பொது மே 13,2022 | 00:00 IST
முதுநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 21ம்தேதி நடப்பதை ஒத்தி வைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். 2021 முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தாமதமாக நடந்தது. இதனால், 2022 நீட் தேர்வுக்கு தயாராக தங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை; 2 அல்லது 3 மாதங்களுக்கு தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டுமென டாக்டர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வழக்கமாக ஜனவரியில் நடக்கும்; கோவிட் பரவல் காரணமாக, தாமதமாக நடக்கிறது. 2023 நீட் தேர்வை ஜனவரியிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம்; அதனால் தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என மத்திய அரசு வாதிட்டது. பல டாக்டர்கள் முதுகலை படிப்புக்காக வேறு இடங்களுக்கு சென்று விடுவதால் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது; தேர்வை ஒத்திவைத்தால் நோயாளிகள் மேலும் பாதிக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தேர்வு தேதியை ஒத்தி வைக்க மறுப்பு தெரிவித்தனர். நோயாளிகள் நலன்தான் முக்கியம்; அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என கூறிய நீதிபதிகள், டாக்டர்கள் தாக்கல் செய்த மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர். #SupremeCourt #Neet
வாசகர் கருத்து