விளையாட்டு » விளையாட்டு செய்திகள் | Sports | Sports News 04.07.2019 ஜூலை 04,2019 20:00 IST
உலக கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் பேர்ஸ்டோவ் 106 ரன் எடுத்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம் 58 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஏமாற்ற நியூசிலாந்து அணி 45 ஓவரில், 186 ரன்னுக்கு சுருண்டு, 119 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதனையடுத்து 12 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. -------------- கோபா கால்பந்து: பைனலில் பெரு பிரேசிலில் நடக்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடருக்கான அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' சிலி, பெரு அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பெரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. வரும் ஜூலை 7ல் ரியோ டி ஜெனிரோவில் நடக்கவுள்ள பைனலில் பெரு, பிரேசில் அணிகள் மோதுகின்றன. ------------- உலக கால்பந்து: நெதர்லாந்து அபாரம் பிரான்சில் நடக்கும் பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து அரையிறுதியில் நெதர்லாந்து, சுவீடன் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 0-0 என, சமநிலையில் இருந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜாக்கி குரோனன் ஒரு கோலடித்து கைகொடுத்தார். முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. வரும் ஜூலை 7ல் நடக்கவுள்ள பைனலில் நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. ---------------- விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் வெற்றி லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-6, 6-3 என, ரஷ்யாவின் வெரோனிகாவை தோற்கடித்தார்.
வாசகர் கருத்து