பொது » நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமின் மார்ச் 12,2019 00:00 IST
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், அருப்புக்கோட்டை தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைதானார். கடந்தாண்டு ஏப்ரலில் நிர்மலாதேவியுடன் கைதான உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமின் கிடைத்த நிலையில், நிர்மலாதேவிக்கு மட்டும் ஜாமின் வழங்க, அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது திங்களன்று விசாரணை நடத்தப்பட்டபோது நிர்மலா தேவியை ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் முன்பு நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் பேட்டி கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. வியாழனன்று அவர் ஜாமினில் வெளிவர உள்ளதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறினார்.
வாசகர் கருத்து