சம்பவம் ஜூலை 11,2021 | 23:24 IST
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை தலைமையிடமாக கொண்டு கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் Kitex நிறுவனம் இயங்கி வருகிறது. குழந்தைகள் ஆடை தயாரிப்பில் உலகளவில் 2வது பெரிய நிறுவனம் என்ற பெருமை கிடெக்ஸ்க்கு உண்டு. கேரளாவில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் கிடெக்ஸ் நிறுவனம், 3,500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஜவுளி பூங்காவை தொடங்க திட்டமிட்டது. இதற்காக, முழுவீச்சில் கிடெக்ஸ் நிர்வாக இயக்குனர் சாபு ஜேக்கப் ஈடுபட்டு வந்த நிலையில், 2வது முறையாக கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது மார்க்சிஸ்ட். அதன்பிறகு, தொடர்ச்சியாக 11 முறை கிடெக்ஸ் நிறுவனத்தில் கேரள அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஜேக்கப் குற்றம்சாட்டினார். புகார்கள் வந்தன; நடவடிக்கை எடுக்கிறோம் என்றது கேரள அரசு. தொடர் ரெய்டுகளால் வெறுத்துப்போன ஜேக்கப், 3500 கோடி ரூபாய் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதன்மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிடெக்சின் அறிவிப்பு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் கேரள அரசின் தரப்பில் யாரும் பேச்சு வார்த்தைக்கு முன்வராததால் வேறு மாநிலத்தில் ஜவுளி பூங்காவை தொடங்கப் போவதாக ஜேக்கப் அறிவித்தார். தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 9 மாநிலங்கள் ஜேக்கப்புக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைப்பு விடுத்தன. தெலங்கானா மாநில அரசு அறிவித்த சலுகைகள் ஜேக்கப்பை கவர்ந்திழுக்க பேச்சு வார்த்தைக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவுடன் பேச்சு நடத்தினார். வாரங்கல் மாவட்டத்தில் மெகா ஜவுளி பூங்காவை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. #Kitex #Kerala
வாசகர் கருத்து