Advertisement

தலைவர்களுக்கு சிக்கல்

அரசியல் பிப்ரவரி 27,2021 | 07:25 IST

Share

வேட்பாளராக நிற்க விரும்பும் உறுப்பினர்கள், விருப்ப மனு கொடுக்கலாம் என கட்சிகள் அறிவித்து உள்ளன. இது சாதாரண நடைமுறை. ஆனால், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறுவதும், யாருக்காக வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எந்த தொகுதிக்கு வேண்டுமானாலும் விருப்ப மனு தரலாம் என்று அறிவிப்பது பெரிய ஊழலுக்கு கதவை திறந்திருக்கிறது. ஏன் என்றால், விருப்ப மனு சும்மா கொடுக்க முடியாது. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதுவும், முக்கிய கட்சிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம். பெரிய கட்சிகள் இதிலேயே கோடிக் கணக்கில் சேகரித்து விடும். கட்டணத்தை ரொக்கமாக வாங்கி கொண்டு ரசீது கொடுக்கின்றன கட்சிகள். அது சட்ட விரோதம் என்கிறது வருமான வரி சட்டம். பண பரிமாற்றத்தில் ரொக்கமாக பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்கக் கூடாது; செக், டிராப்ட் அல்லது டிஜிட்டல் வழியாகத்தான் கொடுக்கலாம். அப்படி இருக்கையில், ஆளுக்கு 25 ஆயிரம் வீதம் ரொக்கமாக செலுத்துவது எப்படி? என வருமான வரி அதிகாரிகள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ரொக்கமாக கொடுப்பது மட்டும் அல்ல; வாங்கினாலும் குற்றம். ஆனால் கட்சிகள் கட்டு கட்டாக வாங்கி பெட்டியில் போடுகின்றன. கருப்பை வெள்ளையாக்கும் முயற்சியாக கட்சிகள் இதை செய்யக்கூடும் என கணக்காளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். என்றாலும், விருப்ப மனு போடும் தனி நபர்கள்தான் வருமான வரி சட்டங்களால் பிரச்னைகளை சந்திப்பார்கள் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். விருப்ப மனு கட்டணமாக குவியும் பணத்தை நன்கொடை என கட்சிகள் கணக்கு காட்டினாலும் சிக்கல்தான் என்கிறார் ஆடிட்டர் ஸ்ரீராம் சேஷாத்ரி. இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை பெறுவது சட்ட விரோதம். தலைவர்கள் பலருக்கு தெரியாத ஒரு பிரச்னையையும் அவர் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். தலைவர்களின் பெயராலும் நிறைய தொண்டர்கள் விருப்ப மனு போடுகிறார்கள். அதற்கு கட்டணமும் செலுத்துகின்றனர். அது கட்சிக்கு போய் சேர்ந்தாலும், சம்பந்தப்பட்ட தலைவருக்காக செலுத்தப்படுவதால், அந்த தலைவரின் வருமானமாகத்தான் சட்டம் அதை கணக்கிடும். தலைவர் வருமான கணக்கு தாக்கல் செய்யும்போது, இதையும் பதிவு செய்தாக வேண்டும். இல்லை என்றால், வருமானத்தை குறைத்து காட்டினார் என்று சட்டம் பாயும் என அவர் எச்சரிக்கிறார். தலைவர்கள் மீது அல்லது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? என வருமான வரித்துறை அதிகாரியை கேட்டபோது, 'நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்று மட்டும் அவர் சொன்னார். - தி.மு.க.வில் பொது தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய். விண்ணப்ப படிவத்தின் விலை ஆயிரம் ரூபாய். அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் போட்டியிட விருப்ப மனு கட்டணம் 15 ஆயிரம் ரூபாய். புதுச்சேரியில் நிற்க 5,000 ரூபாய் கட்டணம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X