பொது ஆகஸ்ட் 09,2021 | 19:43 IST
தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி பொது சுகாதார இயக்குனரகம் ஒரு சர்வேயை நடத்தியது. தமிழகம் முழுவதும் 95 பகுதிகளில் 30 வீடுகள் வீதம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 2855 பேரிடம் கருத்தறியப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், படிக்காதவர்கள், வேலையில்லாதவர்கள், மாணவ, மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என பல தரப்பினரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழகத்தில் 19.7 சதவீத ஆண்கள், 18.4 சதவீத பெண்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. வயது வாரியாக விவரம் வருமாறு: 18 டு 45 வயது வரை உள்ளவர்களில் 17 சதவீதம் பேரும், 45 டு 60 வயது நிரம்பியவர்களில் 18 சதவீதம் பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் தெரிவித்தனர். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களில் 80 சதவீதம் பேரும், பெண்களில் 82 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டு கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஊசி பயம், பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம், நமக்கு கோவிட் வராது என்ற குருட்டு நம்பிக்கை ஆகியவை தடுப்பூசி தயக்கத்துக்கு முக்கியமான காரணங்கள் என தெரிய வந்துள்ளது. தடுப்பூசி இல்லை என திரும்ப அனுப்பப்படுவது, எங்கே தடுப்பூசி போடுகிறார்கள் என்ற விவரம் தெரியாதது போன்ற காரணங்களாலும் பலர் தடுப்பூசி போடாமல் விட்டுள்ளனர். தடுப்பூசி சம்பந்தமாக மக்களிடம் உள்ள தவறான அபிப்ராயத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்த சர்வே உணர்த்தியுள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறினார். இப்போது நமக்குள்ள முக்கியமான பிரச்னை எல்லா மாவட்டங்களுக்கும் தடுப்பூசி விநியோகத்தை தங்கு தடையின்றி செய்வது மட்டும்தான் எனவும் அவர் கூறினார்.
வாசகர் கருத்து