பொது » தமிழிலும் பேசலாம்; ரயில்வே 'பல்டி' ஜூன் 14,2019 13:53 IST
ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் இடையிலான உரையாடலின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என ரயில்வே சுற்றிக்கை விட்டது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேசும்போது, ஒருவர் கூறுவதை, மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போவதால், இரு தரப்பிற்கு இடையிலான ஆலோசனையை மேம்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ரயில்வே கூறியிருந்தது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர், பொது மேலாளரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, ரயில்வேத்துறையில், பழைய நடைமுறையே தொடரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ரயில் நிலைய ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது எனக்கூறி தமிழர்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கின்றனர். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த மாதம், மதுரை, திருமங்கலத்தில் சிக்னல் கோளாறால் மாற்று பாதையில் ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. இத்தகவலை தமிழில் பரிமாற்றம் செய்தபோது, மறுமுனையில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டரால் புரிந்து கொள்ள முடியாததால், ஒரே பாதையில் எதிரெதிர் திசையில் ரயில்கள் இயக்கப்பட்டு, பின்னர் விபத்து தடுக்கப்பட்டது. மொழி பிரச்னையால் ஏற்பட்ட இதுபோன்ற சம்பங்களை தவிர்க்கவே, பிராந்திய மொழியில் பேச ரயில்வே தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து