Advertisement

பரவ வேண்டும் இந்த தொற்று!

பொது மே 28,2021 | 15:55 IST

Share

கடந்த 21 ம் தேதி காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு கோவிட் நோயாளி மரணம் அடைந்தார். அன்று மதியம் அவருடைய மனைவியும் அதே மருத்துவமனையில் இறந்தார். அடுத்தடுத்து இருவரின் மரணத்தை பார்த்த அதிர்ச்சி தாங்காமல் 24 வயது மகள் மயங்கி விழுந்து, வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். . மயக்கம் தெளிந்த மகள் படுக்கை விட்டு எழ முடியாத நிலைமை. துக்கத்தை மீறி குழப்பத்தில் தவிக்கிறார். அம்மா அப்பா உடல்களை மீட்டு இறுதி சடங்குகள் முடித்து தகனம் செய்யும் கடமையை எப்படி பூர்த்தி செய்வது? அண்ணனோ தம்பியோ கிடையாது. ஒரே மகள். உதவிக்கு அழைக்க எவரும் இல்லை. இரவெல்லாம் கண்ணீர் வடிக்கிறார். கடவுளிடம் மன்றாடுகிறார். மறுநாள் காலையில் அங்கு வந்த ஒரு இளைஞர் இதை பார்க்கிறார். விவரம் கேட்கிறார். கண் கலங்குகிறார். கோவிட் நோயாளியின் உடலை மருத்துவமனையின் பிணக்கிடங்கை விட்டு வெளியே கொண்டு வருவதே சாதாரண விஷயம் அல்ல என்பது அவருக்கு தெரியும். தம்பதியர் வசித்தது திருமுல்லைவாயில். அது ஆவடி நகராட்சியில் அடங்கிய பகுதி. உடல்கள் இருப்பதோ ராயப்பேட்டையில். சென்னை மாநகராட்சி பகுதி.. ஆவடி நகராட்சி சுகாதார ஆய்வாளர், இவர்கள் இந்த பகுதியில், இந்த முகவரியில் தான் வசிக்கிறார்கள் என்று சான்றளிக்க வேண்டும். இன்னாரிடம் உடலை ஒப்படைக்கலாம் என்று அனுமதி எழுதி தர வேண்டும். இரண்டும் காட்டினால்தான் ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து உடல்களை வெளியே எடுக்க முடியும். இளைஞர் ஆவடிக்கு போன் போடுகிறார். வேறு வேலை இருப்பதால் ராயப்பேட்டைக்கு வர இயலாது என்கிறார் ஆவடி சுகாதார ஆய்வாளர். சூழ்நிலையை விளக்கிய இளைஞர் ”உங்க லெட்டர் பேட்ல எழுதி கையெழுத்து போட்டு, அத மொபைல்ல போட்டோ எடுத்து வாட்சப்ல அனுப்புங்க” என்று வேண்டுகிறார். அதிகாரிக்கு நல்ல மனசு. அவ்வாறே செய்கிறார். அதை ராயப்பேட்டை மருத்துவமனை அதிகாரிகளிடம் காட்டி உடல்களை எடுத்து செல்ல அனுமதி பெறுகிறார். தகன முன்பதிவுக்காக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு செல்கிறார். கோவிட் மரணம் என்றால் சடலத்தை எப்படி கையாள வேண்டும் என்று அரசு விதி இருக்கிறது. மாநகராட்சியிடம் அத்தாட்சி பெற்று வாருங்கள் என்கிறார் மயான நிர்வாகி. மாநகராட்சியை தொடர்பு கொள்கிறார் இளைஞர். இறந்தவர்களின் ஆதார் அட்டை காட்டினால் சான்றிதழ் பெறலாம் என்கிறார் மாநகராட்சி அதிகாரி. படுக்கையில் இருக்கும் மகளிடம் விசாரிக்கிறார் இளைஞர். அந்த பெண்ணுக்கு அப்பா அதெல்லாம் எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை . இளைஞர் தளராமல் சில நண்பர்களை தொடர்பு கொள்கிறார். உடலை பார்க்க பயந்த உறவினர்கள் உதவி செய்ய முன்வந்தனர். ஒரு வழியாக அடையாள அட்டைகள் வந்து சேர்ந்தன. ஆனால், நேரம் இருட்டி விட்டதால் உடல்களை எடுக்க முடியாமல் போனது. அடுத்த நாள் ஞாயிறு. மருத்துவமனைக்கு வந்த இளைஞர் இருவரின் உடல்களை சவக்கிடங்கில் இருந்து வாங்கி, பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்கிறார். அரசு அனுமதித்த இரண்டு உறவினர்கள் முன்னிலையில் கடைசி சடங்குகள் நடந்தன. இளைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "அந்த அம்மா உடலை முதல்ல தகனம் செய்யுங்க. அவங்க வழக்கப்படி தீர்க்க சுமங்கலியா போய் சேரணும்னுதான் அவங்க ஆசை பட்ருப்பாங்க" என்கிறார். மயான ஊழியர்களும் நெகிழ்ந்து போகிறார்கள். 'மனிதம் என்கிற மகத்தான உணர்வு தொற்றாக பரவினால் கொரோனா போன்ற வைரஸ்களால் என்ன கிழிக்க முடியும்?' என்று தோன்றி இருக்கலாம். திருப்தியுடன் ராயப்பேட்டை சென்று மகளிடம் சொல்கிறார் இளைஞர். அந்த பிராமண பெண்மணி கண்ணீரால் நன்றி சொல்கிறார். எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல் கைகளை உயர்த்தி காட்டி விடை பெற்று செல்கிறார் முகமது அலி ஜின்னா. அடுத்து யாருக்கு உதவ அல்லா ஆணையிட போகிறான் என்ற சிந்தனையுடன்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X