பொது » 'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ் ஜூன் 16,2019 18:54 IST
கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'தினமலர்' நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமம் இணைந்து, நான்காவது 'கிரிக்கெட் குவிஸ்' போட்டியை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடத்தின. போட்டியை, 'குவிஸ் மாஸ்டர்' ரங்கராஜன் வழி நடத்தினார். 12 வயதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டியில், கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது. குவிஸ் மாஸ்டர் கேட்கும் கேள்விகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் 'டக்.. டக்... என பதிலை சொல்லி', கிரிக்கெட் 'பேட்', பந்து, ஹெல்மெட், 'கீப்பர் கிளவ்ஸ்', 'ஸ்டெம்ப்' போன்ற விளையாட்டு உபகரணங்களை பரிசாக தட்டிச் சென்றனர். தகுதிச் சுற்று அடிப்படையில், 8 அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில், ஹரிகரன்-ரோஷன் கிருஷ்ணா ஜோடி முதலிடம் பிடித்தது. பிரசாந் - ரமேஷ் ஜோடி 2ம் இடத்தையும் அர்ஜூன், நித்தியானந்தம் ஜோடி 3ம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினர். முதல் பரிசாக 20,000 ரூபாய், 2ம் பரிசாக 15,000, 3ம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக 5 அணிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து