பொது ஜனவரி 02,2021 | 10:50 IST
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழே வந்து விட்டது. கடுமையான பாதிப்பைக்கண்ட சென்னையிலும் தொற்று பரவல் குறைந்து விட்டது. ஆனால் சென்னை ஐஐடியில் டிசம்பர் தொடக்கத்தில் திடீரென கொரோனா பரவ தொடங்கியது. கிட்டத்தட்ட 200 பேர் பாதிக்கப்பட்டனர். புதிய ஹாட் ஸ்பாட் ஆக மாறியது. கேண்டீனில் இருந்து தான் தொற்று பரவியது உறுதியானது. இப்போது, சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலும் ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த 15 நாட்களில் ஓட்டல் பணியாளர்கள், ஓட்டலில் தங்கியிருப்பவர்கள் என 605 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில், ஓட்டலின் சமையல் ஊழியர்கள், அறைகளில் தங்கியிருந்தவர்கள் என, 85 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லை. சிலருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர் என மாநகராட்சி இணை ஆணையர் திவ்யதர்ஷினி கூறினார். ஓட்டல் ஊழியர்கள், தங்கியிருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, விருந்துகள், நிகழ்ச்சிகளை பிறந்த நாள், திருமண விழாக்களை நடத்த சோழா ஓட்டல் நிர்வாகத்துக்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது; அதனால் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வருவதாக ஓட்டல் நிர்வாகம் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளது. சோழா ஓட்டல் ஹாட் ஸ்பாட்டாக மாறிய நிலையில், ஓட்டல் நிர்வாகங்கள் கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். ஓட்டல்களில் நடத்தப்படும் பிறந்த நாள், திருமண விழாக்களில் எவ்வளவு பேர் கலந்து கொள்ள வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை சில ஓட்டல்கள் மதிப்பதில்லை. கொரோனா விதிகளை பின்பற்றாத ஓட்டல்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
வாசகர் கருத்து