பொது » குழந்தை விற்பனை விவகாரத்தை விசாரிக்க 12 குழு ஏப்ரல் 26,2019 14:00 IST
ராசிபுரத்தில் குழந்தை விற்பனை நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அமுதா என்ற அமுதவல்லி, கணவர் ரவிச்சந்திரன், நர்ஸ் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமுதா சேலம் அன்னதானப்பட்டி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில், தலா ஒரு குழந்தையை விற்றதையும், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, குழந்தைகளை விலைக்கு வாங்கியதையும் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. முருகேசன் கொல்லிமலையில் இரண்டு குழந்தைகளை வாங்கி விற்றதாகவும், பர்வீன் 4 குழந்தைகளை விற்றதாக கூறப்படுகிறது. இதுவரை 9 குழந்தைகளை விற்றதை 4 பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை போலீசார் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தை விற்பனை தொடர்பாக விசாரிக்க சுகாதாரத்துறை சார்பில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 குழுவினர் ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்கவுள்ளனர். 2 குழுவினர் கொல்லிமலையில் தத்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
வாசகர் கருத்து