மாவட்ட செய்திகள் ஏப்ரல் 11,2022 | 14:41 IST
ராணிபேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த சாத்தாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷாகிர், 29; எலக்ட்ரீஷியன். சென்னை, தாம்பரத்தில் வேலை செய்தார். அதே பகுதி ராஜன் என்பவர் மூலம் கடலுார் மாவட்டம், புலவன்குப்பம் உலகநாதனுடன், 42; அறிமுகம் ஏற்பட்டது. உலகநாதன் தன்னிடம் உள்ள இரிடியத்தை விற்றால் அதிக பணம் கிடைக்கும், ரூ. 4 லட்சம் கொடுத்து இரிடியத்தை வாங்கிச் செல்லுமாறு ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய ஷாகிர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் முன்பணமாக'கூகுள் பே' மூலமாக உலகநாதன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினர். நேற்று முன்தினம் உலகநாதன் வீட்டிற்கு ஷாகிர், சீனிவாசன் சென்றனர். அங்கு அவரும், என்.எல்.சி., ஊழியர் பாலசுப்ரமணியன், 52; ஆகியோர் ஒரு பொருளை காட்டி இது தான் இரிடியும், மீதமுள்ள ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து விட்டு எடுத்துச் செல்லுங்கள் என்றனர். தங்களிடம் தற்போது பணம் இல்லை. வங்கிக் கணக்கில் உள்ளதாக கூறினர். ஆத்திரமடைந்த உலகநாதன், பாலசுப்ரமணியன் ஆகியோர் ஷாகிர், சீனிவாசனை தாக்கினர். முத்தாண்டிக்குப்பம் போலீசில் ஷாகீர் புகார் அளித்தார். காடாம்புலியூர் போலீசார் உலகநாதன், பாலசுப்ரமணியனை கைது செய்தனர். மேலும், இரிடியம் எனக் கூறிய அலுமினிய தகடுகள், ஒயர்களை போலீசார் பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள ராஜனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து