பொது » 17 பேர் உயிரிழப்பு; சாலை மறியல் செய்தவர்கள் மீது போலீஸ் தடியடி டிசம்பர் 02,2019 19:19 IST
மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையால், நடூரில் கருங்கல் காம்பவுண்ட் சுவர் இடிந்து 4 வீடுகளின் மேல் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சுற்று சுவர் அமைத்த துணிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், கொலைவழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், உடல்களை வாங்க மறுத்து மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகவில்லை. மாறாக, போலீசாருக்கும், அங்கு கூடி இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் லேசான தடியடி நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து சென்றால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்த சிவசுப்ரமணியம் மீது விபத்து ஏற்படுத்துதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து