அரசியல் பிப்ரவரி 26,2021 | 10:52 IST
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி, ஈரோடு, பெருந்துறையில் நடந்தது. உதவி பொறியாளர் நியமனத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் அலுவலகத்தில் இருந்து இரண்டு பேரிடம் லஞ்சம் கேட்ட ஆடியோவை, ஸ்டாலின் வெளியிட்டார். அவர் எதிர்பார்த்த அதிர்ச்சி அலைகள் எதையும் அந்த ஆடியோ ஏற்படுத்தவில்லை. மாறாக, பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பற்றி, தளபதி வாயே திறக்காதது ஏன்? என்பதுதான் திமுக, அதிமுக இரண்டிலுமே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலுக்கு முன், ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர், சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகிய இரண்டு பொறுப்புகள் தோப்பு வெங்கடாசலத்திடம் இருந்தன. தேர்தல் முடிந்ததும், இரு பதவிகளையும் பறித்து, பவானி எம்எல்ஏ கருப்பணனுக்கு வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணத்துக்கு பின், கூவத்துார் கூத்தின்போது முக்கிய பங்காற்றினார் தோப்பு வெங்கடாசலம். அம்மா பறித்த பதவிகளை திரும்ப தர வேண்டும் என மிரட்டிப்பார்த்தும் இன்று வரை பலன் இல்லை. மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்பிரமணி உள்ளிட்ட சிலருடன், தினகரன் அணிக்கு செல்ல போகிறார்; செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து, திமுகவுக்கு செல்ல போகிறார் என்றெல்லாம் அவரது ஆட்கள் கிளப்பி விட்டும் பலன் இல்லை. இம்முறை தோப்புக்கு சீட் வழங்கினால், எதிர்த்து சிலரை நிறுத்தவும் கருப்பணன் தரப்பு தயாராக இருப்பதாக தகவல். அப்படி நடந்தால், தோப்பு, திமுகவுக்கு தாவுவார் என்பது இன்னொரு தகவல். தோப்பு அமைச்சராக இருந்தபோது கோகோ கோலா ஆலைக்கு தண்ணீர் எடுத்து கொள்ள அனுமதி வழங்கினார். ஜெயலலிதா தலையிட்டு அதை ரத்து செய்தார். அதில் தொடங்கி தோப்பு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஸ்டாலின், தோப்பு விஷயத்தில் எதையுமே அறியாத பச்சைப் பிள்ளையாக இருக்கிறாரே, எப்படி? என்பது அதிமுகவினரின் ஆச்சரியம்.
வாசகர் கருத்து