பொது » பிளஸ் 2 பாடத்தில் முருகானந்தம்! ஜூன் 04,2019 19:46 IST
மலிவு விலை சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் கருவியை உருவாக்கி சாதனை படைத்த, கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் பற்றிய தகவல், பிளஸ் 2 உயிர் விலங்கியல் பாடப்பிரிவில், 'மனித இனப்பெருக்கம்' என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது. 'கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூக தொழில் முனைவோர்' என்ற பெயரில், முருகானந்தம் பற்றிய தகவல்கள், வண்ணப்படத்துடன் இடம் பெற்றுள்ளன. மலிவு விலை நாப்கின் இயந்திர கண்டுபிடிப்பு பற்றிய தகவலை பாடத்திட்டத்தில் இணைத்திருப்பதன் மூலம் மிகப்பெரிய சமுதாய தாக்கத்துக்கு அரசு வழி ஏற்படுத்தியுள்ளது என முருகானந்தம் கூறினார். சானிட்டரி நாப்கின் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் முருகானந்தத்திற்கு, 2016ல் மத்திய அரசு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது. 2014ல் அமெரிக்காவின் 'டைம்' இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிகுந்த 100 மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றார். 'பார்ச்சூன்' இதழ் வெளியிட்ட உலகின் தலைசிறந்த 50 தலைவர்கள் பட்டியலிலும் முருகானந்தம் இடம் பிடித்தார். இவரது வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, ஹிந்தியில் pad man 'பேட்மேன்' திரைப்படம், வெளியானது. முருகானந்தத்தின் சாதனைகளால் உந்துதல் பெற்ற அமெரிக்க குழுவினர் தயாரித்த குறும்படம், ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து