Advertisement

அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றம்

பொது ஜனவரி 15,2021 | 17:50 IST

Share

அமெரிக்காவில் 67 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் பெயர் லிசா மான்ட்கோமெரி. வயது 52. லிசாவை காப்பாற்ற அவரது வக்கீல்கள் கடைசி நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனு மேல் மனு போட்டனர். சிறுவயதிலேயே மூளையில் பாதிப்புடன் பிறந்தவர் லிசா. கற்பனை உலகில் வாழ்பவர். மரண தண்டனையை நிறைவேற்றப் போகிறார்கள் என்ற உண்மையைக் கூட உணர முடியாத மனநிலையில் அவர் இருக்கிறார் என வாதங்கள் முன் வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. 2004 ம் ஆண்டில் மிசூரியில் வசித்த 23 வயது நிரம்பிய பாபி ஸ்டின்னெட் என்ற நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை திருடினார். பாபி பரிதாபமாக இறந்தார். குழந்தையுடன் தப்பிய லிசா தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக குடும்பத்தினரை நம்ப வைத்தார். ஆனால், பின்னாலேயே வந்த போலீசார் லிசாவை கைது செய்து, அவர் நாடகத்தை அம்பலப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்த குழந்தை பாபி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2004ல் லிசாவுக்கு 36 வயது. குழந்தை பிறக்காத ஏக்கத்தில் இருந்த லிசா, பாபியுடன் வலிய போய் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அவர் வயிற்றில் இருக்கும் சிசுவை களவாட சதித்திட்டம் தீட்டினார். அதற்காக, ஆபரேஷன் மூலம் குழந்தையை வெளியே எடுப்பது பற்றி இண்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து விஷயங்களை அறிந்து கொண்டார். அதன்பிறகே, பாபி வீட்டுக்கு போய் இந்த கொடூர செயலை லிசா செய்துள்ளார்... இப்படி மிக சாமர்த்தியமாக திட்டம் போட்டுத்தான் பாபியை லிசா கொலை செய்தார். இது, மிகவும் கொடூர குற்றம் என அரசு தரப்பு வக்கீல்கள் நிரூபித்தனர். அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. ஜனவரி 12ம்தேதி இண்டியானா மாகாணத்தில் உள்ள சிறையில் விஷ ஊசி செலுத்தி லிசாவின் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றினர். அமெரிக்காவில் 28 மாகாணங்களில்தான் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட 22 மாகாணங்களில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொடூர குற்றமாக இருந்தால் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவரையும் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் அமெரிக்க அரசுக்கு உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் மாகாண அளவிலான கோர்ட், தேசிய அளவிலான ஃபெடரல் கோர்ட் இரண்டிலும் குற்ற வழக்குகள் விசாரிக்கப்படும். அப்பீல் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் ஃபெடரல் கோர்ட்களுக்கு உண்டு. 1972 ல் மாகாண அளவிலும் தேசிய அளவிலும் மரண தண்டனையை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. அந்தத் தடை 1976ல் விலகிய பிறகு இதுவரை 17 பெண்களுக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. லிசா 17 வது பெண். ஆனால், லிசாவைத் தவிர மற்ற 16 பெண்களும் மாகாண கோர்ட்களால் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டவர்கள். லிசா ஃபெடரல் கோர்ட் மூலம் தண்டனை பெற்றவர். 1953 ல் தொழிலதிபரின் 6 வயது மகனை பணத்துக்காக கடத்தி கொடூரமாக கொன்ற போனீ ெஹடி Bonnie Heady என்ற பெண்ணுக்கு அந்த ஆண்டின் இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, சுப்ரீம் கோர்ட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண் லிசா என்பது குறிப்பிடத்தக்கது. 2003க்கு பிறகு, ஃபெடரல் கோர்ட் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடும் குற்றங்களை தடுக்க மரண தண்டனை அவசியம் என உறுதியாக நம்பும் அதிபர் ட்ரம்ப், ஃபெடரல் கோர்ட் மூலம் மரண தண்டனை வழங்கும் நடைமுறையை மீண்டும் தொடங்க கடந்தாண்டு உத்தரவிட்டார். ஜனவரி 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ள பைடன், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். பைடன் அதிபராகும் வரை மரண தண்டனையை ஒத்தி வைக்க உத்தரவு வாங்கி விட்டால் லிசியை காப்பாற்றி விடலாம் என, அவரது வக்கீல்கள் இறுதிவரை முயற்சித்தனர். கடைசி கட்ட போராட்டங்கள் தோல்வியில் முடிந்தன.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

raghavan
raghavan , இந்தியா. 15-ஜன-2021 | 19:06:09 IST Report Abuse

பீடை ஒழிந்தது

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X