Advertisement

மா.வெங்கடேசன் பரபரப்பு பேட்டி

அரசியல் பிப்ரவரி 27,2021 | 09:22 IST

Share

ஈரோட்டில் ஸ்டாலின் பேசிய பொதுக்கூட்டத்தில், திமுக எம்.பி அந்தியூர் செல்வராஜ் மேடைக்கு கீழே தனியாக உட்கார வைக்கப்பட்ட சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. இது தாழ்த்தப்பட்டோருக்கு நேர்ந்த அவமதிப்பு; இது குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க வேண்டும் என மனு அனுப்பி இருக்கிறார் மா.வெங்கடேசன். இவர் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர். இது மத்திய இணை அமைச்சருக்கு நிகரான பதவி. வெங்கடேசனை தொடர்பு கொண்டோம். ஏன் இப்படி ஒரு மனுவை தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பினீர்கள்? தமிழகம் முழுவதும் பல அரசியல் மேடைகளிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கிறது. பட்டியல் இனத்தவர்களை கட்சித் தலைவர்கள் பகிரங்கமாக அவமதிக்கின்றனர். அந்தியூர் செல்வராஜை மேடையை விட்டு இறங்க வைத்து, தனி சேர் போட்டு உட்கார வைத்துள்ளனர். இது அவருக்கு மட்டும் இழைக்கப்பட்ட அவமானம் இல்லை; ஒட்டுமொத்த பட்டியல் இனத்தவரையும் அவமான படுத்தியதாகவே கருத வேண்டும். அதனால்தான், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு மனு கொடுத்தேன். பா.ஜ.,வைச் சேர்ந்த நீங்கள் தேர்தல் நேர அரசியலுக்காக, தி.மு.க.,வையும் ஸ்டாலினையும் குறிவைத்து பிரச்னை ஏற்படுத்துகிறீர்களா? இதை செய்யாமல் விட்டால், இந்த மாதிரி பிரச்னைகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்படும் ஆபத்து இருப்பதால்தான், புகார் கொடுத்திருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறியிருக்கிறேன். தாழ்த்தப்பட்டோர் இனத்துக்கே அவமானம் என எப்படி சொல்கிறீர்கள்? செல்வராஜ் மறுப்பு சொல்லாமல் போய் சேரில் உட்கார்ந்து கொண்டார்தானே? செல்வராஜை தனி மனிதராக பார்க்க கூடாது. அவர், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். எனவே, தனிப்பட்ட முறையில் அவருக்கு அவமரியாதை நேர்ந்தாலும், அது அந்த சமுதாயத்துக்கு நேர்ந்த அவமானமாகத்தான் கருத முடியும். தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்கும் சட்டமே அப்படித்தான் சொல்கிறது. செல்வராஜே கவலைப்படவில்ல்லை; உனக்கு என்ன வந்தது? என்பது அந்த சட்டத்தின் மாண்பையே கேலி செய்யும் கேள்வி. நான் மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாடுதான் எடுக்க வேண்டும். செல்வராஜ் சின்ன முணுமுணுப்பு கூட காட்டவில்லையே? தலைவரே அவமானப்படுத்தினால் தொண்டன் என்ன செய்ய முடியும்? முதலாளி அவமானப்படுத்தினால் ஊழியன் எப்படி எதிர்த்து கேட்க முடியும்? அப்படித்தான் செல்வராஜ் நிலையும். எனவேதான் அவருக்காக நான் குரல் எழுப்புகிறேன் என எடுத்துக் கொள்ளுங்கள். இப்படித்தான் பஞ்சமி நில விவகாரத்தை கையில் எடுத்து, முரசொலி அலுவலக இடத்தை பிரச்னைக்கு உள்ளாக்கினீர்கள்? தி.மு.க.வுடன் உங்களுக்கு என்னதான் பிரச்னை? எனக்கும் தி.மு.க.,வுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. தலித்களுக்கு எங்கே பிரச்னை என்றாலும், அதை எழுப்பத்தான் செய்கிறேன். தி.மு.க., ஒரு பெரிய கட்சி என்பதால் நான் குற்றச்சாட்டு வைக்கும்போது, பரபரப்பு உண்டாகிறது. பொதுவாக ஒரு விஷயத்தை பலரும் கவனிக்கவில்லை. அதாவது, தி.மு.