பொது மே 24,2022 | 14:20 IST
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் பாண்டு. திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது 24 வயது மகன் அனில்குமார் சேர்க்காடு கூட்ரோட்டில் சித்தூர் செல்லும் சாலையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு அனில்குமார் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு மர்ம நபர்கள் அடகு கடையின் பின்னால் இருந்து சுவற்றை துளையிட முயற்சி செய்தனர். முடியாமல் போனதால் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவரை துளையிட்டு உள்ளே சென்றனர். அங்கிருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு நுழைந்தனர். லாக்கரை உடைத்து சுமார் 90 பவுன் தங்க நகை, 30 கிலோ வெள்ளி நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான அடகு நகை என மொத்தம் 70 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். கடையில் சிசிடிவி யை உடைத்து, டிவிஆர் யும் எடுத்துச் சென்றுவிட்டனர். காலை கடைக்கு வந்ததும் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்ட அனில்குமார், திருவலம் போலீசில் புகார் அளித்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அருகில் உள்ள கடைகளின் சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து