சினிமா வீடியோ நவம்பர் 12,2020 | 07:20 IST
தீபாவளிக்கு 'மாஸ்டர்' டீசர்? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் இப்படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் தீபாவளிக்கு இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளனர். பட வெளியீட்டிற்கு முன்பாக டிரைலரை வெளியிடலாம். தாமதமாக சவாலை ஏற்ற ரகுல் மரக்கன்றுகளை நடும் 'க்ரீன் இந்தியா சேலஞ்ச்' தெலுங்குத் திரையுலகினர் செய்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா மரக்கன்றுகளை நட்டு, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை செய்ய சொல்லி கேட்டிருந்தார். மூன்று மாதங்களுக்குப் பின் இப்போது அதை ஏற்று மூன்று மரக்கன்றுகளை நட்டார். “தாமதம் தான், ஆனாலும் ஏற்றுக் கொண்டேன். என்னை பரிந்துரை செய்த நாக சைதன்யாவுக்கு நன்றி. வேறு யாரையும் நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் எனது ரசிகர்களையும் தலா மூன்று மரக்கன்றுகளை நட்டு இதைத் தொடர கேட்டுக் கொள்கிறேன். இந்த பூமியை பசுமையாக வைப்பது நமது பொறுப்பு,” என கேட்டுக் கொண்டுள்ளார் ரகுல். தூய்மை பணியாளரை நெகிழ வைத்த கனிகா பைவ்ஸ்டார், ஆட்டோகிராப் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்தவர் கனிகா. சமூகவலைதளத்தில் துப்பரவு தொழிலாளி ஒருவருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து, ''காலையில் நடைபயிற்சி சென்போது துப்புரவு பணியாளர் ராமு எதிர்ப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களது பகுதியை பராமரித்து வருகிறார். அவரை பார்த்து காலை வணக்கம் சொன்னேன். அவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. என்னிடம், “அம்மா.. நாங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது பணமோ, பொருளோ அல்ல,, அன்பான சில வார்த்தைகளும் எங்களுக்குரிய ஒரு மனிதாபிமான அங்கீகாரமும் மட்டுமே” என்று கூறினார். நானே முன்வந்து அவருடன் போட்டோ எடுத்தேன். நம்முடைய ஒரு புன்னகையும், வாழ்த்தும் ஒருவரின் அன்றாட தினத்தை மேலும் மகிழ்ச்சிகரமானதாக்கும்'' என பதிவிட்டுள்ளார். தாத்தாவானார் விக்ரம் நடிகர் விக்ரமிற்கு அக்ஷிதா என்ற மகளும், துருவ் என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்ஷிதாவிற்கு 2017ல் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மகள் வழி பேரனான மனுரஞ்சித்துடன் திருமணம் நடைபெற்றது. கர்ப்பமாக இருந்து வந்த அக்ஷிதாவிற்கு சமீபத்தில் கொரோனா பிரச்னையால் வீட்டளவில் வளைகாப்பு நிகழ்வை நடத்தினர். இந்நிலையில் அக்ஷிதாவுக்கு மகள் பிறந்திருக்கிறார். இதனால் விக்ரமிற்கு தாத்தாவாக புரமோஷன் கிடைத்துள்ளது. ரஜினி பற்றி நான் அப்படி பேசியிருக்க கூடாது - ஆர்.ஜே.பாலாஜி நயன்தாராவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி, தனது நண்பர் சரவணன் உடன் இணைந்து இயக்கி, நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' படம் நவ., 14ல் ஓடிடியில் வெளியாகிறது. சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பாலாஜியிடம் ஒருவர், ரஜினி பற்றி கேட்டார். அதற்கு அவர், ''நான் ரஜினியின் ரசிகன். அவரின் தளபதி முதல் தர்பார் வரை பல நினைவுகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் அவரின் அரசியல் வருகை குறித்து ஒரு பேட்டி கொடுத்தேன். நான் அப்படி பேசியிருக்க கூடாது என பின்பு வருந்தினேன். அவருக்கு எல்லா சந்தோஷங்களும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்'' என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் அரசியல் வருகை தொடர்பான ஒரு பேட்டியில் அதை கிண்டலடித்து பேசியிருந்தார் பாலாஜி.
வாசகர் கருத்து