பொது ஜனவரி 15,2021 | 21:24 IST
கார் தலைநகர் பாட்னாவில் விமான நிறுவன மேலாளார் ரூபேஷ் குமார் என்பவர், வீட்டு வாசலில் சிலரால் சுட்டு கொல்லப்பட்டார். அவருடைய வீடு முதல்வர் நிதிஷ் குமார் வசிக்கும் ஏரியாவில் இருக்கிறது. கொலையில் இதுவரை துப்பு துலங்கவில்லை. நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். பலரும் அதே விஷயம் பற்றி கேட்டதால், நிதிஷ் டென்சன் ஆனார். “போலீசிடம் கேட்க வேண்டியதானே.. என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? கொலை, கொள்ளை எல்லாம் முன்கூட்டியே சொல்லி நடப்பது இல்லை. நடந்த பிறகுதான் தெரியும். போலீஸ் விசாரிக்கிறது. ஒரே ஒரு கொலையால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது போல் கேட்கிறீர்களே? 15 ஆண்டுக்கு முன்னால் கணவன் -மனைவி ஆட்சி நடந்தபோது பார்க்காத கொலை கொள்ளையா?'' என்று பொரிந்து தள்ளினார். செய்தியாளர்கள் திகைத்து போனார்கள். சாந்த சொரூபி என பெயர் வாங்கியவர் நிதிஷ். நடந்துமுடிந்த தேர்தலில் அவருடைய கட்சிக்கு அடி விழுந்தது. அவரோடு கூட்டு சேர்ந்த பா.ஜ.க தனி பெரும் கட்சியாக வந்துள்ளது. நீங்களே முதல்வராக இருங்கள் என்று அது விட்டு கொடுத்தது. ஆனாலும், உடைந்த நாற்காலியில் உட்கார்ந்தவர் போல நிதிஷ் பதட்டமாகவே இருக்கிறார்.
வாசகர் கருத்து