சினிமா வீடியோ நவம்பர் 10,2020 | 07:20 IST
கீர்த்தி சுரேஷ் புது முடிவு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் 'அண்ணாத்த, சாணிக் காயிதம்' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'சரக்குவாரி பாட்டா, ரங்தே, குட்லக் சகி' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். கொரானோ காலத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த 'பெண்குயின்', 'மிஸ் இந்தியா' படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. ஆனால், இரண்டு படங்களுக்குமே வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இனி கதாநாயகி சார்ந்த படங்களில் நடிப்பதில்லை என்றும், நாயகர்களுடன் இணைந்து நடிக்க பல வாய்ப்புகள் வருவதால் அதிலேயே கவனம் செலுத்த கீர்த்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவி, 'ஆச்சார்யா' என்ற படத்தில் நடிக்க ஆயத்தமாகி வந்தார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்கும் முன்பு கொரோனா பரிசோதனை செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்தி உள்ளதாக கூறியுள்ள சிரஞ்சீவி, கடந்த ஐந்து நாட்களாக தன்னுடன் தொடர்பில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் தான் முதல்வர் சந்திரசேகர ராவ்வை சந்தித்து வெள்ள தடுப்பு நிவாரண நிதியாக ரூ.1 கோடி நிதி வழங்கினார் சிரஞ்சீவி. அவருடன் நடிகர் நாகார்ஜுனாவும் உடன் இருந்தார். இதனால் இவர்களும் பரிசோதனை செய்யும் சூழல் உருவாகி உள்ளது. ரஜினி வேடத்தில் தனுஷ் : லிங்குசாமியின் ஆசை நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க விரும்புவதாக இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''ரஜினியை வைத்து நான் எந்தப் படமும் இதுவரை இயக்கியதில்லை. ஆனால் அவருடைய தீவிர ரசிகர் என்பதால் அவரின் வாழ்க்கையைப் படமாக்க விரும்புகிறேன். அவரது வேடத்தில் நடிகர் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும். ரஜினியின் ஸ்டைலும் தனுஷூக்கு நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என தெரிவித்துள்ளார். 'அந்தாலஜி' படத்தில் அமலாபால் 'ஆக்சஸ் பிலிம் பேக்டரி', பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து தயாரிக்கும், நான்கு கதைகள் உடைய, 'அந்தாலஜி' படத்திற்கு விக்டிம் என பெயரிட்டுள்ளனர். இதை சிம்புதேவன், ராஜேஷ், பா.ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு இயக்குகின்றனர். வாழ்வில், நாமும் ஒருமுறை ஏதாவது ஒரு வகையில் விக்டிமாக இருந்திருப்போம். இதை மையப்படுத்தியதே, இந்த படம். இதில் நாசர், தம்பி ராமையா, பிரசன்னா, அமலாபால், 'நட்டி' நட்ராஜ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்கிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு. அமிதாப்பை இயக்கும் அஜய் தேவ்கன் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன், 'யு மி அவுர் ஹம், சிவாய்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சில படங்களில் நடிப்பவர், மூத்த நடிகர் அமிதாப் பச்சனை வைத்து 'மே டே' என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதோடு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து சிரிக்க வைக்கும் காமெடி படமாக உருவாக இருக்கிறதாம்.
வாசகர் கருத்து