க., தலைவர்களைப் பொருத்த வரை, தலித்களை கேவலமாக நடத்தும், பேசும் போக்கு தொடர்ந்து நடக்கிறது. தயாநிதி மாறன் என்ன சொன்னார்? தலைமைச் செயலகத்தில் தன்னை ஒரு தலித் போல நடத்தினர் என்றார். அதற்கு என்ன அர்த்தம்? தலித் என்றால் இப்படித்தான் நடத்துவர்; இப்படித்தான் நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவருடைய அடி மனதில் இருக்கிறது. உள்ளே இருப்பதுதானே வெளியே வரும். பேசியது தவறு என உணர்ந்தால், வருத்தம் தெரிவித்து, பிரச்னையை முடிக்கலாம். ஆனால், அவர் முன் ஜாமின் வாங்குகிறார். விடலாமா? அதே போலத்தான், ஆர்.எஸ்.பாரதியும். தலித்களுக்கு நீதிபதி பதவி நாங்கள் போட்ட பிச்சை என்கிறார். இது தவறு என்பது அவருக்கு தெரியாதா? தலித்களை தி.மு.க., அவமதிக்கிறது என்கிறீர்கள். அதே தி.மு.க.,தானே, அந்தியூர் செல்வராஜுக்கு எம்.பி., பதவியும், துணை பொதுச் செயலர் பதவியும் கொடுத்திருக்கிறது? இன்னொரு துணை பொதுச் செயலராக ராசாவைத்தானே நியமித்திருக்கிறது? அதெல்லாம் தவிர்க்க முடியாமல் செய்தது. தலித் ஓட்டுக்களை கவர்வதற்காக செய்வது. மேடையை விட்டு கீழே இறக்கி, தனியாக சேர் போட்டு உட்கார வைத்தது ஏன்? இந்த கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லட்டும். வருத்தம் தெரிவித்தால், பிரச்னை முடிந்து விடும்தானே? அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, நான் புகார் கொடுக்கவில்லை. தொடர்ச்சியாக இப்படி நடக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். முறையாக விசாரித்து உண்மை என்றால் நடவடிக்கை எடுங்கள் என்றுதானே கேட்கிறேன். நடவடிக்கை என்றால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சட்ட விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், ஸ்டாலினுக்கு ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இதே பா.ஜ., மேடையில் நடந்திருந்தால், இதே மாதிரி புகார் கொடுத்திருப்பீர்களா? இது திசை திருப்பும் கேள்வி. எந்த கட்சியில் இப்படி நடந்தாலும் குற்றம்தான். எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல என்கிறார், மா.வெங்கடேசன். இதனிடையே, அந்தியூர் செல்வராஜ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் அமோக ஆதரவைப் பார்த்து “தினமலருக்கு” எரிச்சல்! ஆகவே, அந்த நிகழ்ச்சியில் என்னை தனியாக நிற்க வைத்து விட்டனர் என்று அருந்ததியின மக்கள் மீது அக்கறை இருப்பது போல் வேடமிடுகிறது. சமூகநீதிக்கு எதிரான தினமலர் பத்திரிகை இப்படிச் செய்தி வெளியிடுவது வாடிக்கை! அதை “தலையில் தூக்கி வைத்துக் கொண்டு” வெங்கடேசன் “ஆடுவதுதான்” வியப்பாக இருக்கிறது. இது அவர் வகிக்கும் பதவிக்குத் துளியும் அழகல்ல! அருந்ததியின மக்களை இப்படி பொய் புகார்கள் மூலம் தி.மு.க.விற்கு எதிராக திருப்பி விடலாம் என்று வெங்கடேசனோ அவரை இயக்கும் பா.ஜ.க.வோ தினமலர் பத்திரிகையோ கனவு காண வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இப்படி சொல்லும் செல்வராஜ் பற்றி ஒரு பிளாஷ்பேக்: 1996 முதல்- 2001 வரையிலான தி .மு.க., ஆட்சியில் அந்தியூர் செல்வராஜ் கதர் கிராமத் தொழில் மற்றும் அச்சு, எழுது பொருள் துறை அமைச்சராக இருந்தார். 1997 மார்ச் 25 ம் தேதி பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவில் செல்வராஜ் குண்டம் இறங்கினார். "தி.மு.க., ஆட்சி 5 ஆண்டுகள் சிறப்பாக நடக்க வேண்டி, குண்டம் இறங்கியதாக" தெரிவித்தார். உடனே செல்வராஜை சென்னைக்கு வரவழைத்து கண்டித்தார் கருணாநிதி. குண்டம் இறங்கியது காட்டுமிராண்டிதனம், என கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அதோடு நிற்கவில்லை. செல்வராஜிடம் இருந்த அச்சு, எழுது பொருள் துறையை பறித்து பொங்கலூர் பழனிசாமிக்கு கூடுதல் பொறுப்பாக கொடுத்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X