிர்பார்த்தார். எனவேதான் தேர்தல் கமிஷனின் முடிவை கேலி செய்கிறார். என்றாலும்.. தினகரன் சொல்வதைத்தான் பெரும்பாலான மக்களும் மனதில் நினைக்கிறார்கள் என்பது உண்மை. தேர்தல் கமிஷன் அதன் மரியாதையை பெருமளவு இழந்திருப்பது நிஜம். பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம் எல் ஏ க்களால் 18 இடங்களும் அதிமுக எம் எல் ஏ மரணத்தால் திருப்பரங்குன்றமும் ஆக 19 தொகுதிகள் காலியாக இருக்கும்போது கடைசியாக காலியான திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்த கமிஷனின் நடவடிக்கை மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இல்லை. அரசியல் சாசன பாதுகாப்பு கொண்ட தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் அதே போன்ற அதிகாரம் கொண்ட கோர்ட்டுகள் பெரும்பாலும் தலையிடுவது இல்லை என்ற நிலையில் கோர்ட் வழக்குகளை காரணம் காட்டி கமிஷன் கைவிரிப்பதை எவரும் ஏற்கவில்லை. 18 எம் எல் ஏ க்களின் பதவி பறிப்பு சரிதான் என்ற தீர்ப்பு 2018 அக்டோபரில்தான் வந்தது என்றாலும் உண்மையில் அந்த இடங்கள் 2017 செப்டம்பர் 17 ல் சபாநாயகர் தனபால் அறிவித்த நொடியில் இருந்தே வெற்றிடங்களாகத்தான் இருந்து வருகின்றன. ஓட்டு போடுவது உன் கடமை என்று குடிமக்களுக்கு விளம்பரங்கள் மூலம் பாடம் நடத்தும் தேர்தல் கமிஷன், சட்டசபையில் தமது பிரதிநிதிகளை அமர்த்தும் உரிமையும் மக்களுக்கு இருப்பதை எப்படி மறுக்க இயலும்? 18 தொகுதிகளை சேர்ந்த பல லட்சம் வாக்காளர்களின் குரல் சட்டசபையில் ஆண்டு கணக்கில் ஒலிக்கவில்லை என்றால் அது யார் செய்த குற்றம்? T N சேஷன் அளவுக்கு விசுவரூபம் எடுப்பார்கள் என்று அவருக்கு பிறகு வந்த தலைமை தேர்தல் கமிஷனர்களை எதிர்பார்க்கவில்லை தமிழக வாக்காளர்கள். சேஷன் சேகரித்து வைத்துவிட்டு சென்ற பெருமைக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாப்பார்கள் என்பதுதான் அந்த மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. ஆர் கே நகர் தேர்தலோடு அதற்கும் பங்கம் வந்துவிட்டது. அடித்த அந்தர் பல்டிகளை விட்டு விடலாம், பெரிதல்ல என்று. ஆனால் சின்னம் ஒதுக்க கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மீதும் தொடரப்பட்ட வழக்குகளின் கதி என்ன ஆனது? ஹவாலா புரோக்கர்கள் 2 பேரும் கைதானார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 6 மாதம் ஆகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த பின்னணியில்தான் கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முடியாத திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்து பின்னர் அதையும் திரும்ப பெற்று விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கிறது தேர்தல் கமிஷன். குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பார்கள். தமிழக வாக்காளர் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை திருவாரூர் தேர்தல் மூலம் சேம்பிள் பார்க்க விரும்பும் மத்திய மாநில அரசுகளுக்கு கமிஷன் உதவுகிறதோ என்கிற சந்தேகம் மக்கள் மனதில் தோன்ற அனுமதித்தால் தேர்தல் கமிஷனின் சுதந்திரமும் சுயாட்சியும் கேள்விக்கு மட்டுமல்ல கேலிக்கும் ஆளாவதை தடுக்க முடியாது.
வாசகர் கருத்து