பொது மார்ச் 04,2020 | 19:00 IST
உலகளவில் 3219 பேரை பலிவாங்கிய கொரோனாவைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியாவுக்கு வந்த இத்தாலிய நாட்டவர் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து 23 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஜெய்ப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவியும் வைரஸ் பாதிப்புக்குள்ளானார். இதனால் அவர்களுடன் சுற்றுலா வந்த எஞ்சிய 21 சுற்றுலா பயணிகளை டில்லியில் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 14 பேரும் உடனடியாக டில்லியில் உள்ள ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. டில்லியைச் சேர்ந்த 45 வயது ஆணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், ஆக்ராவில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் 6 பேரையும் வைரஸ் தொற்றியிருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து