பொது நவம்பர் 01,2020 | 08:10 IST
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவருக்கு வயது 72. கடந்த 13ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது, வயதுமுதிர்ச்சியின் காரணமாக தொற்று தீவிரமடைந்து மரணமடைந்தார். இவர் 1948ம் ஆண்டு ராஜகிரியில் பிறந்தார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ முடித்தார், பின்பு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் வேலை செய்துள்ளார். பின்னாளில் அரசியில் ஏற்பட்ட ஈடுபாட்டில் அதிமுகவில் இணைந்தார். பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவராகவும் பதவி வகித்தார். 2006,2011,2016 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தலிலும் பாபநாட தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றார். 2016ம் ஆண்டு வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது அரசின் முதல் அமைச்சரவை பதிவியாகும். துறை ரீதியாக வளர்ச்சியில் பெரும் சாவல்களை சந்தித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விஸ்வாசி. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போது அவர் உடல்நலம் சரியாகி வர வேண்டும் என மேடையில் கதறி அழுதார். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா , ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சசிகலா இவரை மறைத்துவைத்தாக குற்றம்சாட்டப்பட்டது. மகாலிங்கம் என்பவர் பாபநாசம் காவல் நிலையில் அமைச்சரை காணவில்லை என்றும், சசிகலா குடும்பத்தினர் மறைத்துவைத்திருப்பதாகவும் புகார் கொடுத்தார். சசிகலா சிறைக்கு சென்ற பின் தினகரனுக்கு எதிராக பல கருத்துகளை துணிச்சலாக தெரிவித்துவந்தார். அவ்வாறு அவர் கொடுக்கும் பதிலடிகள் பல நேரம் சர்ச்சையாக மாறியுள்ளது. 2018ம் ஆண்டு தஞ்சையில் நடந்த பொதுகூட்டத்தில் கட்சியை பற்றி தவறாக பேசினால் நாக்கை அறுப்பேன் என கூறியது சர்ச்சையானது, பின்பு கிராமத்து பாணியில் பேசியதாக விளக்கமளித்தார். இவரது மகன் சிவவீரபாண்டியன், வேளாண் அலுவலராகப் பணியாற்றிவந்தவருக்கும் 2019ம் ஆண்டு உதவி இயக்குநாகரப் பதவி உயர்வு கிடைத்தது, இதல் மகனுக்காக துரைகண்ணு முறைகேடு செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. விவசாயிகள் தரப்பில் ஏற்பட்ட பல பிரச்னைகளை அமைச்சர் துரைகண்ணு சுமுகமாக முடித்துவைத்துள்ளார். மூன்று புதிய வேளாண் சட்டங்களை அரசு கொண்டுவந்த போது, அதுதொடர்பான விளக்கங்களை மாவட்டம் தோறும் கொடுத்து போராட்டங்களை தவிர்த்துள்ளார். 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் சில முக்கிய தேர்தல் பொறுப்புகளை துரைகண்ணுவிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. இவரின் மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து