பொது » பண இரட்டிப்பு மோசடி: 7 பேர் கைது பிப்ரவரி 12,2019 19:16 IST
ஈரோடு நாராயணவலசில் நிதிநிறுவனம் நடத்தி வரும் பிரபாகரனை அணுகிய பழனிச்சாமி என்பவர், பெங்களூருவில் தனக்கு தெரிந்தவர்கள் ஒரு மடங்கு பணம் கொடுத்தால், 3 மடங்கு வரை பணம் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பிரபாகரன் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பதிலுக்கு அந்த கும்பல் வெற்றுதாள்கள் அடங்கிய 500 ரூபாய் நோட்டுகட்டுகளை கொடுத்துவிட்டு தலைமறைவாகினர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபாகரன் வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த யசோதா என்ற பெண் மற்றும் கும்பலுடன் சேர்ந்து பழனிச்சாமி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பழனிச்சாமி, யசோதா மற்றும் அந்த கும்பலை சேர்ந்த நாகராஜ், தங்கமணி, சுரேஷ்குமார், சதீஷ், ரகு ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு பயன்படுத்திய 80 வெற்றுதாள் 500 ரூபாய் கட்டுகள், சொகுசு கார், கத்தி போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் தருமபுரி, கோவை மாவட்டங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து