பொது மே 25,2022 | 10:41 IST
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ம் தேதி விலகினார். அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சில நாட்கள், கடற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார். மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் சுமுகநிலை திரும்பும்வரை மாலத்தீவில், குடும்பத்துடன் தஞ்சம் அடைய ஏற்பாடு செய்யுமாறு முகமது நஷீத்தை ராஜபக்சே கேட்டுக்கொண்டதாக மாலத்தீவு பத்திரிகையில் செய்தி வெளியானது. இலங்கை சென்றுள்ள முகமது நஷீத், ராஜபக்சேகுடும்பத்துடன் பாதுகாப்பாக வெளியேறி மாலத்தீவு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை நஷீத்தும், ராஜபக்சே குடும்பமும் மறுத்துள்ளனர். மாலத்தீவு பத்திரிகையில் வந்த செய்தி ஒரு முழுமையான கட்டுக்கதை என நஷீத் கூறினார். இலங்கைக்கு உதவுவதற்காகவே நஷீத் அங்கு இருப்பதாக மாலத்தீவு பார்லிமென்ட் தெரிவித்தது. நாங்கள் மாலத்தீவு செல்வதாக வரும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். அப்படி என்றால் தங்கள் பாஸ்போர்ட் காபி நஷீத்திடம் எதற்கு வந்தது என பத்திரிகையாளர் அகமது அசான் கேள்வி எழுப்பி, நமல் ராஜபக்சே பாஸ்போர்ட் படத்தை பகிர்ந்தார். அதனையும் மறுத்துள்ள நமல் ராஜபக்சே, தான் யாரிடமும் பாஸ்போர்ட் காபி கொடுக்கவில்லை; தற்போது பயணத் தடையில் இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து