Advertisement

அரசு கல்லூரி ஆசிரியர் நியமன குழப்பம் நீடிப்பு

பொது ஜனவரி 25,2020 | 20:12 IST

Share

அரசு கலை கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் நீடிக்கிறது. காலியாக உள்ள 2,331 இடங்களை நிரப்புவதற்காக டி ஆர் பி என்கிற ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 39 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். அதில் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் மட்டும்தான் சரியாக நிரப்பப்பட்டு இருப்பதாக டி ஆர் பி தெரிவித்தது. ”கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்பவர்கள் ஒரு விண்ணப்பத்தை சரியாக நிரப்ப முடியாத அளவுக்கு முட்டாளாக இருப்பார்களா? தேவையே இல்லாத விவரங்களையும் அனாவசியமான தகவல்களையும் கேட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு மோசமாக தயார் செய்த டி ஆர் பி தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று விண்ணப்பதாரர்கள் குமுறுகின்றனர். தனியார் கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள்தான் அரசு கல்லூரி வேலைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். நீண்ட காலம் ஒரே கல்லுரியில் வேலை செய்ய முடியாமல் வெவ்வேறு கல்லூரிகளில் வேலை செய்திருப்பார்கள். ”அத்தனை கல்லூரிகளில் இருந்தும் தனித்தனியாக அனுபவ சான்றிதழ் பெற வேண்டும்; தினமும் கையெழுத்து போட்ட வருகை பதிவேட்டின் அனைத்து பக்கங்களிலும் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளர் அல்லது தாளாளரின் கையொப்பங்களை பெற்று இரண்டு செட்டுகளாக சமர்ப்பிக்க வேண்டும்” என டி ஆர் பி நிபந்தனை விதித்து இருந்தது. இது போன்ற நடைமுறையில் மிகவும் சிரமமான நிபந்தனைகள் விண்ணப்பத்தில் ஏராளமாக இருந்தன என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். “பல நாட்கள் லீவு போட்டு ஒவ்வொரு கல்லூரியாக அலைந்து முதல்வர் காலிலும் முதலாளி காலிலும் விழுந்து சான்றிதழ்களை பெற்று சமர்ப்பித்தோம். அதை வாங்கிக் கொள்ளவே பலமுறை எங்களை அலையவிட்டது டி ஆர் பி. இப்போது, புதிதாக பல சான்றிதழ்களை சமர்ப்பிக்க சொல்கிறது” என்று ஒரு ஆசிரியர் தெரிவித்தார். அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு டி ஆர் பி யின் செயலை கண்டித்துள்ளது. “தேவையே இல்லாத தகவல்களையும், சம்பந்தம் இல்லாத தகவல்களையும் தரச் சொல்லி கட்டாயப்படுத்துவது பெரிய மோசடிக்கு முன்னேற்பாடு போல தோன்றுகிறது” என்று கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X