பொது நவம்பர் 23,2020 | 20:20 IST
மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவற்றுக்கு தீர்வு காண்பதை குறிக்கோளாக கொண்டு ஒரு நாளிதழ் தொடங்கப்பட்டது என்றால் அதுதான் தினமலர் என்பது வரலாற்று உண்மை. சராசரி மக்களின் குரலாக நாள் தோறும் ஒலிக்கும் நாளிதழ் தினமலர் என்பது அதன் லட்சோப லட்சம் வாசகர்களுக்கு நன்றாக தெரியும். எனினும், தினமலரின் புதுமையான அணுகுமுறையால் கவரப்பட்டு தினமும் வந்து சேர்கின்ற புதிய வாசகர்கள் பலருக்கு "நாட்டுப் பற்று, மக்கள் சேவை" என்கிற தினமலர் தாரக மந்திரத்தின் பாரம்பரியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் தினமலர் இதழின் சிறப்புகளை சிலாகித்து பதிவிட்ட கோவை வாசகர் ஒருவர், "ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் நிர்வாக தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டாமா?" என்று கேட்டுள்ளார். கோவையில் ஸ்மாட் சிட்டி என்ற பெயரில் நடக்கும் அவலங்களை குறித்து செய்திகள் வருவது இல்லையே என கேள்வி கேட்டுள்ளார். அன்பான வாசகரே, நீங்கள் திரையில் பார்க்கும் இந்த செய்திகள் அனைத்தும் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் கோவை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தினமலர் ஆவணப்படுத்திய ஆதாரபூர்வ செய்திகள். நிதி செலவீடு, சாலை அமைப்பது, குளங்களின் நிலை, கோயில்கள் என கடந்த சில மாதங்களில் மட்டும் இரண்டு டசன் செய்திகளுக்கு மேல் பிரசுரமாகி இருப்பதை நீங்களே பார்க்கலாம். மாவட்டம் வாரியாக வெளியாகும் தினமலர் நாளிதழின் மாநகர பக்கங்களை தினமலர் ஐ-பேப்பர் தளத்தில் சொடுக்கிப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். கேள்வி கேட்டது ஒரே ஒருவர்தானே என்று அலட்சியமாக கடந்து செல்லும் நாளிதழ் அல்ல தினமலர். ஒரு வாசகர் என்றாலும் அவரை திரு வாசகராக பாவித்து பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில்.. தினமலர் உங்கள் நாளிதழ். நமது நாளிதழ்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: