பொது பிப்ரவரி 28,2021 | 08:25 IST
வலுவான எதிர் கூட்டணி அமைய விடக் கூடாது என்பதில், இரண்டு திராவிட கட்சிகளும் உறுதியாக உள்ளன. இருவரும் அதற்காக மல்லுக்கட்டும் வேளையில் திடீரென எட்டிப் பார்க்கிறது மூன்றாவது அணி. அப்படி ஒன்று உருவானால், பெரிய கட்சியின் ஆட்சி கனவு நொறுங்கி விடும் ஆபத்து இருக்கிறது. புது அணி அமைவதை தடுப்பது சாத்தியம் அல்ல என்பதால், அதை தனக்கு சாதகமாக்கும் பின்னணி வேலைகளை இரு கட்சிகளும் தொடங்கி விட்டன. தி.மு.க கூட்டணியில் இருந்து ரவி பச்சமுத்துவின் ஐ.ஜே.கே விலகி விட்டது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சரத்குமாரின் ச.ம.க விலகி விட்டது. பின்னர் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பொன்னாடை போர்த்தினார் நாட்டாமை. மூன்றாவது அணி பற்றியும், அதன் முதல்வர் வேட்பாளர் குறித்தும் பேசியுள்ளனர். கமல் தெளிவாக சொல்லி விட்டார். 'முதல்வர் பதவி மீது எனக்கு ஆசை கிடையாது. ஆனால்...... என்னை அந்த நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்பது மய்யம் தொண்டர்களின் ஆசை. அதற்கு குறுக்கே வர நான் விரும்பமில்லை' என்று. கமல், சரத், சீமான், பச்சமுத்து உள்ளிட்ட சிலரை சேர்த்து, மூன்றாவது அணி அமைக்க ஜரூராக வேலை செய்யும் சரத் குமார், அதை தொடங்குமுன் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அடுத்து யாரை சந்திக்கப் போகிறார் என்பது, அரசியல் வட்டாரத்தில் அடிபடும் கேள்வி. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், மூன்றாவது அணிக்கு பிரைட் சான்ஸ் இருக்கும் என்பது சரத் கணக்கு.
வாசகர் கருத்து