Advertisement

அம்மன் கோயில்களில் மயான கொள்ளை

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 24,2020 | 12:49 IST

Share

மாசி மாத சிவராத்திரி விழாவை அடுத்த அமாவாசை நாளில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடப்பது வழக்கம். சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வாசலில் அனைத்து காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்களால் அசுரன் உருவம் செய்து வைக்கப்பட்டது. அம்மன் வேடமிட்ட பக்தர்கள் ஆவேசத்துடன் ஓடி வந்து அசுரனை வதம் செய்து காய்கறிகளை சூறையிட்டனர். அந்த காய்கறிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 65வது ஆண்டு மயான கொள்ளை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் மயானத்துக்கு ஊர்வலமாக சென்றார். அங்கு ஏராளமான பக்தர்கள் வேளாண் பொருட்களை வாரி இறைத்தனர். பக்தர்கள் அலகு குத்தியும் தேர் இழுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பிறகு, மயானத்தில் வேளாண் விளைபொருட்கள் நவதானியங்களை அம்மனுக்கு படையலிட்டனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். மயான கொள்ளை வழிபாடு நடந்த இடத்தின் மண் மற்றும் சாம்பலை பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர். கிழக்கு தாம்பரம் வினோபா நகரிலுள்ள ஸ்ரீ வெக்காளி அம்மன் ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா ஊர் மக்கள் சார்பில் நடைபெற்றது. கோயில் நிர்வாகி சக்தி மனோகர் காளி வேடமிட்டு நடனம் ஆடியபடி அருகில் உள்ள இடுகாட்டிற்கு சென்று, அங்கு களிமண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த மனித உருவம் மீது நின்றபடி ஆக்ரோஷமாக நடனம் ஆடினார். சூலத்தினால் களிமண் உருவத்தை உடைத்து விட்டு அங்கு குவித்து வைத்திருந்த காய்கறிகளை அள்ளி பக்கதர்கள் மீது வீசினார். அந்த காய்கறிகளை பக்தர்கள் போட்டி போட்டு அள்ளினார்கள். விழாவை முன்னிட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெக்காளி அம்மன் பட்டாடை உடுத்தி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X