அரசியல் ஜூன் 01,2021 | 10:43 IST
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதம் தொடர்பாக, நிதியமைச்சர் தியாகராஜனுக்கும் பா.ஜ.வின் வானதி சீனிவாசனுக்கும் வார்த்தை மோதல் முற்றியது. வானதியின் விமர்சனத்தை தாங்க முடியாமல், ட்விட்டரில் அவரை பிளாக் செய்தார் அமைச்சர் தியாகராஜன். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தியாகராஜன் பேசும்போது, மதுரை மாவட்டத்தை விட சிறிய மாநிலம் கோவா' அதற்கும் ஒரு ஓட்டு தமிழகத்துக்கும் ஒரு ஓட்டுதானா என கேட்டிருந்தார். கோவா உட்பட சிறிய மாநிலங்களை அவமதித்து விட்டார். எனவே, தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும். மறுத்தால் முதல்வர் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவா அரசு கொதித்தது. இந்த விவகாரத்தை குறிப்பிட்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், 'நிதியமைச்சர் தியாகராஜன் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், ஜனநாயகத்தை அவமதிக்கும் விஷயம். நமது மாநிலத்துக்கு இழுக்கு தேடி தந்துவிட்டார்' என விமர்சித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜன், 'சும்மா பொய் சொல்வதை நிறுத்திவிட்டு உருப்படியா ஏதாவது வேலை பாருங்கள். நீங்கள் பிறவியிலேயே பொய்யரா அல்லது அறிவு குறைவா?' என கேட்டார். ஒரு அமைச்சர் இப்படி அநாகரிகமாக பேசுவதா என எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. இதற்கும் வானதி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வானதியின் டுவிட்டர் கணக்கையே தியாகராஜன் 'பிளாக்' செய்து விட்டார். 'விமர்சனத்தை சந்திக்க சக்தி இல்லாமல் அற்பமாக செயல்படுகிறார் அமைச்சர்' என கண்டித்தார் வானதி. 'என்ன எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் உண்மையை மறைக்க முடியாது' என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து