சினிமா வீடியோ அக்டோபர் 01,2020 | 07:25 IST
சோனு சூட்டுக்கு ஐ.நா., கவுரவம் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை தன்னாலான பல உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். அவரது சேவையை பாராட்டி, ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது' அவருக்கு வழங்கப்பட்டது. 'எந்த எதிர்பார்ப்பும் இன்றி என் நாட்டு மக்களுக்கு உதவி செய்கிறேன். ஐ.நா., அளித்துள்ள அங்கீகாரம் சிறப்புமிக்கது' என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சோனு. இந்த விருதை இதற்கு முன் நடிகை ஏஞ்சலினா ஜோலி, நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதவன் அனுஷ்கா உடன் மாதவன் நடித்துள்ள 'சைலன்ஸ்' படம் அக்.,2ல் ஓடிடியில் வெளியாகிறது. இதையடுத்து அவர் நடித்துள்ளா மாறா படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள 'புஷ்பா' படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் மாதவன். டுவிட்டரில், “துளி கூட உண்மையில்லை,” என பதிவிட்டுவிட்டார். அந்த கதாபாத்திரத்திற்கு இன்னும் பொருத்தமான நடிகர் கிடைக்காமல் படக்குழுவினர் தவித்து வருகிறார்கள். முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இன்னும் சம்பளம் வரல - கஸ்தூரி சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர் நடிகை கஸ்தூரி, அவரின் பல கருத்துக்கள் சமயங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அங்கும் சலசலப்பை ஏற்படுத்தினார். இதன் 4வது சீசன் சில தினங்களில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் டுவிட்டரில், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஓராண்டாகிவிட்டது. ஆனால் அதற்கான சம்பளம் வரவில்லை. ஆதரவற்ற குழந்தைகளின் ஆபரேஷனுக்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். பொதுவாக நான் பொய்யான வாக்குறுதிகளை நம்புவது இல்லை. ஆனால் இதிலும் அப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து