Advertisement

இந்த லெவலுக்கு வந்துட்டாங்களே

அரசியல் மார்ச் 12,2021 | 09:22 IST

Share

ஒவ்வொரு ஜாதிக்கும் குறிப்பிட்ட ஓட்டு வங்கி உண்டு. அதனால், ஜாதி கட்சித் தலைவர்கள் தேர்தலில் முக்கியமானவர்கள். 2001 தேர்தலில், ஏழு ஜாதிக் கட்சிகளை, தி.மு.க, கூட்டணியில் இணைத்து, தேர்தலை சந்தித்தார் கருணாநிதி. ‛ வானவில் கூட்டணி' என்று பெயரிட்டார். ஒவ்வொரு ஜாதி கட்சிக்கும் ஏழு, எட்டு என, தொகுதிகளை வாரி வழங்கினார். வானவில் கூட்டணி ஜெயிக்கவில்லை. ஆனால், ஜாதியின் பெயரால் கட்சி துவங்குவது லாபமான,‛ பிசினஸ்' என்பது அதன் மூலம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. நிறைய பேர் அந்த தொழிலில் குதித்தனர். ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து தெலுங்கு பேசும் மக்களை ஒன்றிணைத்து, ஆர்.எம்.ஆர்., பேரவை மூலம், தெலுங்கர் ஓட்டுகளை வாங்கி பதவிக்கு வரும் கனவோடு ராம் மோகன் ராவ் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியே முயற்சி செய்தார் என்றால், கருணாநிதி திட்டத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணரலாம். இந்த தடவை ராம் மோகனை காணோம். ஆனால், அவரைப் போலவே நிறைய பேர், ஜாதி கட்சிகளை துவங்கி நடத்தி வருகின்றனர். இவர்கள், ஜாதிக்கான பிரச்னைகளை வைத்து, அவ்வப்போது அரசுக்கு கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் இருப்பை காட்டிக் கொள்கின்றனர். தமிழகத்தில் எப்படியாவது காலுான்றத் துடிக்கும், பா.ஜ.வும் ஜாதிக் கட்சிகளை நம்பி அவர்கள் கேட்டதை செய்து கொடுத்து அரசியல் செய்வதை பார்க்கிறோம். தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த, ஏழு ஜாதியினருக்கு வழங்கியது இந்த வியூகத்தின் ஒரு பகுதியே. இதேபோல முத்தரையர், நாடார், முதலியார், செட்டியார் என பல இனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து பேசினர். அமித் ஷா இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார். ஜாதிக் கட்சி பிரமுகர்களை டில்லிக்கு வரவழைத்து பேசுகிறார். பா.ஜ.,வை பொறுத்தவரை, இது ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சி என கூறிக் கொள்கிறது. இந்த விஷயங்களை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடு தான், சிறு சிறு ஜாதிய அமைப்புகளையும், ஜாதிய பின் புலத்தோடு செயல்படும் கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் சேர்த்து, அவர்களுக்கு தொகுதியும் வழங்கி போட்டியிட வைப்பது. தி.மு.க., கூட்டணியில், மக்கள் விடுதலைக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளுக்கு ஒன்றில் இருந்து, மூன்று,‛ சீட்'கள் வரை வழங்கி உள்ளனர். தேவேந்திரர், வன்னியர், அருந்ததியர், முக்குலத்தோர், சிறுபான்மையின முஸ்லிம் சமூகங்களை உள்ளடக்கி இந்தக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மக்களின் ஓட்டுகளை பெறும் திட்டத்தோடு தான், இக்கட்சிகளுக்கு,‛ சீட்' வழங்கி இருக்கிறது, தி.மு.க., இதில், மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவிர மற்ற கட்சிகளெல்லாம் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட சம்மதித்துள்ளன. இதன் மூலம், ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க முயற்சிக்கிறது தி.மு.க., அதேபோல, அ.தி.மு.க., கூட்டணியில் புரட்சி பாரதம், பசும்பொன் தேசிய கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு,‛ சீட்' கிடைத்துள்ளது. ‛ஜாதிக் கட்சிகளை எப்படி சாதுர்யமாக நமது கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டேன் பார்த்தீர்களா?' என, இ.பி.எஸ்.,சும், ஸ்டாலினும் தங்கள் நிர்வாகிகளிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். அதே நேரத்தில், ஜாதிக்கட்சி தலைவர்களும் தமது நிர்வாகிகளிடம், ‛எப்படி சாதுர்யமாக பேசி அந்த கூட்டணியில் இடம் பிடித்து விட்டேன், பார்த்தீர்களா?' என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஜாதி அரசியல் நடந்த பிஹாரையும், உத்தர பிரதேசத்தையும் நாமெல்லாம் கிண்டல் செய்த காலம் மனதில் நிழலாடுகிறது. ஜாதி ஒழிப்பில், ஒரு காலத்தில் தீவிரமாக இருந்த திராவிடக் கட்சிகள் இந்த,‛ லெவலுக்கு' வந்திருப்பது சமூக முன்னேற்றமா, காலத்தின் கட்டாயமா? என தெரியவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X