Advertisement

திமுகவை தடை செய்ய கோரிக்கை

அரசியல் ஆகஸ்ட் 15,2019 | 14:13 IST

Share

திமுகவை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுக்க சில கட்சிகளும் அமைப்புகளும் தயாராகி வருகின்றன. ”காஷ்மீர் மாநிலம் எந்தக் காலத்திலும் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்ததில்லை” என்று திமுகவின் அதிகாரபூர்வ தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியதால் வெடித்த சர்ச்சையின் தொடர்ச்சிதான் இந்த முயற்சி. ரிபப்ளிக் டீவியில் அர்னாப் கோஸ்வாமி நெறியாளராக இருந்து நடத்திய விவாதத்தில் திமுக பிரதிநிதியாக சரவணன் பங்கேற்றார். அரசியல் சாசனத்தின் பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து திமுகவின் எதிர்ப்பை தெரிவித்த சரவணன், ”காஷ்மீர் மீது இந்தியாவுக்கு எந்த உரிமையும் கிடையாது; ஏனென்றால், அது என்றைக்குமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை” என்றார். இதை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அரசியல் சட்டம் தெரியாதவர், வரலாறு தெரியாதவர்களை எல்லாம் தேசிய அளவில் நடக்கும் விவாதத்தில் பங்கெடுக்க அனுமதிக்கலாமா என்று அர்னாப் மீது பாய்ந்தனர். அர்னாபும் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, சரவணனுடன் தனியாக உரையாட விரும்புவதாக சொன்னார். சரவணன் சொல்வதுதான் திமுகவின் அதிகாரபூர்வ நிலை என்று கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பாரா என அர்னாப் கேட்டார். “காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றால்.. அது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். அதன் விளைவாக திமுக இந்தியாவில் எங்கும் செயல்பட முடியாது; ஸ்டாலின் இந்த நாட்டில் அரசியல் நடத்த முடியாது” என்று அர்னாப் கோஸ்வாமி குறிப்பிட்டார். ஆனால் சரவணன் அதற்கு மேல் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமில்லை எனக்கூறி பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். என்றாலும், சரவணன் வாய்தவறி அப்படி சொன்னார் என்றோ அதற்கு மறுப்பு தெரிவிக்கவோ ஸ்டாலின் முன்வரவில்லை. எனவே, சரவணன் சொன்னதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இந்தியாவின் இறையாண்மையை திமுக ஏற்க மறுத்தால் இந்த நாட்டில் அந்தக் கட்சிக்கு இடமில்லை என்பதை தெளிவுபடுத்த தேர்தல் ஆணையத்தில் மனு கொடுப்பதுடன் சுப்ரீம் கோர்ட்டிலிலும் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை செய்வதாக பா ஜ க வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X