பொது ஜூன் 21,2021 | 19:23 IST
தமிழக பள்ளிகளில் பாலியல் வன்முறையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பள்ளிகளிலும் 'மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு' அமைக்கப்படும். அனைத்து தரப்பினரும் குறைகளை தெரிவிக்க ஏதுவாக, கட்டணமில்லா தொலைபேசி மற்றும் இமெயில் முகவரியுடன், மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு கட்டுப்பாட்டு அறை வழங்கும். இதற்காக, பயிற்சி பெற்ற பல்துறை வல்லுநர்கள் நியமிக்கப்படுவர். ஆசிரியர்களுக்கு, போக்சோ சட்டத்தில் உள்ள பாலியல் குற்றங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படும். ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக பதிவு செய்து, மாணவர் பாதுகாப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள், புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு குழு அவற்றை பதிவு செய்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து